
சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கிடையே ஒரு மலையின் உச்சியில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. மலைகளும் காடுகளும் சூழ்ந்த சபரிமலையில் ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம்.
இக்கோவிலுக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரியப் பருவத்தில் இருக்கும் பெண்கள் இங்கு வருவதை தடை செய்யப்பட்டதாலும் மேலும் இதர பல காரணங்களாலும் பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே.
மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (நவம்பர் 15 – டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கு அன்றும் (சனவரி 14- “மகர சங்கராந்தி”) மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.
கோடிக்கணக்கான இந்துக்கள் ஒவ்வொரு வருடமும் நேர்த்தியாக ஒரு மண்டலம் விரதம் இருந்து கடுமையான பாதையில் ஏறி சபரிமலைக்குச் சென்று பகவான் ஐயப்பனைத் தரிசனம் செய்து வருகின்றனர். வருடா வருடம் சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது.
சபரிமலையின் வரலாறு பழம்பெருமை வாய்ந்தது. கலியுகத் தெய்வமாகப் போற்றப்படும் ஐயப்பன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மக்களுக்கும், தொல்லைகளும் துன்பங்களும் கொடுத்துக்கொண்டிருந்த மகிஷி என்னும் அரக்கியை அழிப்பதற்காக, சிவனுக்கும் மோஹினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர். மகிக்ஷி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவரால் தான் தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தவள். அதனால்தான் விஷ்ணு மோகினி அவதாரம் கொண்டு அவருக்கும் சிவனுக்கும் ஐயப்பன் பிறந்தார். அவ்வாறு பிறந்து பின்னர் பந்தள ராஜாவின் மகனாக வளர்ந்து மகிஷியை அழித்தார். தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறிய பிறகு தெய்வமாக மாறி, நைஷ்டிக பிரம்மச்சாரியாக யோக நிலையில் சின் முத்திரையுடன் சபரிமலையில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மகிஷி சாபவிமோசனம் அடைந்து ஐயப்பனை மணம்புரியும் விருப்பத்தைக் கூற, தான் பிரம்மச்சரிய நிஷ்டையில் இருப்பதால் தன்னால் மணமுடிக்க இயலாது என்றும், என்னுடைய யோக நிஷ்டைக் கலையும்போது நான் உன்னை ஏற்றுகொள்வேன் என்றும் கூறி, தனக்கு அருகே மாளிகைபுரத்து அம்மனாக இருந்து மக்களுக்கு அருள்புரியலாம் என்று அனுக்கிரகம் செய்தார். மேலும், எந்த ஆண்டு கன்னிச்சாமி (முதல்வருடம் மாலை அணிந்து சபரிமலை வருபவர்கள்) யாரும் என்னைத் தரிசிக்க வரவில்லையோ, அந்த வருடம் உன்னை மணந்துகொள்கிறேன் என்று அவர் அம்மனுக்கு வாக்குக் கொடுத்ததாக ஐதீகம். அவ்வாறு முதல் வருடம் கன்னிச்சாமியாக வருபவர்கள் கையில் சரம் (மரத்தினால் ஆன குச்சி) எடுத்து வந்து “சரம் குத்தி” என்கிற இடத்தில் குத்திவிட்டு மலைக் கோவிலுக்குச் செல்வர். மாளிகைபுரத்து அம்மன் சரங்குத்தி வந்து கன்னிச்சாமி யாரும் வராமல் இருக்கிறார்களா என்று பார்த்துப் போவதாக நம்பப்படுகிறது. இது கோவிலின் வரலாறு.
மேற்கண்ட வரலாற்றின் பின்னணியில், கோவில் கட்டப்பட்டதிலிருந்து, சபரிமலை யாத்திரைக்குப் பெண்களை அனுமதிக்காத ஒரு வழக்கம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை மட்டும் அனுமதிப்பதில்லை. சிறுமிகளும், வயதான பெண்மணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல், சபரிமலை யாத்திரைக்கு ஒரு மண்டலம், அதாவது ஆறு வாரங்கள், விரதம் இருக்க வேண்டியது சம்பிரதாயமாக இருப்பதால், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு 42 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்கிற காரணத்தாலும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.
பலவிதமான ஆகமங்கள், ஆச்சாரங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் ஹிந்து மதத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தில், இப்படி ஒரு விதி இருப்பதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. இக்கோவிலில் சிறுமிகளும், வயதான பெண்மணிகளும் அனுமதிக்கப்படுவதால், இதைப் பாலின அடிப்படையிலான பாகுபாடு என்றும் கூற முடியாது.
