
திருவள்ளுவரைப் பற்றி எல்லாருமே பல விதங்களிலே எழுதிட்டாங்க. இதுக்கு மேல நாம என்னா எழுதறதுன்னு நினைச்சேன். சின்ன வயசுல வேதாள மாயாத்மா (அதாங்க ஃபேண்டம்) காமிக்ஸ் படிச்சவங்களுக்குத் தெரியும் “ இரண்டு கண்களை விட நான்கு கண்கள் பெரியது” — கானகப் பழமொழி. அதனால நாமளும் எழுதலாமேன்னு ஒரு எண்ணம்.
திருவள்ளுவர் உலகத்துக்கே பொதுவானவர், அவரை ஒரு மதத்துடன் அடையாளப்படுத்துவது தவறு – இதுதான் எதிர்ப்பாளர்களின் ஒரே கோஷம். திருக்குறளை உலகப் பொதுமறையென்று சொல்கிறோம். பைபிளுக்கு அடுத்தபடியாக உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்பதும் நமக்குப் பெருமைதான். நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் — திருக்குறளின் கருத்துக்களை இந்த எதிர்ப்பாளர்கள் எந்த அளவுக்குப் பின்பற்றுகிறார்கள்? பிறன்மனை விழையாமை, கொல்லாமை தொடங்கி ஏராளமான நற்கருத்துக்களைக் கூறும் நூல் திருக்குறள். எதனைப் பின்பற்றுகிறோம்? திருவள்ளுவர் தினமென்று கொண்டாடுகிறோம். சாராயக்கடைகள் மூடப்படுமென்றால் முதல்நாளே வாங்கிவைத்துக் கொள்கிறோமே? இதுதானா நாம் திருவள்ளுவருக்குக் காட்டும் மரியாதை? திருவள்ளுவருக்கு சிலை வைத்தால் மட்டும் போதாது. அவர் கூறிய கருத்துக்களைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய முடியும்.
திருவள்ளுவர் ஹிந்து என்றால் அவரது நற்கருத்துக்களைப் பிற மதத்தினர் ஏற்க மாட்டார்களா? அல்லது நற்கருத்துக்களைக் கூறுபவர்களுக்கு மதமென்ற அடையாளமே இருக்கக்கூடாதா? அல்லது நற்கருத்துக்களுக்கும் ஹிந்து மதத்துக்கும் தொடர்பிருக்கிறதென்பதே தெரியக்கூடாதா?
திருவள்ளுவர் ஹிந்து என்று ஒரு மதத்துடன் அடையாளப்படுத்தினால் அவரைப் பிறர் ஏற்க மாட்டார்கள் என்றால் அது
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எனும் திருவள்ளுவரின் வாக்குக்கே இது எதிரானதல்லவா?
அப்படியே இந்தப் பக்கம் வாங்க. மஹாத்மா காந்தி – அஹிம்சை வழியை இந்த உலகத்துக்கே அறிமுகப்படுத்தியவர். வருங்காலத்தின் தலைமுறைகள் இப்படி ஒரு மனிதன் இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதையே நம்பமறுக்கும் என்று ஐன்ஸ்டைன் கூறுகிறார். இந்தியா மட்டுமின்றி உலகமுழுமைக்கும் ஒரு ஒப்பற்ற தலைவராகத் திகழ்கிறார் மஹாத்மா காந்தி. அவர் ஹிந்து என்பதாலோ அல்லது தனது மத நம்பிக்கைகளை அவர் இறுதிவரைக்கும் கைவிடவல்லை, ராமரையே தனது இறுதிமூச்சுவரைக்கும் வழிபட்டு வந்தார் என்பதாலோ அவரது புகழுக்குக் குறைவு வந்து விட்டதா? காந்தி ஹிந்து என்பதை மறைக்கவோ மறுக்கவோ என்ன அவசியம் வந்து விட்டது?
