sabarimala temple

ஒரு கோவிலை நிர்வகிக்கக்கூடிய சாஸ்திர நூல்கள், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட பெண்கள் கோவிலுக்குள்  நுழைவதைத் தடை செய்வது பெண்களுக்கும் பெண்ணியத்திற்கும் எதிரானது இல்லை என்ற உண்மையையும், மேலும் அந்த தடை அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பிரம்மச்சரிய நிலையால் உருவானது என்பதையும் நிரூபிக்குமேயானால், அந்த தடையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியே ஆகவேண்டும். ஏன்னெனில் அந்த முடிவு அரசியல் சாசனத்தை ஒத்தே இருக்கும் — J. Sai Deepak, Advocate — Delhi High Court.


informationகீழ்க்கண்ட பதிவு சாய் தீபக் அவர்கள் swarajyamag.com இணையத்தளத்தில் எழுதிய பதிவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது ஆகும். அவருடைய ஆங்கிலப்பதிவு Why The Sabarimala Case Is Different From That Of Triple Talaq Or Haji Ali Dargah வலைப்பக்கத்தில் உள்ளது.


திருமதி. ஷாயரா பானோ என்பவர், முஸ்லிம்களின் இடையே நிலவி வரும்  முத்தலாக் முறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் மனு [W.P(C).No.118/2016] தாக்கல் செய்திருந்தார். மே 18, 2017 அன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தவுடன் தீர்ப்பை நிலுவையில் வைத்தது உச்ச நீதிமன்றம். அந்த மனுவில் திருமதி பானோ, முஸ்லிம் தனிச்சட்டத்தில் உள்ள  தலாக்-ஏ-பிடத்,  நிக்கா-ஹலாலா மற்றும் பலதார மணம் ஆகிய பழக்கங்கள் சட்டவிரோதமானவை என்றும் அவை அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட ஆர்டிகிள் 14, 15, 21 மற்றும் 25 ஆகிய சட்ட விதிகளை மீறுபவை என்றும் அறிவிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

triple talaq verdict

உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவுடன் (S.M W.P. (C) No. 2/2015) சேர்த்து விசாரித்தது. இந்த வழக்கில் இடை-மனுதாரராக இருந்த அனைத்து இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் (AIMPLB – All India Muslim Personal Law Board) வாதங்களையும் கேட்டறிந்தது உச்ச நீதிமன்றம். நீதிமன்றத்தின் முன் இருக்கும் இந்த விவகாரம், முஸ்லீம் தனிச்சட்டத்துடன், எனவே இஸ்லாத்துடன்,  எக்காலத்திலும் பிரிக்க இயலாத தொடர்புடையது. இத்தகைய மத நம்பிக்கையிலும் தனிச்சட்டத்திலும்  உச்ச நீதிமன்றம் தலையிடுவதை அரசியல் சாசனம் தடை செய்கிறது என்ற நிலைப்பாட்டை எடுத்தது AIMPLB.

May 18ம் தேதி மாலை ராஜ்ய சபா தொலைக்காட்சியின் The Big Picture என்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு வந்திருந்தது.

அந்த விவாதத்தில் பங்கேற்ற சிலர் வெளிப்படுத்திய சில கருத்துக்கள்:

  1. மத நம்பிக்கைகள் மற்றும் தனிச்சட்டம் இரண்டும் நீதிமன்ற ஆய்விற்கும் அரசு தலையீட்டிற்கும் அப்பாற்பட்டவை
  2. மனிதனால் இயற்றப்பட்ட சட்டமான அரசியல் சாசனம் குரானின் வழியில் நிற்கக்கூடாது ஏனெனில் குரான் இறைவனின் வாக்கு
  3. தற்போது வழக்கில் இருக்கும் முத்தலாக் பயன்படுத்தும் முறை குரானில் சொல்லப்பட்ட உண்மையான முறையில் இல்லை, அதன் அசல் நோக்கத்தை திரித்து தற்போது வழக்கில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
  4. முஸ்லீம் சமுதாயத்தினரின் உணர்வுகளை நினைவில் கூர்ந்து, பெரும்பாலான முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்க வேண்டும்
  5. முஸ்லீம் சமூகம் படிப்படியாக தங்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம் கொடுக்கவேண்டும். ஒரே இரவில் மாற்றத்தை திணிக்க முடியாது