நாடெங்கும் உள்ள மற்ற ஐயப்பன் கோவில்களில் எல்லா வயதுப் பெண்மணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் அவருடைய வரலாற்றுடன் ஒன்றியிருப்பதாலும், அவர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக விரதம் பூண்டு யோக நிலையில் இருப்பதாலும், அங்கே இந்தக் கட்டுப்பாடு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் முறையாக விரதம் இருந்து வந்து வழிபடலாம். இப்படி ஜாதி, மத மற்றும் எந்தவிதமான அடிப்படையிலும் வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் அனுமதிக்கும் ஒரு புண்ணியத்தலத்தில் பாலின அடிப்படையில் வேறுபாடு பார்க்கப்படுவதாகச் சொல்வது விஷமிகளின் சதிப்பிரச்சாரம் அன்றி வேறில்லை. அப்படியே அவர்கள் சொல்வது போல், பாலின அடிப்படையில் வேண்டுமென்றே அனுமதி மறுக்கிறார்கள் என்றால் சிறுமிகளையும் வயதான பெண்மணிகளையும் அனுமதித்திருக்க மாட்டார்கள்.
2016ல் The India Young Lawyers Association என்பவர்கள் பப்ளிக் இண்டரஸ்ட் லிடிகேஷனை (PIL) உச்ச நீதி மன்றத்தில் பதிவு செய்தார்கள். இதை Rule 3(b) of the Kerala Hindu Places of Public Worship (Authorisation of Entry) Rules 1965 கீழ் பதிவு செய்தார்கள். இதன்படி பெண்களை கோவிலினுள் நுழைவதை தடுப்பது அல்லது விலக்கி வைப்பது இந்திய சாசனப்படி ஒரு குடிமகளுக்கு உள்ள சம உரிமையை பறிக்கிறது என்று வழக்குத் தொடுத்தனர்.
பெண்கள் மீதான இத்தடைக்கும் இந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவரை கர்ப்பக்கிரகத்தில் நுழையத்தான் தடை விதிக்கலாமே தவிர பாலின அடிப்படையில் கோயிலுக்குள் நுழையவே தடை விதிக்க முடியாது. ஆகையால் கேரளாவின் தடை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இத்தடையை நீக்கி சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கேரளாவில் 2007-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அப்போதைய இடதுசாரிய அரசு, சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க ஆட்சேபனை இல்லை என தெரிவித்தது. ஆனால், அதன்பிறகு ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள இடதுசாரி அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
கேரள அரசு தன்னுடைய தற்போதைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கேட்டதற்கு, அரசு பின்வருமாறு தன்னுடைய பதில் மனுவை சமர்ப்பித்துள்ளது:
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்குத் தடை என்பது மதரீதியான பிரச்சினை. பக்தர்களின் வழிபாட்டு உரிமையைக் காப்பாற்றுவது ஒரு அரசின் கடமையாகும். 2007 ஆம் ஆண்டு முந்தைய கம்யூனிஸ்ட் அரசு, பெண்களும் சபரிமலை கோவிலுக்குச் சென்று வழிபடலாம் என்று அளித்திருந்த மனுவையும் திரும்பப் பெறுகிறோம்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலை நிர்வகிப்பது திருவிதாங்கூர் தேவஸ்தானம். இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இந்த தேவஸ்தானம் 1949ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மஹாராஜா இந்திய அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகிறது. இதன்படி கோவில் வழிபாட்டு முறைகளை நிர்ணயிக்கும் உரிமை தேவஸ்தானத்திற்கு உள்ளது. இது பல கோடி பக்தர்களின் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயமாக இருப்பதால் இந்த பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
உச்ச நீதி மன்றத்தில் இவ்வழக்கு விஷயமாக கடைசி ஹியரிங்குகள் நடைபெற்று வருகின்றன. சபரிமலை மேல் வழக்குத் தொடுத்தவர்கள் பெண்களை உள்ளே அனுமதிக்காதது இந்திய ஆரசியல் சாசனப் படி இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்பதற்கு எதிராக அமைந்துள்ளது என்றும், பெண்களுக்குரிய மரியாதையை கொடுக்கவில்லை அவர்களுக்கான உரிமையைகொடுக்கவில்லை என்று வாதாடி இருக்கிறார்கள்.
