
“அழகிய தேவதைக்கும், தேவதையை பெற்றெடுத்த தாய்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், இவள் இனி உங்கள் வாழ்வில் சீரும் சிறப்புமாய் எல்லா வளமும் நலமும் பெற்றிட துணைபுரிவாள்“.
நண்பருக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் வாட்ஸாப்பில் செய்தி அனுப்பினேன். பதிலுக்கு நன்றி என்று ஒற்றைசொல்லில் உரைக்காமல் திரும்ப அழைத்து அவர் மகிழ்ச்சியை பகிர்ந்ததும், அவர் நான் சொன்ன வார்த்தைகளை உளமாற உணர்ந்திருப்பது புரிந்தது. தமிழகத்தை பொறுத்தவரை பெண்குழந்தைகள் பிறப்பு 1991க்கு முன் பின் என்று பிரித்து பார்க்க வேண்டும். தென்னைய பெத்தா இளநீரு, பொண்ண பெத்தா கண்ணீருன்னு என்று சொல்வடை இருந்தது. உசிலம்பட்டியும் கள்ளிப்பாலும் சிற்றரிசியும் ஒரு காலத்தில் பெற்ற மகத்துவம் வெட்ககேடானது. தொட்டில்குழந்தை திட்டம் ஒரு மிகப்பெரிய சமூக புரட்சி. 20வருடம் கழிந்த பின்பும் அந்த குழந்தைகள் வளர்ந்து அந்த தலைவரை நன்றியுடன் நினைவுகூர்வதே சான்று.
ஆனால் இன்று எல்லாம் பெண்கள் மயம். பெற்றவர்களுக்கோ உள்ளூர ஒரு பயம். எப்படியாவது படிக்க வெச்சு ஒருத்தன் கைல புடிச்சு குடுத்திரனும் என்ற நினைப்பு கொஞ்சம் மருவி எப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திடனும் என்று மாறியுள்ளது. அது இன்று இன்னும் மேம்பட்டு எப்படியாவது என் பொண்ணை ஒரு கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், Dr.முத்துலட்சுமி ரெட்டின்னு சொல்லிட்டே போகலாம், அந்த அளவுக்கு பெரியஆள் ஆக்கனும் என்று இன்று ஒவ்வொரு தகப்பனும் தாயும் நினைக்கின்றனர். ஆனால் மாறி வரும் விலைவாசியும் போட்டியும் இவர்கள் கடைசியில் கல்யாணத்துக்கு நகை வாங்கும் கூட்டத்தில் நிற்க தள்ளிவிட்டுள்ளது. இன்றும் சிலர் ஆண் குழந்தைக்கு வேண்டி வரிசையாக பெண் குழந்தை பெற்றெடுப்பதும், கடைசி பெண்ணுக்கு “போதும் பொண்ணு” என்று பெயரிடுவதும் நடக்கத்தான் செய்கின்றது.
அதை உணர்ந்த மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றவுடன் பெண்குழந்தையின் வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. “செல்வமகள் சேமிப்பு திட்டம்” ஒன்றை வகுத்து இன்றைய தேவதையின் நாளைய வாழ்க்கை வளம்பெற ஒரு முத்தான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பெண்ணாக இருந்து வலியை உணர்ந்து ஜெயலலிதா செய்த பணி இன்று சரித்திரத்தில் இடம் பெற்றதை போல, பெண்குழந்தை வாழ்க்கைக்கு அடுத்தகட்டத்துக்கு அடிகோலிய நரேந்திர மோடியை இன்னும் 20 ஆண்டுகள் கழித்தும் வருங்கால் தேவதைகள் நினைவுகூறுவர் என்று மனமார நம்புகிறேன். இருவரின் பணியும் சரித்திரத்தின் பக்கங்களில் பொன்னால் எழுதப்படும் என்பதை மறுக்கமுடியாது. இந்த திட்டத்தை முழுமையாக அறிந்து கொள்ள பின்வரும் சம்பவத்தை படியுங்கள். இனி போதும்பொண்ணு என்ற தேவை இருக்காது, வேணும்பொண்ணு என்ற காலம் மிக அருகில் உள்ளது.
“அம்மா என் பொண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்குமா, என்ன நட்சத்திரம்னு பார்த்து சொல்லுங்கமா. காலையில 7:50க்குப் பொறந்ததுன்னு நர்ஸ் சொல்லிச்சுமா.”
என் வீட்டில் வேலை செய்யும் கமலா நல்ல செய்தியுடன் வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
“சுகப் பிரசவமா கமலா?”
“ஆமாம்ம்மா. பவர் ஹவுசில இருக்கிற கார்பரேஷன் ஆஸ்பத்திரில தான்மா பிரசவம் ஆகியிருக்கு. அங்க தான் லட்சுமி முதல்ல முழுகாம் இருந்தப்பலேந்து போய்கிட்டு இருந்தா. இப்ப என் நாத்தனாரை ஆஸ்பத்திரில வெச்சுட்டு அவளுக்கு சாப்பாட்டு எடுத்துட்டுப் போகலமனு வந்தேன் மா, அப்படியே உங்கள்ட இந்த நல்ல சேதியை சொல்லிட்டுப் போக வந்தேன்”
“அப்படியா இரு என்ன நட்சத்திரம்னு கேலண்டரை பார்க்கிறேன். இந்தா முதல்ல இனிப்பு எடுத்துக்கோ. இப்ப தான் ஆடி வெள்ளிக்கிழமைன்னு அம்மனுக்கு சக்கரைப் பொங்கல் செஞ்சு படைச்சேன்.”