இந்த விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை பற்றி சற்று நேரத்தில் வருகிறேன். அந்த விவாத நிகழ்ச்சி முடிந்தவுடன், என்னுடன் பணி புரியும் என்னை நன்கறிந்த ஒருவர் “முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதை ஆதரிக்கும் அதே சமயத்தில்,  நீங்கள் சபரிமலை கோவில் வழக்கில், “நாங்கள் காத்திருக்க தயார்” (Ready to Wait) என்று கூறும் அய்யப்பனின் பெண் பக்தர்கள் சார்பாக ஆஜர் ஆகியதை எப்படி நியாயப்படுத்த முடியும்?” என்று கேட்டார்.

இந்த கேள்வியை நான் எதிர்பார்த்தது தான் என்பது ஒரு பக்கம் இருக்க,(இதை கேட்டு அதற்கான விடையையும் பெற வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை), நியாயமாக சுய அறிவோடு சிந்திக்கக்கூடிய, தனது நிலைப்பாட்டை  சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளாத ஒருவருக்கு, முத்தலாக் வழக்கிற்கும் சபரிமலை வழக்கிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இரண்டும் முற்றிலும் வெவ்வேறான பிரச்சனைகள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியும்.

இரு விவகாரத்தையும் ஒரே சாயம் கொண்டு பூசுவதற்கு முன் இவ்விரு வழக்குகளில் சட்டம் சார்ந்த நிலைப்பாட்டை தாண்டி, AIMPLB & Ready to Wait, இரு தரப்பினரும் எடுத்துள்ள முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஹாஜி அலி தர்கா வழக்கையும் இதனுடன் சேர்த்து விவாதிப்பது முக்கியம், ஏனெனில் முஸ்லீம் பெண்களின் ‘தர்காவிற்குள் நுழையும் உரிமை’ இந்த வழக்குடன் தொடர்புடையது. இவ்வழக்குகளில் சட்ட நிலைப்பாட்டை விவரித்து விட்டு உங்களுக்கு மூன்று விவகாரங்களையும்  ஒப்பிட்டு  காண்பிக்கிறேன்.

அரசியலமைப்பின் கீழ் எடுக்கப்பட்ட நிலைப்பாடு

constitution of india

அரசியலமைப்பின் Article 25 & 26 இரண்டயும் படித்த பிறகும் அவை இரண்டும் ஒன்றோடொன்று மோதும் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை படித்த பிறகும், Indiafacts.org என்ற இணையத்தில் அரசியலமைப்பின் கீழ் இந்துமத நிறுவனங்களின் உரிமைகள் பற்றி வந்துகொண்டிருக்கும்  எனது 6 பாகம் கொண்ட தொடர் கட்டுரைகளில் பின்வரும் சட்ட நிலைப்பாட்டை வடித்துள்ளேன்:

