புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சமீபத்தில்  கூறிய சில வார்த்தைகளுக்கு எதிர்ப்புக் குரல் எழும்பியுள்ளது. எஸ் ஸி என்பது கறை என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசியிருக்கிறார், அவர் எவ்வாறு அப்படிக் கூறலாம்? என்பதுதான் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வி எங்கிருந்து எழுகின்றது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  

 

எஸ் ஸி —  அதாவது ஷெட்யூல்ட் காஸ்ட் —  தமிழில் அட்டவணை சாதியினர் அல்லது பட்டியல் சாதியினர்.  ஒரு காலத்தில் தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்கள் என்று அழைத்தனர். மஹாத்மா கடவுளின் குழந்தைகள் எனப் பொருள்படும் ஹரிஜன் என்று அழைத்தார். ஆதிதிராவிடர்கள் என்றும் அழைத்தனர். ஆதிதிராவிட நலத்துறை என்று ஒரு துறை, அதற்கு ஒரு அமைச்சர். ஆனால் பிற்காலத்தில் ஹரிஜன் என்ற சொற்பிரயோகம் மாற்றப்பட்டது.  ஷெட்யூல்ட் காஸ்ட் என்று அழைக்கப்பட்டனர். இன்று தலித் என்ற சொல்லாடலே பிரதானமாக உள்ளது. இதுவும் ஒரு நாள் மாறும் – எல்லாமே மாற்றத்துக்குரியதுதானே.

 

இப்போது கேள்வி என்னவென்றால் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் எஸ் ஸி என்பது கறை என்று கூறியிருந்தால் அது தவறா? தவறு என்றுதான் எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பட்டியல் சாதியினரிடமிருந்து அல்லது அவர்கள் தலைவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இதுவரை எழவில்லை என்பதும் கவனத்திற்குரியது.

 

ஷெட்யூல்ட் – அட்டவணை – பட்டியல் – இதன் பொருள் என்ன?  அரசு அலுவல்களில் இந்த ஷெட்யூல் என்ற வார்த்தை அதிகமாக இடம்பெறும்.  டெண்டர் ஷெட்யூல் என்று சொல்வார்கள். இது ஷெட்யூல்-ஏ, ஷெட்யூல்-பி என்று வரிசையாக இருக்கும்.  சட்ட முன்வரைவுகளிலும் பலவித ஷெட்யூல்கள் இருக்கும். ஒரு உதாரணத்திற்கு அட்டவணை-அ/ஷெட்யூல்-ஏ வில் இருப்பவை ஊராட்சிகள் என்றும் அட்டவணை-ஆ/ஷெட்யூல்-பியில் இருப்பவை பேரூராட்சிகள் என்றும் அட்டவணை-இ/ஷெட்யூல்-ஸியில் இருப்பவை நகராட்சிகள் என்று வரையறுக்கப்பட்டன என்று அரசாணை வெளியாகும்.  ஆக, வகைப்படுத்துதல் என்பதுதான் இந்த ஷெட்யூல் / அட்டவணை / பட்டியல் என்பதன் பொருள்.

 

ஆகவே ஷெட்யூல்ட் என்பதில் என்ன கௌரவக் குறைச்சலோ அல்லது அவமரியாதையோ அல்லது கறையோ இருக்க முடியும்?  அப்போ டாக்டர் கிருஷ்ணசாமி சொன்னது தவறான கருத்தோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் பொறுங்கள்.

 

பொறியியல் கல்லூரிகளில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்களுக்கிடையே ஒரு பிரிவினை இருந்தது – அதாவது மேனேஜ்மெண்ட் கோட்டா பசங்க, கவர்ன்மெண்ட் கோட்டா பசங்க.  அரசு ஒதுக்கீட்டில் அரசு கட்டணத்தில் படிக்கும் மாணவர்களை விட மேனேஜ்மெண்ட் கோட்டாவில் லட்சங்கள் கட்டி படிக்கும் மாணவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்டனர். இப்போது எஞ்சினியரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டு வரும் நிலையில் அது மாறி விட்டது.  இப்போது இன்னொரு விதமான பிரிவினை – ஹாஸ்டல் பசங்க என்றாலே கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கும் நிலை. அது ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை நான் உள்ளூர்காரன் நீ வெளியூர்காரன் என்ற மமதையா என்று புரியவில்லை.