“கமலா குழந்தைக்கு அவிட்ட நட்சத்திரம். நல்லா இருப்பா. பொண்ணு பிறந்திருக்குன்னு சந்தோசம் தானே?”
“நிச்சயமா மா. பிள்ளை தான் உசத்திங்கறது எல்லாம் அந்தக் காலம். என் பொண்ணு தானே என் புருஷன் குடிச்சு குடிச்சே செத்துப் போனப்ப துணையா நின்னுச்சு. என் அண்ணன் தம்பிங்க கூட உதவலையே. பிளஸ் டூ முடிச்சிட்டு பாலிடெக்னிக்ல பிரிண்டிங் ப்ரெஸ் பத்திப் படிச்சு வேலைக்கும் போயி இன்னிக்கு அழகா கல்யாணம் ஆகி குழந்தையும் பெத்திருக்கா. அவளை பெத்ததுக்கு நான் கடவுளுக்கு என்னிக்கும் நன்றி சொல்லணும். அதே மாதிரி என் பேத்தியும் நல்லா வருவா.” கண்ணில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டே சொன்னாள் கமலா.
கமலா என் வீட்டில் வேலைக்கு வந்து பதினைத்து வருடங்கள் ஆகின்றன. புருஷன் செத்த பிறகு வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தாள். புருஷன் கார்பன்டர் நல்லா தான் சம்பாதித்துக் கொண்டு இருந்தான். ஆனா குடிப் பழக்கம் தொற்றிக் கொண்டு அவன் உயிரை குடித்துவிட்டது. நாலு வீட்டில் பம்பரமா வேலை செய்து மகளை படிக்க வைத்து அவள் வேலை செய்யும் வீட்டுக்காரர்களின் உதவியோடு நல்ல ஒழுக்கமான பையனுக்குத் திருமணம் சிறப்பாக செய்து முடித்தாள். மருமகன் கால் டேக்சி ஓட்டுகிறான். மகளும் ஒரு பிரஸ்ஸில் டிசைன் செய்து கொடுக்கும் வேலைக்குப் போகிறாள்.
லட்சுமி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தவுடன் குழந்தையைப் பார்க்க சென்றேன். “பேரு என்ன லட்சுமி?”
“அட்சயா அம்மா.”
லட்சுமியிடம் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் செல்வ மகள் திட்டம் பற்றி சொன்னேன்.
“பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது லட்சுமி. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது அவர்களின் உரிமையாளர்கள் போஸ்ட் ஆபிசில் (அஞ்சலகத்தில்) குறைந்தபட்சம் ரூ.250க்கு முன்பதிவு செய்து கணக்கை துவங்கலாம். வருடா வருடம் சுமார் 8.1% வட்டித்தொகை இக்கணக்கில் இணைந்துக் கொண்டே வரும். பெண் பிள்ளைகள் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது 50% பணத்தை எடுத்து படிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது 18 வயதுக்கு பின் எடுத்துக் கொள்ளலாம். குறைந்தது ஓராண்டிற்கு ரூ.250 நிதி தொகையை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்தா உன்னோட மகள் அக்ஷயாவுக்கு முதல்ல கணக்கைத் துவக்க, அதுக்கான முதல் தொகை என்னிடம் இருந்து வரட்டும்” என்று ஆயிரம் ரூபாய் கவரை லட்சுமியிடம் கொடுத்தேன். லட்சுமிக்கும் கமலாவுக்கும் ரொம்ப சந்தோசம்.
“அம்மா குழந்தை நல்ல அதிர்ஷ்டம் பண்ணியிருக்கா. இப்படி பிறந்தவுடனே அதும் பேர்ல அக்கவுன்ட் ஆரம்பிக்க பணம் கொடுக்கறீங்களே” என்றாள் கமலா.
பக்கத்தில் இருந்த கமலாவின் நாத்தனார், “அம்மா என் மகனுக்கும் எட்டு வயசுல ஒரு பொண்ணு இருக்குமா அதும் பேரலையும் போஸ்டாபிஸ்ல கணக்குத் தொடங்கலாமா” என்றாள்.
“நிச்சயமா. பத்து வயசுக்குட்பட்டு இருக்கற பெண் குழந்தைகள் எல்லார் பேரிலும் அவங்க பெற்றோர் தொடங்கலாம். இப்பவே ஆரம்பிச்சுடு. உன்னோட பையனுக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கும் இந்த மாதிரி கணக்கைத் துவக்கலாம். ஒரு வீட்டுக்கு ரெண்டு பெண் குழந்தைகளுக்கு இப்படி துவக்கலாம். போஸ்ட் ஆபிஸ் இல்லாம சில வங்கிகளிலும் இந்த திட்டம் அமலில் இருக்கு.”