ஜூலை 26 J. சாய் தீபக் என்னும் வழக்கறிஞர் சபரிமலை வழக்கத்துக்குப் பரிந்தும் பெண்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வழக்கைத் தொடுத்தவர்களுக்கு எதிராகவும் பிரமாதமாக வாதாடினார். அவர் ‘People for Dharma’, என்னும் இயக்கத்திற்காக அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்.
Article 25(1),26 விதிகளின் படி வழிபடுபவர் உரிமைகளை பற்றி தான் இங்கே கோவிலுக்கு எதிராகப் பேசியவர்களும் ஆதரவாகப் பேசியவர்களும் வாதாடினார்கள் அதாவது ஒருவரை கோவில் வழிபாட்டில் இருந்து விலக்க முடியுமா முடியாதா என்று. ஆனால் யாரும் அதே விதிகளின் படி இறை மூர்த்திக்குள்ள உரிமை பற்றி இங்கே யாரும் பேசவில்லை என்று சொன்னார்.
மூர்த்திக்கும் ஒரு சட்டப்பூர்வமான பிரஜை (juristical) என்னும் தகுதி உள்ளதாக அவர் பல உச்ச நீதி மன்றம் மற்றும் Privy Council ஜட்ஜ்மெண்டுகளை மேற்கோள் காட்டி அதே Articles 21, 25(1), and 26 படி அவருக்கான உரிமையைப் பற்றி பேச ஆரம்பித்தார் வழக்கறிஞர் சாய் தீபக்.
ஐயப்பன் நைஷ்டிக பிரமச்சாரி என்னும் தர்மத்தை நிலைநாட்டிக்கொள்ள அத்தனை உரிமைகளும் 25(1) ஆர்டிகள் மூலம் உள்ளது என்று கூறினார். அதனால் ஆர்டிகள் 21 மூலம் பிரமச்சரியத்தைக் காப்பாற்றிக்கொள்ள தனக்குகந்த வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள அவருக்கு உரிமையுள்ளது என்றார். பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிக்க அவர் விரதம் பூண்டிருக்கிறார். அதை அவர் காப்பாற்றிக் கொள்ள கோவில் சில சட்ட திட்டங்களை Article 26(b) மூலம் ஏற்படுத்தி அமைத்திருக்கிறது என்றார்.
அதனால் வழக்கைத் தொடுத்தவர்கள் Article 25(1) மூலம் வழிபடுபவர் உரிமை வழிபடும் தெய்வத்தின் உரிமையை விட உயர்ந்தது என்றோ இது நாள் வரை மற்ற பக்தர்களும் கோவிலும் பின்பற்றி வரும் சம்பிரதாயங்களை விட உயர்ந்தது என்றோ எடுத்துக் கொள்ள முடியாது, முக்கியமாக தான் இறைவன் என்று நினைத்து பூஜித்து வழிபடும் தெய்வத்தின் உரிமையை மதிக்காமல் தன் உரிமை தான் பெரியது என்று எப்படி சொல்ல முடியும் என்று வாதாடினார்.
இங்கே பிரச்சினை “temple vs women அல்லது “men vs women” இல்லை, ஆனால் “men v men” and “women vs women”. சபரிமலைக்குள் மாதவிடாய் வயதுப் பெண்களை அனுமதிக்கலாம் என்றால் 41 நாட்கள் விரதம் அனுஷ்டிக்காத ஆண்களையும் அனுமதிக்கலாம், அதே போல் ஓர் இந்து விநாயகருக்கு கோழி படைக்க வேண்டும் என்றாலும் அதே Article 25(1) மூலம் அனுமதிக்க வேண்டும் என்ன கேட்டாலும் அனுமதிக்க முடியும் என்றார்.
கோவிலின் சம்பிரதாயங்களை வழி முறைகளை Article 26ன் படி கடைப்பிடிக்க வேண்டும் என்று சாயி வாதாடியபோது நீதிபதி ஐயப்பப் பக்தர்கள் ஒரு தனி பக்தர்கள் என்று எப்படி சொல்ல முடியும் என்று கேட்டார் (how Ayyappa devotees constituted a religious denomination when there was no specific “Ayyappa sect). அதற்கு சாயி, நீதி மன்றத்தால் அந்தத் தகுதி வழங்கப்படுவதில்லை. அது சமுதாயத்தில், சமூகத்தில் தானாக ஏற்படுகிறது என்றார். ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் மேல் வைத்திருக்கும் பக்தி தனிப்பட்ட பக்தி, அவர்கள் அந்த பக்தியை காட்ட வழிபடும் முறையும் தனித்துவம் வாய்ந்தது. அதனால் அது தனி மதமாக நினைக்கும் அளவுக்கு தனித்துவம் பெற்றுள்ளது (religious denomination) என்று கூறினார்.