 

அடுத்தது இந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பெரிய பிரபலமான பள்ளிகளில் சேரும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி யாராவது யோசித்ததுண்டா?  ஏற்கெனவே பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் அத்தகைய பள்ளிகளில் சேரும் ஏழைக் குழந்தைகள் மற்ற குழந்தைகளின் படாடோபமான வாழ்க்கையைப் பார்த்து மனோரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இத்தோடு இவர்களுடன் யாரும் சேராமல் இருக்கும் கொடுமையும் ஆங்காங்கே நடக்கிறது.  இதுவும் ஒரு பிரிவினைதான்.

 

இப்போ தொடங்கிய விஷயத்துக்கு வருவோம். ஷெட்யூல் / அட்டவணை / பட்டியல் சாதிகள்  — இந்தப் பட்டியல் எதற்கு? இந்தப் பட்டியலில் உள்ள சாதிகளுக்கென்று 15% இட ஒதுக்கீடும் சமூகத்தில் முன்னேறுவதற்கான பிற சலுகைகளும் உள்ளது, ஒருவர் பிறந்த சாதியானது இந்த சலுகைகளுக்கு உரியதா என்று கண்டறிய இந்தப் பட்டியல் பயன்படுகிறது.  இந்தப் பட்டியலில் உங்கள் சாதி இருந்தால் உங்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படும்.

இவ்வளவுதாங்க இந்த ஷெட்யூல்/அட்டவணை/பட்டியல் என்பது.  இதிலென்ன கறை?

 

அட்டகாசம். இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.  இந்த இட ஒதுக்கீடும் பிற சலுகைகளும் இந்த அட்டவணையில் இருப்பவர்களுக்கு மட்டும்தானா?  இந்த ஷெட்யூலில் இல்லாத சாதியினருக்கு இட ஒதுக்கீடும் சலுகைகளும் கிடையாதா?  

 

குழப்புகிறதா?  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் இட ஒதுக்கீடும் சலுகைகள் இருக்கிறது.  இந்த வகுப்புகளில் என்னென்ன சாதிகள் அடங்கும் என்பதற்கும் ஒரு அட்டவணை / பட்டியல் / ஷெட்யூல் இருக்கிறது. இருக்கிறதா இல்லையா?

 

எல்லா சாதிகளுக்கும் ஒரு பட்டியல் இருக்கின்றது எனும்போது எல்லாமே பட்டியல்தானே? எல்லாமே அட்டவணைதானே? எல்லாமே ஷெட்யூல்தானே? எல்லாமே சாதிகள்தானே? அப்போ அட்டவணை-அ/ஷெட்யூல்-ஏ, அட்டவணை-ஆ/ஷெட்யூல்-பி, அட்டவணை-இ/ஷெட்யூல்-ஸி என்றுதானே வகைப்படுத்தியிருக்க வேண்டும்?  ஏன் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் அட்டவணை/பட்டியல்/ஷெட்யூல் என்ற அடைமொழி? பதில் சொல்லுங்கள். அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறதே என்று கேட்பீர்களானால் அதனை மாற்றுங்கள் என்பதுதான் எனது பதிலாக இருக்கும்.