“சரிங்கம்மா, என் மகன்ட சொல்றேன்” என்றாள் கமலாவின் நாத்தனார் மகிழ்ச்சியுடன்.
“வருஷா வருஷம் குறைஞ்சது ரூ.250 முதிலீடு செய்யனும்; அதிகபட்சமாக 1.5லட்ச முதலீடு செய்யலாம்.”
“அம்மாடி அத்தனை பணமெல்லாம் பணக்காரங்க கிட்ட தான் இருக்கும்.” என்றாள் கமலா.
“நம்ம சக்திக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேமிக்க ஆரம்பிக்கலாமே கமலா. பக்கத்துல இருக்குற போஸ்டாபிஸ்ல ஆரம்பிச்சீங்கன்னா போய் பணம் கட்டறதும் சுளுவாதான் இருக்கும். வருஷா வருஷம் வட்டித் தொகை கணக்கில் இணையும். எப்போ கணக்கை ஆரம்பிக்கிறோமோ அதில் இருந்து 15 வருஷம் வரை கணக்கை இயக்கலாம். 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுதோ அல்லது 18 வயதுக்கு பின்னரோ கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கலாம்.”
“கல்யாண செலவுக்கும் வெச்சுக்கலாம் இல்லையா மா?” கமலா நாத்தனார் பிராக்டிகலான சந்தேகம் கேட்டாள்.
“திருமணம் ஆக ஒரு மாசம் முன்ன திருமண செலவுக்கு மொத்த பணத்தை எடுத்துவிட்டு கணக்கை மூடலாம்மா ஒன்னும் பிரச்சினை இல்லை.”
சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக்கிட்டே வரும். 2018 ஜனவரி 1 முதல் 8.1 சதவித வட்டி விகிதம் லாபம் அளிக்கப்பட்டு வருகிறது. முறையா வருஷா வருஷம் சொன்ன தொகை செலுத்த முடியலைன்னாலும் அவங்க 4% வட்டி மட்டும் தருவாங்க. கணக்கை பாதியில் விட்டால் ரூ.50 செலுத்தி மீண்டும் தொடரலாம்.”
“இந்த சேமிப்பு திடத்திற்கு வரிவிலக்கு உண்டு. உங்களுக்கு அதனால் இப்போ இலாபம் இல்லாம இருக்கலாம், நிறைய சம்பாதிக்கும் போதும் அதிகமா பணம் செமிக்கும் போதும் இந்தச் சலுகை ரொம்ப பெரிய இலாபமா இருக்கும். 21 வயசு நிறைவடைஞ்ச உடனே கணக்கு முதிர்வடைந்து விடும், அதன் பின் வட்டி கணக்கில் இணையாது.
மாசா மாசம் பத்தாம் தேதிக்குள் பணமாவும், செக்காவும் தவணைத் தொகையைக் கட்டலாம். இதைத் தவிர நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.”
“நடுவுல நமக்கு ஏதாவது பணத் தேவை வந்தா எடுக்க முடியுமாம்மா?” என்றாள் லட்சுமி.
“நிச்சயமா. சில சமயங்களில் ஏதேனும் மருத்துவ உதவி, நோய், போன்ற சில காரணங்களின் போது முன்பாகவே பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளின் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். அப்படி எதுவும் நிகழாம 18 வயது நிரம்பி திருமணம் செய்தற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தின் கீழ் கணக்கை மூடிவிட்டு முதிர்வு தொகையினை பெற முடியும்.”
“பணம் கட்டி ஏமாந்துடக் கூடாது இல்லம்மா?” என்றாள் கமலா மெதுவாக. பணத்தின் அருமை அவளுக்கு நன்றாகவே தெரியுமே.
“இந்த அரசு திட்டம் பெண் குழந்தைகளுக்கு சாதகமாகவே இருக்கு கமலா. இந்த முதலீட்டில் எந்த வித ரிஸ்கும் இல்லை. சில மியுச்சுவல் பண்ட் முதலீடு மாதிரிலாம் இது கிடையாது. எந்த ரிஸ்கும் இதில் இல்லை. அதனால் பெற்றோர்கள் தைரியமாக இதில் உங்கள் குழந்தைகளுக்காக முதலீடு செய்யலாம். உங்க உறவினர்கள் நண்பர்களுக்கும் இதைச் சொல்லுங்க. கமலா நீங்க எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பெண்ணைப் படிக்க வெச்சு கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க. அது மாதிரி இனி வரும் தலைமுறையினர் சிரமப்பட வேண்டாமே. முதலில் இருந்தே சேமித்து வந்தால் படிப்பு செலவுக்கும், திருமண செலவுக்கும் இப்பணம் கைக்கொடுக்கும். மேலும் விவரங்கள் மற்றும் கணக்கை தொடர உங்கள் அருகில் இருக்கு அஞ்சலகத்திற்குப் போனீங்கன்ன சொல்லுவாங்க.”
குட்டி அட்சயாவுக்கு அன்பு முத்தம் கொடுத்து அவர்களிடம் இருந்து விடைபெற்றேன்.
~Pallavi