
RuPay cards ரூபே அட்டைகள் வெளிநாட்டு கடன் அட்டைகளான மாஸ்டர் கார்ட் விசா போன்றவையின் இந்திய நகல் ஆகும். ரூபே என்பது ரூபி (Rupee), பேமென்ட் (payment) என்பதன் சுருக்கம். இந்த உள்நாட்டு கட்டண அட்டையை National Payments Corporation of India (NPCA) என்னும் அமைப்பு மார்ச் 26 2012 அன்று தொடங்கியது. இது ஒரு புதிய பண வர்த்தனைக்கான எளிய இணைய வழி கட்டணம் செலுத்தும் திட்டம். வெளிநாட்டின் அட்டைகளே பயன்பாட்டில் இருந்ததற்கு மாற்றாக ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் NPCI செய்துள்ள அறிமுகமே ரூபே இந்திய கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள்.
இதன் முக்கிய குறிக்கோள்
இந்திய நுகர்வோர், வியாபாரிகள், நிதி நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இது தான் இந்தியாவின் முதல் உள்நாட்டு கடன்/கட்டண அட்டை மற்றும் பல்வேறு பண பரிவர்த்தனைகளை ஒருங்கிணைக்க ரிசர்வ் வங்கியின் உதவியுடன் இணையம் மூலம் கட்டணங்களை எளிமையாகவும், குறைந்த செலவிலும் அனைத்து இந்திய வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் செலுத்த மேற்கொள்ளப்பட்ட சாதனமாகும்.
நம் நாட்டிலும் பெருவாரியான மக்கள் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை செலவுகளுக்குப் பயன்படுத்துவதால் இந்த பரிவர்த்தனை மூலம் வரும் இலாபத்தை நம் நாடே அனுபவிக்க வேண்டும் என்று இந்திய அரசு இந்த புதிய அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வங்கியும் இந்த கடன் அட்டைகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்போது அவர்கள் மாஸ்டர் கார்ட், விசா (இரண்டும் வெவ்வேறு கார்டுகளாக வலம் வந்தாலும் அவை அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஒரே நிறுவனத்தின் இரு வேறு பெயரில் வரும் கடன் அட்டைகளே ஆகும்.) அட்டைகளில் நடக்கும் பண பரிவர்த்தனைகளுக்கு தனிப்பட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.
மாஸ்டர் கார்ட், விசா கார்டும் இந்திய சந்தைக்குத் தேவையானவை, முக்கியமானவை என்றாலும் தொலைநோக்குப் பார்வையுடன் அணுகும்போது நம் நாட்டில் அதே போல் ஒரு சாதனத்தை உருவாக்குவதால் வரும் வசதிகளும் பொருளாதார இலாபமும் அதிகம். இதை கணக்கில் கொண்டு ரூபே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கடன் அட்டையினால் வரும் வருவாயும் இலாபமும் வெளிநாட்டுக்குப் போகாமல் நம் நாட்டிலேயே தக்க வைத்துக் கொள்ள இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நம் நாட்டில் நகரப் பகுதிகளில் தான் அட்டையை அதிகம் பயன்படுத்தும் கலாச்சாரம் உள்ளது. கிராமப் பகுதிகளில் அந்தப் பழக்கம் இன்னும் அதிக அளவில் இல்லை. இந்த கவனிக்கப்படாத பெரிய சந்தை இந்திய அரசுக்கு ஓர் ஊற்றுக் கேணி போல. இதை வெளிநாட்டு வர்த்தகத்துக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்கான திட்டமே இந்த ரூபே கடன் அட்டை.
மாஸ்டர் கார்ட், விசா பெறுவதற்கு செய்யும் அதே வழி முறைகளை தான் இந்த அட்டை பெறுவதற்கும் பின்பற்றவேண்டும். முகவரி ப்ரூப், ஆதார் அட்டை, இரண்டு புகைப்படங்களுடன் கூட்டுறுவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சமர்ப்பித்து விண்ணப்பித்தால் இந்த அட்டை கிடைக்கும். இந்த அட்டையை இந்தியா முழுவதமும், வெளி நாடுகளிலும் பயன்படுத்த முடியும்.