கௌதம புத்தர். இவரும் உலகம் உய்ய நற்கருத்துக்களை சொல்லிச் சென்றவர். இவரைச் சார்ந்துதான் புத்தமதமே தோன்றியது. தோன்றிய இடத்தை விடவும் ஊன்றிய இடங்களான சீனா, ஜப்பான், கொரியா, இலங்கை போன்ற நாடுகளில் ஓங்கி வளர்ந்துள்ளது. புத்தரை ஒரு மதத்துடன் தொடர்பு படுத்துவதால் அவரது பெருமைக்கு இழுக்கு வந்துவிட்டதா? அல்லது அவரது கருத்துக்களை உலகம் ஒதுக்கி விட்டதா?
நெல்சன் மண்டேலா. தென் ஆப்ரிக்காவில் கறுப்பின மக்களின் அடிமைத்தனம் நீங்குவதற்காகப் போராடி பல்லாண்டுகள் சிறைவாசம் செய்தவர். நோபல் பரிசு பெற்றவர். அவர் கிறிஸ்தவர் என்பதால் அவரைப் பிற மதத்தினர் ஏற்றுக் கொள்ள மறுக்கவில்லையே? அவர் புகழ் உலகமெங்கிலும் பரவியுள்ளதே?
இவர்களையெல்லாம் ஒரு மதத்துடன் அடையாளப்படுத்துவதை ஏற்கும்போது திருவள்ளுவரை அவர் சார்ந்த ஹிந்து மதத்துடன் அடையாளப்படுத்தும்போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு? தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கியுள்ள தருணம் இது. நல்லாட்சியால் மக்களைக் கவர முடியாதவர்கள் துர்போதனைகள் மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து மக்களைக் கடைசிவரையில் முன்னேற முடியாமல் செய்து அதன் மூலம் தங்களது சுயநல வேட்டையைத் தொடர முயலும் சக்திகளின் எதிர்வினைதான் இது. இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று கூறியபோது தீவிரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பு கிடையாது என்று வாய்கிழியக் கத்தும் கும்பல் அமைதியாக இருந்தது. ஹிந்து என்றால் திருடன் என்று அகராதியில் இருக்கிறது எனும்போது சந்தோஷமாக இருந்தது இந்த கூட்டத்திற்கு. ஆனால் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கும் ஒருவர் ஹிந்து எனும்போது மட்டும் தீவிர எதிர்ப்பு. திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்று ஆராய்ச்சிக் கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகும்போது சந்தாஷமாக இருந்தது, ஹிந்து என்று சொன்னால் மட்டும் ஏன் இந்த வெறுப்பு?
இதற்கு ஒரே ஒரு காரணம்தான் – சமீப காலமாக தமிழர்கள் ஹிந்துக்கள் கிடையாது என்ற கோஷம் தலைதூக்கியுள்ளது. இதன்பின்னால் சர்வதேச மதமாற்ற கும்பல்கள் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். தமிழர்களை சாதி பேதமின்றி இணைக்கும் ஒரு சக்தியாக ஹிந்து மதத்தைப் பார்க்கின்றனர். அப்படித் தமிழர்கள் ஒன்றிணைந்துவிட்டால் அது தேசவிரோத சக்திகளுக்கு அழிவைத்தான் தரும். தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லையென்றால் இங்கிருக்கும் ஹிந்து தமிழர்களெல்லாம் யார்? பண்டைத் தமிழகத்தில் சைவமும் வைணமும்தான் இருந்ததாம். சைவத்துக்கான சிவனும் வைணவத்துக்கான விஷ்ணுவும் ஹிந்து மதக்கடவுள்கள் என்பதைக் கூட அறியாத பிதற்றலாக இருக்கிறது இது.
திருவள்ளுவரை ஒரு மதத்துடன் தொடர்பு படுத்தாதீர்கள் என்று எதிர்ப்பது நமது பாரம்பரியத்தையும் தேசத்தையுமே இழிவுபடுத்துவதாகும். இனியும் இத்தகைய இழிவுகளைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. தேசத்துக்கே எதிராக நடக்கும் கூட்டத்தின் சதியை முறியடிக்க வேண்டிய நேரமிது. விழித்துக்கொள்ளாவிட்டால் அழியப்போவது நாம்தான்.
ஸ்ரீஅருண்குமார்