  1. அரசியலமைப்பின் கீழ், மத நம்பிக்கைகள் மற்றும் மதம் சார்ந்த பழக்க வழக்கங்கள் (மதத்திற்கு மிகவும் அத்தியவசியமான மற்றும் அடிப்படையான விஷயங்களை தவிர) அரச அல்லது நீதித்துறையின் தலையீட்டிற்கு அப்பாற்பட்டவையாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட தலையீடுகளும் அரசியலமைப்பின் வரம்புக்குள் தான் இருக்க வேண்டும்.
  2. இதை வேறு விதமாக கூறவேண்டுமென்றால் அரசியலமைப்பு, மதம் சார்ந்த சட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் வரம்பு, அச்சட்டம் எந்த வித பாகுபாடும் பாராமல் அரசியல் அமைப்பின் அடித்தளத்தை மீறும் வகையில் இருக்க கூடாது.
  3. எனவே, எந்த ஒரு சூழ்நிலையிலும், மத பழக்கவழக்கங்கள்/ மதம் சார்ந்த தனிச்சட்டங்கள் பாகுபாடு பார்க்கின்றனவா என்பதை அரசியல் அமைப்பின் வரையறைக்குள் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும்.
  4. இதன் அடிப்படையில், மதத்தின் ஒரு பழக்கவழக்கமோ தனிச்சட்டமோ அரசியலமைப்பின் வரம்புக்குள் இருக்கிறதா என்ற கருத்தை உருவாக்கிக்கொள்ளும் முன், நீதிமன்றம் அந்த பழக்கத்தை அல்லது சட்டத்தை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். அவற்றின் தோற்றத்ததையும், மதத்தின் சாஸ்திர நூல்களில் அவற்றிக்கு அடிப்படை இருக்கிறதா, அவை அந்த மத நம்பிக்கையின் மையமாக இருப்பவையா, அரசியலமைப்பிற்கு முரணாக இருக்கின்றனவா என்று நன்கு ஆராய வேண்டும்.
  5. இவ்வாறு சட்டப்படி ஒரு விரிவான ஆய்விற்குப் பிறகு தான், அரசியலமைப்பு நீதிமன்றம் மதம் சார்ந்த பழக்கம்/சட்டம் பற்றி தனது ஆய்வறிக்கையை கொடுக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட சட்டபூர்வ நிலைப்பாட்டின் வெளிப்பாடாக, எந்த ஒரு சமூகத்திற்கோ மத பிரிவினருக்கோ “அரசு எங்கள் மத நம்பிக்கைகளில்/ தனிச்சட்டத்தில் (அவை பாகுபாடு பார்ப்பதாகவும் காட்டுமிராண்டித்தனமாக இந்தாலும்)  தலையிட எந்த உரிமையும் இல்லை” என்ற நிலைப்பாட்டை எடுக்க அனுமதி இல்லை. என்னை பொறுத்த வரை இந்த நிலைப்பாடு, ஒரு மதத்தின் மையமாக இருக்கும் பழக்கவழக்கங்களுக்கும் (அவை பாகுப்பாடு பார்ப்பதாகவோ காட்டுமிராண்டித்தனமாகவோ இருந்தால்) சரிசமமாக பொருந்தும்.

உதாரணத்திற்கு, ஒரு மதத்தின்/நம்பிக்கையின் அடிப்படையே மற்ற மதங்களையும் நம்பிக்கைகளையும் வெறுப்பதே என்று இருக்கம் பட்சத்தில், அந்த நம்பிக்கை மதத்தின் அடிப்படை சாராம்சம்; இதில் தலையிட அரசிற்கு எந்த உரிமையும் இல்லை என்று அந்த நம்பிக்கையை/பழக்கத்தை காக்க முடியுமா? இருப்பினும், ஒரு சமூகத்திற்கோ மத பிரிவினருக்கோ, நீதிமன்றம் தன்னை ஒரு இரட்சகராகவோ அல்லது இறை தூதராகவோ நினைத்துக்கொள்ளாமல் தகவலறிந்து ஒரு நியாயமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று எதிர்பாப்பதற்கு முழு உரிமையும் இருக்கிறது.

முத்தலாக்,ஹாஜி அலி தர்கா மற்றும் சபரிமலை கோவில்: ஒப்பீடும் மறுபரிசீலனையும்

உச்சநீதிமன்றம் முத்தலாக் வழக்கில் தனது தீர்ப்பை இன்னும் வழங்கவில்லை என்பதால், முஸ்லீம் தனிச்சட்டம் நீதித்துறையின் மறுஆய்வுக்கும் அரசு தலையீட்டிற்கும் அப்பாற்பட்டவை என்று AIMPLB எடுத்த நிலைப்பாட்டிற்கு எந்த வித  சட்டரீதியான அடிப்படையும் இல்லை என்று திட்டவட்டமாக கூறமுடியும். முத்தலாக் இஸ்லாம் மதத்தின் இன்றியமையாத கோட்பாடில்லை, அந்த பழக்கம் பெண்களுக்கு எதிரான பாகுபாடுடையது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வருமேயானால், முத்தலாக் அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று அதை முற்றிலும் தடை செய்ய உச்சநீதிமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்பின்  Article 13 படி முழு அதிகாரம் இருக்கிறது. இதில் சுவாரசியமான செய்தி என்னவென்றால், ஒரு வேளை உச்ச நீதிமன்றம் முத்தலாக் இஸ்லாம் மதத்தின் இன்றியமையாத பழக்கம் என்ற முடிவுக்கு வந்தால், அதை நீதிமன்றம் எவ்வாறு அணுகும் என்று பார்க்கவேண்டும்.

haji ali dargah

ஹாஜி அலி தர்கா வழக்கைப் பொறுத்தவரை, தர்கா அறக்கட்டளை நிர்வாகிகள் பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு முன் பின்வரும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்தனர்:

