
இரும்பு மனிதர்
இன்றைய தலைமுறைக்கு சர்தார் வல்லப்பாய் படேலைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தியா விடுதலை அடைவதற்கு அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களும், விடுதலை பெற்ற இந்தியாவின் நன்மைக்கு அவர் முன்னெடுத்து செய்த ஒப்பற்ற காரியங்களும், இரும்பு மனிதர் என்று அவருக்கு வழங்கப்பட்டப் பெயருக்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம். அவர் மட்டும் நாட்டின் முதல் பிரதமராக ஆகியிருந்தால் நம் நாடு என்றோ வல்லரசாகியிருக்கும் என்பது திண்ணம்.
சர்தார் வல்லப்பாய் படேல் (31.10.1875 – 15.12.1950) குஜராத் மாநிலத்தில் ஓர் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தியவர். இவரது தந்தை ராணி ஜான்சிக்கு சேவை செய்து வந்தவர். வழக்கறிஞராக இருந்தாலும் கூட நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவசாயமும் செய்திருக்கிறார். அவர் விவசாயிகளின் நலன்களில் மிகவும் அக்கறை கொண்டவர். அவர் இந்திய விவசாயிகளின் ஆத்மாவாக கருதப்பட்டவர்.
சர்தார்
சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார் இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
ஒருங்கிணைந்த பாரதம்
பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து விடுதலை பெற்றபோது இந்தியா விவசாயத்தை நம்பி வாழும் நாடாக வெவ்வேறு சிற்றரசர்கள் கீழ் உடைபட்டு தனித்தனி இராஜ்ஜியங்களாக இருந்தது. இந்தியா விடுதலை பெற்றாலும் இந்த ஒற்றுமியன்மையால் உருப்படாது என்று பலரால் எள்ளி நகையாடப்பட்ட நிலையில் இரும்புக் கரம் கொண்டு அனைத்து (565) சமஸ்தானங்களையும் ஒன்றிணைத்து புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை வெகு விரைவில் உருவாக்கிக் காட்டினார் சர்தார் படேல். அவர் மட்டும் அன்று அவ்வாறு செயல்படவில்லை என்றால் தேசம் இன்னும் பல எதிரிகளால சூறையாடப் பட்டு நாம் இன்று நம் உரிமை என்று எளிதாக அனுபவிக்கும் சுதந்திரக் காற்றும், மேன்மையான, வளமான வாழ்க்கையும் வெறும் கானல் நீராக தான் இருந்திருக்கும்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு விடுதலை அளித்துவிட்டு சென்ற பிறகு, அரச குடும்பங்கள் தங்கள் நாடுகள் தங்களுக்கே வேண்டும் என்று வேண்டினர். ஐநூறுக்கும் மேற்பட்ட பிரிவினைகள் இருந்தன. அதை எல்லாம் உடைத்துத் தற்போதுள்ள மாநிலம் சார்ந்த இந்தியாவை வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை உருவாக்கியவர் சர்தார் படேல். அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். சுதந்திரத்திற்கு பிறகு கப்பம் போன்று குறுநில மற்றும் பெருநில மன்னர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சர்தார் படேல் அவர்கள் பரிந்துரைத்தார் என்றும், அப்போதைய காங்கிரஸ் அரசு அதை நிராகரித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.
புதிய இந்தியாவின் சிற்பி
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற இந்திய அரசு ஊழியர்கள் அமைப்பினை உருவாக்கிட நிறைய உழைப்பை தந்தவர். மாநில வாரியாக இந்தியாவை ஒன்றிணைத்த பிறகு அதிகாரத்தோடு மக்களை நல்வழிப்படுத்த, தவறுகள் நடக்காமல் இருக்க இது தேவை என்று கருதி உருவாக்கிட நற்முயற்சி எடுத்தார் அவர்.
புதிய இந்தியாவின் சிற்பியான அவரை அவரது பிறந்த தினத்தில் அற்புதமாக கௌரவிக்கும் செயலே மோடி அரசு இன்று நிர்மாணித்திருக்கும் 182மீட்டர் உயரமுள்ள உலகிலேயே அதி உயரமான சிலை! குஜராத் மாநிலத்தில் சாது நர்மதா அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் 3000 கோடி ரூபாயில் நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சிலை 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. இந்த 2,000 டன் வெண்கலச் சிலையினுள்ளே பல 100 மூட்டை கான்கிரீட், 18,500 டன் எக்கு, 6,500 டன் உருக்கு ஆகியவை உறுதிக்காக சேர்க்கப்பட்டுள்ளன. இது, 6.5 ரிக்டர் அளவு நில அதிர்வையும், 180 கி.மீ. வேக புயலையும் தாங்கி நிற்கக்கூடியது. 182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும். நர்மதா நதியையும் பச்சை மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்த்த வண்ணம் அமைந்துள்ள இச்சிலையின் கால் கட்டை விரல் நகம் மட்டும் ஒரு கூடைப் பந்து விளையாட்டு கூடையின் அளவில் உள்ளது.