 

இதிலும் பாருங்கள் ஷெட்யூல்ட் காஸ்ட். அதாவது அட்டவணை சாதி. ஆனால் எம் பி ஸி என்பதன் விரிவு என்ன?  மோஸ்ட் பேக்வார்ட் க்ளாஸஸ் — மிகவும் பின்தங்கிய வகுப்பினர். இங்கே வகுப்பு/பிரிவு. அப்போ அட்டவணைக்கு மட்டும் சாதி, பிறருக்கு வகுப்பு அல்லது பிரிவு என்பதுதான் சமூகநீதியா? இப்படி ஒரு பிரிவினரை மட்டும் சாதியாக அடையாளப்படுத்தி வைத்திருப்பது சரியா நண்பர்களே?

 

தனியான பள்ளிகள், தனியான ஹாஸ்டல்கள் – இப்படித்தான் காலங்காலமாக ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.  எதற்காக தனியான ஹாஸ்டல்கள்? பொதுவான ஹாஸ்டல்தான் எல்லா மாணவர்களுக்கும். டே ஸ்காலராக இருக்க வேண்டும், இல்லையென்றால் அரசு ஹாஸ்டல்களில் மட்டுமே தங்க வேண்டும் என்று வலியுறுத்த ஏன் எந்த அரசுக்கும் தைரியமில்லை? எத்தனை நாளைக்குத்தான் தனியாகவே வைத்திருக்கப் போகின்றீர்கள்? பாப்பாப்பட்டி கீரிப்பட்டி சம்பவங்களை நிறுத்த வேண்டும் என்று எந்தக் கட்சியும் முன்நிற்கவில்லையே? ஆதிக்க சக்திகளுக்கும் சாதி வெறிக்கும் துணைபோனது ஏன்?  சாதிக் கொடுமையின் உச்சத்தில் ஜனநாயகம் கேலிக்கூத்தானதைப் பார்த்துக் கொண்டு பல ஆண்டுகள் மௌனசாட்சிகளாக நின்றது ஏன்?

இப்போது புரிகிறதா பட்டியல்/அட்டவணை/ஷெட்யூல் என்பது எவ்வாறு கட்டம் கட்டித் தனிமப்படுத்துகின்றது என்று?  எஸ் ஸி என்ற பெயரால் எத்தனை காலம்தான் சாதி ரீதியாக அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான் கேள்வி.  இதன் வெளிப்பாடாகவே டாக்டர் கிருஷ்ணசாமியின் குரல் ஒலிக்கிறது.

 

சாதிகள் ஒழிக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால் இன்னமும் சாதி ரீதியாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தால் எப்படி சாதியை ஒழிப்பது?  சலுகைகள் யாருக்குக் கொடுக்கிறீர்கள்? பல காலமாக ஒடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு. பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் வயது வாரியாக ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என்று இருப்பது போல இனி ஒடுக்கப்பட்ட பிரிவினர் -அ / Oppressed Classes-A, ஒடுக்கப்பட்ட பிரிவினர்-ஆ/ Oppressed Classes-B                      ஒடுக்கப்பட்ட பிரிவினர்-இ/ Oppressed Classes-C, பிறர்/Others என்று மாற்றி அமைக்கலாம். இதன்மூலம் பள்ளி கல்லூரிகளில் சாதி என்ற அடையாளத்தைத் தூக்கி எறிந்து விட்டு Caste என்பதை Class ஆக மாற்றலாம். இது முதல் படி மட்டுமே.

பிறப்புச் சான்றிதழில் தந்தை & தாயாரின் ஆதார் எண்ணை இணைக்கலாம். பிறகு தந்தையின் சான்றிதழைக் காண்பித்தால் உடனே மகன்/மகளுக்கும் பிரிவு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யலாம்.  ஒரு தலைமுறைக்குப் பிறகு தனியாக சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியமிருக்காது. ஆதாரிலேயே உங்கள் Classஐயும் சேர்த்துக் கொள்ளலாம். இதன்மூலம் இரண்டாவது தலைமுறையில் எங்குமே சாதி என்ற சொல் ஒலிக்காது –சாதிக் கட்சிகளின் மாநாட்டைத் தவிர.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.