“பெண்களை ஒரு முஸ்லீம் துறவியின் சமாதிக்கு மிக அருகில் அனுமதிப்பது இஸ்லாமில் மன்னிக்கமுடியாத பாவம் என்பதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். அதுமட்டுமின்றி அறக்கட்டளை அரசியலமைப்பால் குறிப்பாக Article 26 படி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம், அறக்கட்டளை தனது மதம் சார்ந்த  விவகாரங்களை  நிர்வகிக்கும் அடிப்படை உரிமையை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் மூன்றாம் நபரின் தலையீடு அவசியமற்றது.

தற்போது இருக்கும் ஏற்பாடு,பிரார்த்தனை செலுத்த பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது.  பெண்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரகள் கல்லறைக்கு எவ்வளவு அருகில் செல்ல இயலுமோ அவ்வளவு அருகில் செல்வதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. ஆண்களின் கூட்டநெரிசலை கருத்தில் கொண்டு பெண் யாத்ரிகர்களே இந்த ஏற்பாட்டை வரவேற்றுள்ளனர்.

எனவே, இதற்கு முன் கல்லறைக்கு அருகில் பெண்கள் அனுமதிக்கப்படவே இல்லை.  தற்போதய ஏற்பாடு அவர்களை முந்தய காலத்தில் இருந்ததை விட கல்லறைக்கு மிக அருகில் அனுமதிக்கிறது என்ற ஒருமித்த கருத்தை அறக்கட்டளை நிர்வாகிகள் கொண்டுள்ளோம்.”

மேலும் தர்கா அறக்கட்டளை சார்பில் பின்வருமாறு கூறி “இஸ்லாமில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் அசுத்தத்தன்மை  உடையவர்களாக கருதப்படுகிறது. எனவே அவரகள் பிரார்த்தனை செலுத்தவோ தர்கா/மசூதிக்கு செல்லவோ இயலாது. மேலும் இஸ்லாம், பெண்கள்/பெண் குழந்தைகளை சமூகத்தில்/பொது இடங்களில் ஆண்கள்/சிறுவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும்  விவகாரத்தைப்பற்றி குறிப்பிடுகிறது.”  இதற்கு ஆதரவாக சில குரான் வாசகங்களையும் ஹதீத்துகளையும் மேற்கோள் காட்டினர்.

மேலும், தர்கா அறக்கட்டளை, “பெண்களை தர்கா கருவறைக்குள் செல்வதை தடை செய்யும் செயல் ‘இஸ்லாமின் அத்தியாவசியமானதும் அடிப்படையுமான’ ஒன்று. இந்த தடையை அரசியலமைப்பின் Article 26 (b) “மதம் சார்ந்த விஷயங்கள்” என்று அனுமதித்து பாதுகாக்கவும் செய்கிறது. எனவே அறக்கட்டளையை பொறுத்த வரை, பெண்களை கருவறைக்குள் அனுமதித்தால், மதத்தின் அடிப்படையான இயல்பே மாறிவிடும்.” என்று வாதம் செய்தது.

எனினும் உயர்நீதிமன்றம், அறக்கட்டளை சார்பில் சுட்டிக்காட்டிய குரான்/ஹதீத் வாசகங்கள் பெண்கள் கல்லறைக்கு எவ்வளவு அருகில் சென்றால் பாவம் உண்டாக்கும் என்று தெளிவாக கூறவில்லை என்ற கருத்தை கூறியது. இதோடு, பெண்களின் அனுமதியை தடை செய்ய எந்த வழக்கமும் இதுற்கு முன் இருக்கவில்லை, இன்னும் சொல்லப்போனால் 2012  வரை பெண்கள் தர்காவின் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். எனவே அறக்கட்டளை நிர்வாகிகள் “மதம் சார்ந்த விஷயம்” என்ற போர்வையில் பெண்களுக்கு இழைத்த பாகுபாட்டை நியாயப்படுத்த எந்த உரிமையும் இல்லை என்று அறிவித்தது.