ரூபே அட்டைக்கும் மாஸ்டர் கார்ட் விசா அட்டைகளுக்கும் உள்ள வேறுபாடு
1.பரிவர்த்தனை கட்டணம் (Processing fee)
மாஸ்டர் கார்ட், விசாக்கு பரிவர்த்தனை கட்டணம் அவை வெளிநாட்டில் நடைபெறுவதால் ரூபேவுக்கு ஆவதை விட சற்றே அதிகம். ரூபே அட்டைக்கான கட்டணம் வெளிநாட்டு அட்டைகளை விட 23% குறைவு. வியாபாரிகளுக்கும் Merchant Discount rate விசா மாஸ்டர்கார்டை விட ரூபெவில் குறைவு.
2.பாதுகாப்பு (security)
ரூபே அட்டைகள் மிகவும் பாதுகாப்பானவை. 256-bit encryption உடன் வருகிறது. OTP நம்முடைய கைப்பேசிக்கு வந்து அதன் பின்னே அதை பயன்படுத்தி நாம் பரிவர்த்தனையை முடிப்போம். மேலும் நம் தனிப்பட்ட விவரங்கள் வெளி நாட்டு நிறுவனங்களுக்குப் பரவாமல் நம் நாட்டின் உள்ளேயே இருக்கும்.
3.வழங்கப்படும் அட்டைகள் (cards offered)
தற்போது ரூபே டெபிட் அட்டை மட்டும் தான் வழங்குகிறது. ஆனால் வெகு விரைவில் கிரெடிட் கார்டும் ரூபெயில் வரும். விசா மற்றும் மாஸ்டர் கார்ட் டெபிட், கிரெடிட் இரண்டையும் வழங்குகிறது.
4. கட்டண அமைப்பு (Fee structure)
ரூபே அட்டைக்கும் மற்ற அட்டைகளுக்கும் கட்டண அமைப்பில் மாறுதல் உள்ளது. ரூபே அட்டைக்கு நுழைவுக் கட்டணத்தை வங்கிகள் செலுத்தத் தேவையில்லை. ஆனால் மற்ற அட்டைகளுக்கு நுழைவு கட்டணமும் செலுத்தவேண்டும். காலாண்டுக்கு ஒரு முறை அமைப்பில் தொடர்ந்து இருக்கவும் கட்டணம் செலுத்த வேண்டும்.
5.ரூபே அட்டையின் நன்மைகள் (Advantages of RuPay card)
ரூபே அட்டையை சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுடன் இணைக்க முடியும்.ரிசர்வ வங்கியுடன் சேர்ந்து செயல்படுவதால் ஒவ்வொரு வீட்டுக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டுமென முனையும் பிரதான் மந்திரி ஜன் தான் யோஜனா திட்டம் போன்றவை இதனால் எளிதாக செயல் படுத்தப்பட முடியும். அதே போல டிரெயின் முன் பதிவும் இந்த அட்டையின் மூலம் எளிதாக செய்ய முடியும்.(pre-paid card). இலவச காப்பீட்டு திட்டமும் இதனுடன் ஆறு மாதங்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
ரூபே அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் இருந்து இத்திட்டம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள கடன் அட்டைகளில் 40%அட்டைகள் ரூபே தான். பாயின்ட் ஆப் சேல் அதாவது விற்பனை கவுண்டரில் பயன்படுத்தப்பட்ட அளவில் ரூபே அட்டை ஏப்ரல் 2016ல் 38லட்சம் ரூபாயாக இருந்து மார்ச் 2017 இரண்டு கோடி எண்பத்தியோரு லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல அட்டையைப் பயன்படுத்தப்படும் எண்ணிக்கையும் ஏப்ரல் 2016ல் 27லட்சத்தில் இருந்து மார்ச் 2017ஆம் காலகட்டத்துள் ஒரு கோடி நாற்பத்தி மூன்று லட்சம் என உயர்ந்துள்ளது.