ஐயப்ப பக்தர்களில் இந்து மதம் அல்லாத பிற மதங்களை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்களே அப்படி இருந்தும் அவர்களை தனி religious denominationஆக கருத முடியுமா என்று கேட்டார் நீதிபதி. அதற்கு சாய் தீபக், இந்து மதம் பிற மதங்களை விட மாறுபட்டது. கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை போல் இல்லை இந்து மதம் என்றார். மாதவிடாய் வரும் பெண்களைக் கொச்சைப் படுத்தி அவர்களை விலக்கி வைக்கவில்லை, ஐயப்பன் தன் பிரம்மச்சரிய விரதத்தை காக்க முற்படவதால் இவர்கள் உள்ளே வர அனுமதியில்லை. அதனால் பின்னது தான் முன்னதை செய்வதற்குக் காரணம் என்றார். பல மத நூல்களில் இருந்து ஐயப்பனின் பிரம்மச்சரிய விரதம் பற்றிய தரவுகளை நீதிபதிக்கு எடுத்துக் காட்டினார்.
தவறான பாகுபாடு (discrimination) என்னும் குற்றச்சாட்டு எல்லா பெண்களையும் விலக்கி வைத்திருந்தால் எடுபடும் ஆனால் இங்கே எல்லா பெண்களையும் விலக்கி வைக்கவில்லை, அதே போல மாதவிடாய் அசுத்தம் என்றோ பெண் மீது வெறுப்பு என்றோ அவர்களை விலக்கி வைக்கவில்லை, ஐயப்பனின் பிரம்மச்சரிய விரதத்துக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்றே மாதவிடாய் வரும் வயது பெண்களுக்கு அனுமதியில்லை என்று வாதம் செய்தார்.
கோவில் Consolidated Fund of India மூலம் தான் நிர்வாகம் செய்யப்படுகிறது என்று குற்றச்சாட்டுக்கு 1922திருவாங்கூர் மகாராஜா கோவிலின் நிலங்களை எடுத்துக் கொண்டதால் வருடத்திற்கு 16லட்சம் ரூபாய் கோவில் நிர்வாகத்துக்காக அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை மேற்கோள் காட்டினார். மன்னராட்சியை இந்திய அரசு ஒழித்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்த பின் அந்த மன்னர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்கை சொத்துக்களை பறிமுதல் செய்த அரசு தான் மன்னர் செய்ய வேண்டிய கடமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டினார். அதனால் அது இந்திய அரசின் பணத்தில் அக்கோவில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது என்கிற வாதமும் தவறு என்று உறுதிப் படுத்தினார்.
சாயிக்கு வாதாட 15 நிமிடங்களே ஓதுக்கப்பட்டிருந்தாலும் வாதாடிய அற்புதமான முறையைக் கண்டு ஒரு மணி முப்பது நிமிடநங்களுக்கும் மேல் அவர் வாதாடியதை நீதிபதி அனுமதித்தார். நீதிபதி நாரிமான், சாயி தீபக்கின் உரை தகவல் நிறைந்ததாகவும், ஈர்த்து கவனிக்க வைப்பதாகவும், ஆழ மனத்தில் பதிவதாகவும் இருந்தது என்று கூறினார். அவரின் சொல்லாட்சியையும் தர்க்க வாதத் திறமையையும் நேரடியாக பாராட்டினார்.
இவருக்கு முன் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் இந்திய அடர்னி ஜெனரல் பத்மவிபூஷன் பராசரன், நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் முன்வைத்த வாதங்கள் மிகவும் போற்றத்தக்கவையாக இருந்தன.
நன்கு படித்தவர்கள் நிறைந்த மாநிலம் கேரளம். இங்கு 96 சதவீத பெண்கள் படித்தவர்கள். சுதந்திரமாக செயல்படக் கூடியவர்கள். சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படாததை ‘சதி’யோடு தொடர்புபடுத்தக்கூடாது. இந்து நம்பிக்கைக்கும் சதிக்கும் தொடர்பு கிடையாது. சதி பழக்கமே இந்து மத பழக்கமும் அல்ல என்றார். தசரதன் இறந்த போதும் பாண்டு இறந்த போதும் தசரதன் மனைவிகளும் குந்தியும் தீக்குளிக்கவில்லை என்றார். ஆணாதிக்கம் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதும் தவறு.
சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. அவர் தனித்துவம் வாய்ந்தவர். கடவுளே கோயிலுக்குள் இந்த வயதுடைய பெண்கள் வருவதை விரும்பவில்லை. பிறகு நாம் எப்படி அனுமதிக்க முடியும்? ஐயப்பனின் நைஷ்டிக பிரம்மச்சரிய விரதமும் அரசியலமைப்பினால் காப்பாற்றப்படுகிறது என்றார்.
இந்து மதத்தில் சகிப்புத்தன்மை அதிகம். இங்கு பாலினப் பாகுபாடும் கிடையாது. இது கோயிலின் புனிதத்தன்மையை காப்பதற்காக தொன்றுதொட்டு வரும் நிகழ்வாகும். சபரிமலைக்கு ஆண்கள் தங்களது தாய், மகள், சகோதரி என எவரையும் அழைத்துவரும் உரிமை உள்ளது. ஆனால் வயதுதான் 50-க்கு அதிகமாகவும், பத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். விரத காலங்களில் பிரம்மச்சர்யம் மேற்கொள்ள வேண்டும்.
… என்ற பராசரன் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகள் 26(பி), 25(2), 17 ஆகியவற்றையும் மேற்கோள்காட்டி நீண்ட வாதம் செய்தார்.
சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என ஒலிப்பது பாரம்பரியத்தின் குரல்கள். அரசியலமைப்பு சட்டம் 14-க்கு இணையாக ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்த அர்த்தநாதீஸ்வரராக சிவன் காட்சியளிக்கும் மதம் இந்து மதம். சிவன் பிரம்மச்சாரி அல்ல. அவர் யோகத்தில் இருந்தபோது நித்திரையை கலைத்த மன்மதனை எரித்தார். இதேபோல் இங்கு ஒவ்வொன்றும் ஆன்மிக ரீதியிலானவை” என மத நம்பிக்கைகளை முன்வைத்தது அவரது வாதம்.
சரியான கேள்வி கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும் என்றார். தவறான கேள்வி கேட்டால் தவறான பதில் தான் கிடைக்கும். நான் கடவுளை தியானம் செய்யும்போது புகை பிடிக்கலாமா என்று கேட்டால் ‘கூடாது’ என்று தான் பதில் வரும் ஆனால் நான் புகைப் பிடிக்கும்போது கடவுளை தியானம் செய்யலாமா என்றால் ‘ஆகா செய்யலாமே’ என்று தான் பதில் கிடைக்கும். அதனால் இந்த வழக்கில் சரியான விடை கிடைக்க சரியான கேள்வி கேட்க வேண்டியது அவசியம் ஆகிறது என்றார்.
மேலும் இந்த வழக்கில் தான் சொல்லும் வாதங்கள் மிகவும் யோசித்து சரியாக வைக்க வேண்டியது மிக முக்கியம் ஏனெனில் நீதிபதியைத் தவிர இறைவனுக்கும் தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது என்றார். ஜனநாயகம் மத நம்பிக்கைகளையும், சம்பிரதாயங்களையும் காப்பாற்ற வேண்டிய கடமையை கொண்டுள்ளது. விதுர நீதியில் இருந்து மேற்கோள்கள் காட்டினார். நீதிமன்றம் சமூக ஆர்வலர்களின் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டும் அதே சமயம் பாரம்பரிய வழக்கங்களை காப்பாற்றவும் ஆவன செய்ய வேண்டும் என்றார் பராசரன்.
நம் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சட்ட திட்டங்கள் பிரம்மா என்றால், அவற்றை செயல்படுத்துவது விஷ்ணு, சிவனே நீதித் துறை, சிவனின் அர்த்தநாரீசுவரர் தோற்றமே ஆண் பெண் இருவரும் சமம் என்பதை நிரூபிக்கிறது என்றார். (Article 14). சிவன் பிரம்மச்சாரி இல்லை. ஆனால் அவர் தவத்தில் இருக்கும்போது காமன் தொந்தரவு செய்தபோது தன் தவ நிலையை உணராமல் காமக் கணைகளைத் தொடுத்ததற்காக காமனை நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்து விட்டார்.