மிக முக்கியமாக Article 26 படி, தனது உரிமைகளை வலியுறுத்த அறக்கட்டளை ஒரு “மத பிரிவு” என்ற தகுதியை பெறவில்லை. எனவே, இந்த வழக்கின் முடிவு,  தனது நிலைப்பாட்டிற்கு  குரான், ஹதீத் அல்லது பண்டைய பழக்கவழக்கங்களை தனக்கு ஆதரவாக நிலைநிறுத்த தவறிய   அறக்கட்டளையின் இயலாமையோடு நேரடியாக தொடர்புடையது. Oct 24, 2016 அன்று தர்கா அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘சிறப்பு விடுப்பு மனு’வில்  இதற்கு முன் இருந்த நிலையை, அதாவது பெண்களை கருவறைக்குள் அனுமதித்த 2012 வரை இருந்த நிலையை, தொடர்வதாக  அறிவித்தனர்.

இப்போது சபரிமலை வழக்கிற்கு வருவோம். நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன், உச்ச நீதிமன்றம் பின்வரும் இரு கேள்விகளையும் ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது:

  1. குறிப்பிட்ட வயதில் உள்ள பெண்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதித்த செயல் அந்த கோவிலின் வரலாறு மற்றும் மரபில் வேரூன்றி உள்ளதா?
  2. அந்த தடையை ஆதரிக்கும் வரலாறும் மரபும் அடிப்படையிலேயே பெண்ணியத்திற்கும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு பார்ப்பதாகவும் இருக்கின்றனவா?

sabarimala temple

ஒரு கோவிலை நிர்வகிக்கக்கூடிய சாஸ்திர நூல்கள், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட பெண்கள் கோவிலுக்குள்  நுழைவதைத் தடை செய்வது பெண்களுக்கும் பெண்ணியத்திற்கும் எதிரானது இல்லை என்ற உண்மையையும், மேலும் அந்த தடை அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பிரம்மச்சரிய நிலையால் உருவானது என்பதையும் நிரூபிக்குமேயானால், அந்த தடையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியே ஆகவேண்டும். ஏன்னெனில் அந்த முடிவு அரசியல் சாசனத்தை ஒத்தே இருக்கும். இதுவே, உச்சநீதிமன்றத்தின் முன் Ready to Wait தரப்பின் சார்பில் தொகுத்து வழங்கிய எனது வாதம். ஏதிர்பார்த்தவாறே, AIMPLB போல் இல்லாமல், மத நம்பிக்கைகள் நீதித்துறையின் ஆய்விற்கு அப்பாற்பட்டவை என்ற எனது வாதத்தை  எதிர்த்து  நீதிமன்றத்தில் யாரும் மறுத்து வாதிடவில்லை.

எனவே, சபரிமலை வழக்கில், காரணத்தோடு நியாயமாக, அனைத்து தரப்பையும் சமமாக மதித்து,  நுட்பமாக எடுக்கப்பட்ட இந்த நிலைப்பாட்டை (1991  இல் கேரள உயர்நீதிமன்றத்தின் தனிப்பிரிவு அமர்வு மன்றம் உறுதிப்படுத்தி  ஆதரித்த நிலைப்பாடு)  தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் ஹாஜி அலி வழக்குடனோ முத்தலாக் வழக்குடனோ ஒப்பிட்டு பார்க்க முடியாது . அது சரியான ஒப்பீடும் அல்ல.

இறுதியாக நான் சொல்ல விரும்பவுது ஒன்று தான், வெவ்வேறு வழக்குகள்/விவகாரங்களுக்கு இடையே இருக்கும் நுட்பமான, முக்கியமான வேறுபாடுகளை கண்டறிவது நிதர்சனத்தில் கம்ப சூத்திரம் அல்ல. எனினும், உண்மைகளை  எந்த பாகுபாடுமின்றி முன்கூட்டியே கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளாமல்  காது கொடுத்து யார் உள்வாங்கிக்கொள்கிறாரோ அவரிடமே புரிதலையும் மாற்றத்தையும் உருவாக்க இயலும். அதை விடுத்தது எதையும் காதுகொடுத்து கேளாமல், சிறிதும் சிந்திக்காமல் இடது சாரிகளின் “வகுப்பு வெறுப்பு,  பெண்வெறுப்பு, ஆணாதிக்கம்” போன்ற அற்பமான பிரச்சாரங்களில் ஈடுபடுவோருக்கு உண்மைகளும் காரணங்களும் தேவையற்றவை, அவற்றை பொருட்படுத்தவும் மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.