இந்த சிலையி்ல் உள்ள இரு அதிகவேக லிப்ட், சிலையின் மார்புப் பகுதியில் உள்ள 200 பேர் நிற்கக்கூடிய சிறிய அரங்கு வரை செல்லும். சிலை அருகே சுற்றுலா பயணிகளுக்காக மூன்று நட்சத்திர ஓட்டல் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை வடிவமைத்த 90 வயது சிற்பி ராம் V. சுதர், வல்லப்பாயின் உருவ அமைப்பை சிலை ஒத்திருப்பதை உறுதி செய்வதற்காக பட்டேலை நேரில் பார்த்தவர்களிடம் பேசியும் 2,000 புகைப்படங்களைப் பார்த்தும் இதை உருவாக்கியுள்ளார். இச்சிலையை அடைய குஜராத் அரசு 3.5 கிலோ மீட்டர் நீள சாலை அமைத்துள்ளது.
இதன் அடுத்த உயரமான சிலை சைனாவில் உள்ள 128 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை. பிரெஞ்ச் தேசத்தினர் அமெரிக்க நாட்டினருக்கு அளித்தப் பரிசு The Statue of Liberty. அமெரிக்க தேசம் மற்ற நாட்டு மக்களுக்குத் தஞ்சம் அளித்தும் குடியுரிமை அளித்தும் வரும் செயலுக்குப் பாராட்டாக அச்சிலை அமைந்துள்ளது. சர்தார் படேலின் ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) அவர் நம் நாட்டை ஒற்றுமையாக்கிய அரிய செயலை நினைவுபடுத்தும் வகையில் லிபர்டி சிலையைப் போல இரண்டு மடங்கு உயரமுடையதாய் நம் இந்தியர்களின் திறனை வெளிப்படுத்தி விருந்தினரை பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளது.
சர்தார் படேல் மீது பொய் குற்றச்சாட்டை கூறிய நேரு குடும்பம்
சர்தார் படேலின் சாகசங்கள் 1947 முதல் இந்திய அரசியலில் கொடி கட்டி வந்த நேரு குடும்பத்தினரால் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கம்யுனிஸ்டுகள் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜெயபிரகாஷ் நாராயணன், வீர் சவர்க்கார் மற்றும் சர்தார் படேலின் பெருமையை அவர்களின் தியாகத்தையும் உழைப்பையும் கொச்சைப்படுத்தியுள்ளனர். அதில் P.சுந்தரையா படேல் RSSஉடன் கைகோர்த்து காந்தியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்கிற குற்றச்சாட்டை வைத்தார். அதை கேட்டவுடன் சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார். அக்குற்றச்சாட்டே அவருக்கு மாரடைப்பைத் தந்து இறுதியில் அவர் உயிரையும் குடித்துவிட்டது.
ஆனால் இன்று மோடியின் ஆதரவால் இந்த இந்தியத் தலை நாயகனைப் பற்றி உலகமும் நாமும் தெரிந்து கொள்ளும் வகையில் இச்சிலை நாலு வருட காலத்திற்குள் தயாரிக்கப்பட்டு இன்று மக்களுக்குப் பிரதமர் மோடியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 153 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் பகுதியின் நுழைவுக் கட்டணம் 350ரூ. இணையத்தில் நுழைவுச்சீட்டை முன் பதிவு செய்து வாங்கலாம். இந்தச் சிலையைப் பார்க்க நாளொன்றுக்கு 15,000 விருந்தினர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வதோதராவில் இருந்து 100 கிமீ தூரத்தில் உள்ளது சிலை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இடம்.
இச்சிலையை சமர்ப்பிக்கும் படேலின் 143 பிறந்த நாளான 31 அக்டோபர் 2018 அன்று விழாவில் பிரதமர் மோடி, இந்நாள் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் ஒரு முக்கிய நாள் என்று குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்ற பிறகு பிளவுப்பட்டுக் கிடந்த நாட்டை ஒற்றுமைக்கிய படேலின் புத்திக் கூர்மைக்கும் சாதுர்யத்துக்கும் இந்த Statue of Unity சமர்ப்பணம் என்றார். இது நம்முடைய பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் திறமையையும் உலகுக்குக் காட்டும் என்று பெருமையாகக் குறிப்பிடுள்ளார்.
கடைசி வரை நல்லவராகவம் வல்லவராகவும் வாழ்ந்து மறைந்த தேசியத் தலைவர் படேலுக்கு இச்சிலையை நிர்மாணித்தது நமக்கும் பெருமை வரும் சந்ததியினருக்கும் பெருமை. ஜெய் ஹிந்த்.
~பல்லவி