நம் முன்னோர்களுக்கு ஒன்றும் தெரியாது நமக்கு தான் நிறைய தெரியும் என்று நினைத்து நாம் நம் செயல்பாடுகளை நடத்தக் கூடாது என்றார்.
ஐம்பது வயதிற்குள் சில பெண்கள் இறந்து விடலாம் என்று வழக்குத் தொடுத்தவர்களின் வாதம் சரியில்லை என்றார். ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவர் விதிப்படி நடக்கும், அதை ஒரு காரணமாக வைத்து இப்பழக்கத்தை மாற்ற முடியாது என்று வாதிட்டார். நிறைய பேர் படி பூஜைக்கு பணம் கட்டியுள்ளார்கள். காத்திருப்பு நேரம் பல வருடங்கள் வரை போகின்றன. சிலரின் வேண்டுதல் அவர்கள் இறந்த பிறகு தான் நிறைவேற்றப்படும், அதனால் மரணத்தை ஒரு காரணமாக வைத்து இந்த வழக்கத்தை மாற்ற முடியாது என்றார்.
பெண்களை கோவிலில் அனுமதிக்காமல் இருப்பது பெண் மீது வெறுப்பினால் அல்ல, சபரிமலைவாசன் பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதால் மட்டுமே. அங்கு வரும் பக்தர்களும் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்து தான் வரவேண்டும் என்பதும் வழிபாட்டு முறையாதலால் பெண்களை அனுமதிப்பது அறிவுடைமை ஆகாது என்றார்.
நைஷ்டிக பிரம்மச்சரியம் என்றால் என்ன என்பதை சுந்தர காண்டத்தில் இருந்து மேற்கோள் காட்டினார் மூத்த வழக்கறிஞர் பராசரன். ஐயப்பன் யோகி என்பதால் ஆதி சங்கரரையும் மேற்கோள் காட்டினார். இந்து தர்மத்தில் பெண் என்றுமே போற்றப்படுகிறாள். ஆண் பெண்ணை மதிப்புடன் வைப்பதில் தான் அவனின் நற்தன்மை விளங்குகிறது என்கிறது சாஸ்திரம் என்றுரைத்தார். Article 25(2)(b) சமூக சீர்திருத்ததிற்கு தான் ஒப்பும் சமய/மத விஷயங்களுக்கு அச்சட்டத்தைப் பொருத்த முடியாது என்று வாதிட்டார்.
நீதிபதி நாரிமான் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்கள் Article 25(2) கீழ் தானே பாதுகாக்கப்படுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு பராசரன் இல்லை பெண்கள் என்று தனியாக அந்த சட்டம் சொல்லவில்லை, அச்சமூகத்தை சார்ந்த அனைவருக்கும் அந்தச் சட்டம் பாதுகாப்பு அளிப்பதாக கூறினார்.
இவ்வழக்கில் திருவனந்தபுரம் தேவஸ்வம் போர்டுக்காக அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி உள்ளார். டாக்டர் சிங்வி கோவிலின் வரலாற்றையும் அதனுடன் அத்தனை வருடங்களாக தொடர்புடைய சம்பிரதாயங்களையும், கோவிலுக்குள் ஐயப்பனை தரிசிக்க நாற்பத்தியோரு நாள் மேற்கொள்ள வேண்டிய கடுமையான விரதத்தையும் எடுத்துரைத்தார். அவ்வாறு விரதம் இருப்போரை சுவாமி என்றே அனைவரும் அழைப்பதையும் சுட்டிக்காட்டினார். அது தத்துவமசி என்னும் இந்து தத்துவத்தின் வெளிப்பாடு என்பதையும் விளக்கினார்.