பண மதிப்பிழக்கத்தற்குப் பிறகு ரூபே அட்டையின் மூலம் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. பணமதிப்பழக்கத் திட்டம் சில அசௌகரியங்களை தந்திருந்தாலும் இந்தியா ஒரு நோட்டுகள் இல்லா டிஜிடல் பொருளாதார இலக்கை நோக்கிப் பீடு நடை போடுவதற்கு அது உதவியுள்ளது நிதர்சனம். இதனால் வங்கிக் கணக்குகளை சரியாகக் கையாளவும், நிதி தேவைகளை எளிதாக மக்கள் அடையவும், ஒளிவு மறைவின்றி கணக்கு வழக்குகள் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
அமெரிக்க மாஸ்டர் கார்ட் நிதி சேவை நிறுவனம் (US financial services corporation Mastercard) ஜூன் மாதத்தில் அமெரிக்க அரசிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டில் செயலபாட்டில் உள்ள கட்டண முறைகளை தேசியவாதம்/நாட்டுப்பற்று ஆகிய ஊக்குவிக்கிளைக் கொண்டு ஆதரிப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது. மோடி சமீப காலமாக ரூபேவின் வளர்ச்சிக்கு வழி செய்வதால் விசா மாஸ்டர் கார்டின் பலம் குறைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்தியாவின் நூறு கோடி டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளில் பாதி ரூபே கட்டண அமைப்பின் வழியாகப் போகிறது. அதனால் 30வருடங்களாக இத்துறையில் கொடிகட்டிப் பறந்த மாஸ்டர் கார்ட் போன்ற ஜாம்பவான்கள் புதிதாக முளைத்துள்ளப் போட்டியினால் (ரூபே தொடங்கி 6 வருடங்களே ஆகிறது) மிகப் பெரிய கட்டண அமைப்பையுடைய இந்திய சந்தையில் முன்னேற அதிக முயற்சிகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஏன் ரூபேவை ஊக்குவிக்க வேண்டும்?
2014ல் மோடி அவர்கள் அறிவித்த நிதி உள்ளடக்கிய திட்டத்தின்படி முதலில் வங்கிக் கணக்கு திறக்கும் அனைவருக்கும் ரூபே அட்டை வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டது, மாஸ்டர் கார்டோ விசாவோ அல்ல. அமெரிக்க நிறுவனங்கள் மோடியின் தேசிய கொள்கைகளால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புக்கு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
ரூபே அதிக சந்தை பங்கை ஊடுருவி பெற்று வருவதால் மாஸ்டர் கார்ட் நிறுவனம் தங்கள் கட்டணத் தொகையை குறைத்துள்ளது. மேலும் மோடி பரிவர்த்தனை கட்டணம் வெளிநாட்டுக்கு செல்லாமல் நம் நாட்டிலேயே இருத்தி வைத்துக் கொள்ள ரூபேவை ஊக்குவிக்க வேண்டும் என்று அந்த அட்டையை ஆதரிப்பதால் இப்பொழுது மாஸ்டர் கார்ட் தாங்கள் பெறும் பரிவர்த்தனை கட்டணத்தில் 15-20சதவிகிதம் மட்டுமே அவர்கள் தங்கள் நாட்டுக்கு எடுத்து செல்வதாகவும் மீதி தொகை இந்தியாவிலேயே வைத்து இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
ஆரோக்கியமான போட்டி
அட்டைகள் விநியோக்கிப்பட்ட எண்ணிக்கையில் நெ1 இடத்தில் ரூபே உள்ளது. அளவிலும் விலை மதிப்பிலும் (point of sale) நெ2 இடத்தில் உள்ளது. இத்தகவலை திலிப் அஸ்பே NPCI தலைமை நிர்வாக அதிகாரி மற்ற அதிகாரிகளிடம் ஏப்ரல் 20 அன்று நடந்த Civil Services Day அன்று தெரிவித்தார். மாஸ்டர் கார்ட் விசாவுக்கு அடுத்து நெ3ல் தற்போது ரூபே இருப்பதால் வெகு விரைவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து முதல் இடத்துக்கும் வர முடியும் என்று கூறியுள்ளார்.
மோடி இந்தக் கடன் அட்டை ரூபேவை பொது மக்கள் மத்தியில் ஆதரித்துப் பயன்படுத்த ஊக்குவித்து வருகிறார். இதை பயன்படுத்துவது நாட்டுக்கு சேவை செய்வது போல் ஏனென்றால் பரிவர்த்தனைக் கட்டணம் நாட்டுக்குள்ளேயே இருப்பதால் அவை சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட உதவும் என்று சொல்லியுள்ளார். 2015ல் தில்லியில் நடந்த Economics Conclaveல் மோடி பேசியபோது ரூபே அட்டையினால் உலக சந்தையில் சிலர் மட்டுமே கோலோச்சியிருந்த இடத்தில் ஆரோக்கியமான போட்டி உருவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
தேசிய உணர்வும் நாட்டில் வளமும் பெருக ஆவன செய்கிறார் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்.
~பல்லவி