நீதிபது சந்த்ரசூட் எப்படி மாதவிடாய் வரும் காலத்தில் உள்ள பெண்ணால் நாற்பத்தியொரு நாள் விரதம் இருக்க முடியும் என்று கேட்டார். அதற்கு டாக்டர் சிங்வி அது பெண்ணை விலக்கி வைக்க வேண்டும் என்பதற்காக போட்ட விதி அல்ல, அந்தக் கோவிலின் நடைமுறை அது என்று கூறினார். அவர் மேலும் மசூதிக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை மாதவிடாய் காலப் பருவம் உள்ள பெண்ணாக இருந்தாலும் வயோதிகராக இருந்தாலும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
பந்தளம் அரச குடும்பத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். அவர் மற்ற கருத்துக்களை முன் வைத்ததுடன் இவ்வழக்கைத் தொடுத்தவர் சபரிமலை கோவிலின் பக்தர்களின் பிரதிநிதியும் அல்ல இந்து சமயத்தை சேர்ந்தவரும் அல்ல என்பதை நீதி மன்றத்தின் முன் வைத்தார். அவர் இந்து சமய நம்பிக்கையை அழிக்க முற்படவே இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்கள் என்ற கருத்தைத் தெரிவித்தார். பதினெட்டுப் படிகளின் மகிமையையும், இருமுடி கட்டி வருவதின் தாத்பர்யம் பற்றியும் விவரமாக சொன்னார். பல தலைமுறைகளாக கடைப்பிடித்து வரும் மத வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினார்.
கோயில் மேல்சாந்தி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் வி.கிரி, தனிப்பட்ட விருப்பத்துக்காக சாமி கும்பிடுபவர்களின் நம்பிக்கையையும், கடவுளின் தன்மையையும் சோதிக்கக் கூடாது என வாதிட்டார். அந்தந்த கோவிலுக்கு என்று விதிக்கப்பட்ட சாஸ்திரங்கள் படி வழிபாடு நடை பெறுகின்றன என்றார். Tagore law lecturesல் இருந்து மேற்கோள்கள் காட்டினார். ஒவ்வொரு மூர்த்தியும் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கு சக்தி தரப் படுகிறது, அதை அவ்வாறு பாதுகாக்க சொல்லப்பட்ட விதி முறைகளை தொடர்வது மிக முக்கியம் என்றார்.
கோவில் தாந்த்ரியின் எழுத்து மூலம் கொடுத்த ஐயப்ப விக்ரகத்தின் குணாதிசயங்கள் பற்றியும் என்னன்னா வகையில் பூஜை செய்யப்படுகிறது என்பது பற்றியும் உள்ள affidavit ஐ நீதி மன்றத்தில் சமர்ப்பித்தார். அந்தக் கடவுள் மேல் நம்பிக்கையுள்ள ஒருவர் தான் அந்தக் கடவுளின் வழிபாட்டு முறைகளைப் பற்றி கேள்வி எழுப்ப முடியும். கோவில் வழிப்பாட்டு முறையில் மாற்றம் கொண்டு வர சமூக நீதியை காரணம் காட்டி எவரும் செயல்பட உரிமையில்லை என்று வாதிட்டார். சுவாமி ஐயப்பனை தோழா உரிமையைக் கோருபவர்கள் எவருமே இந்த வழக்கைத் தொடரவில்லை. அதனால் அவர்களுக்காக வழிபாட்டு முறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார்.
இதற்கு நடுவில் Ready to wait campaign பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று லட்சக்கணகான பெண்கள் தாங்கள் ஐயப்பனை தரிசிக்கக் காத்திருக்கத் தயார் என்று அறிவித்துள்ளனர்.
சபரிமலைக்கு சாதகமான நிறைய உச்ச நீதி மன்ற வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளனர் கற்றறிந்த சான்றோர்களான வழக்கறிஞர்கள். அவை சீரூர் மடத்தின் தீர்ப்பு, ஸ்ரீ வெங்கட்ரமணா தேவரு வழக்கின் தீர்ப்பு, துர்கா கமிட்டி அஜ்மீர், சர்தார் சேதனா தாஹெர் வழக்கு, நல்லோர் மார்த்தாண்டம் வெள்ளாளர் வழக்கு, ஆதி சைவ சிவாச்சாரியார் வழக்கு ஆச்சார்யா ஜகதீஷ்வரானந் அவதூதா வழக்கு ஆகியவை.
இன்னும் சில வாரங்களில் இவ்வழக்கின் தீர்ப்பு வெளிவரும் நிலையில் உள்ளது. இங்கு கோவிலின் சார்பில் வழக்காடிய அனைத்துத் தரப்பினரின் உழைப்பும் சபரிமலை ஐயப்பனின் அருளால் வெற்றிபெற வேண்டும் என்று அவர் பாதங்களைப் பணிந்து வேண்டுவோம்.
~ Pallavi
Beautifully wrote and explained it clearly .I liked it Pallavi.Iyyappan will take care judgement.
Veda.
சுவாமியே சரணம் ஐயப்பா.