
ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் அவர்களின் பெயர் இல்லை என்று ஒரு சேனலின் பேட்டியில் எழுப்பப்பட்ட விவகாரம் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
ஸ்டாலின் மிசா காலத்தில் சிறையில் இருந்தார் என்பது உண்மை. ஆனால் அவர் மிசா சட்டத்தில்தான் கைதானாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக கைதானாரா? என்பதுதான் கேள்வி. மிசாவில்தான் கைதானார் என்பதற்கு ஆதாரமாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை ஆதாரமாகக் காட்டினார்கள். பிறகு அமெரிக்காவின் விக்கி லீக்ஸை ஆதாரமாகக் காட்டினார்கள். அதே விக்கிலீக்ஸின் பிற பக்கங்களை வெளியிட்டபோது தந்திரம் தன்னையே தாக்கியதை உணர்ந்தார்கள்.
தற்போது சிறையிலிருந்த “மு. கருணாநிதி “ 28.11.1977ல் எழுதப்பட்டதாக ஒரு கடிதம் திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. முதலில் அவசர நிலை – எமர்ஜென்ஸி – ஜனவரி 1977லேயே முடிவுக்கு வந்து விட்டது. மார்ச் 16-20, 1977ல் தேர்தல் நடக்கிறது. ஜனதா கட்சி பெரும் வெற்றி ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் 28.11.1977ல் “மு.கருணாநிதி” எப்படி சிறையில் இருந்திருக்க முடியும்?
இதற்கிடையில் ஷா கமிஷன் அறிக்கையைத் தேடிப் படித்தால் இன்னும் பல உண்மைகள் தெரிய வரும் என்று ஒரு அறிக்கை.
இவ்வளவு பிரச்சினைகளை எழுப்பிவரும் அந்த ஷா கமிஷன் அறிக்கை அப்படி என்னதான் சொல்லியிருக்கிறது? ஷா கமிஷன் 3 பகுதிகளாக அறிக்கை சமர்ப்பித்தது.
அவற்றில் கண்டவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது 25, ஜூன், 1975. அந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இந்த ஆட்சி 31, ஜனவரி, 1976 அன்று கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறது.
அவசரநிலை காலத்தில் தமிழகத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை.
அரசியல் எதிர்க்கட்சிகள் 570
தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் 139
சமூக விரோதிகள், குற்றவாளிகள் மற்றும் இதரர் 318
ஆக மொத்தம் 1027
25.06.1975 — 31.01.1976 வரை ஆட்சியில் இருந்தது திமுக. இந்தக் காலகட்டத்தில்தான் 1 அதிமுக பிரமுகர் உட்பட 46 பேர் மிசாவில் கைது செய்யப்படுகிறார்கள். இது தவிர 212 சமூக விரோதிகளும் குற்றவாளிகளும் மிசாவில் கைது செய்யப்படுகின்றனர். ஆக மொத்தம் 258 பேர்.
ஆச்சரியமான விஷயம் — மிசாவில் கைது செய்யப்பட்டவர்களில் 25% பேர் திமுக ஆட்சிக் காலத்தில்தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷா கமிஷன் இன்னொன்றும் சொல்கிறது. சாதாரண திருட்டு, அடிதடி, ஈவ் டீஸிங், சாராயக் கடத்தல், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டவர்களும் மிசாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்ல, அவசரநிலை அமலுக்கு வருவதற்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் முன்பு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட மிசாவில் கைது செய்யப்பட்டனர் என்று ஷா கமிஷன் அறிக்கை கூறுகிறது.
ஆக அவசரநிலை காலகட்டத்தில் மிசா சட்டம் என்பது பலவகையிலும் துஷ்ப்ரயோகப்படுத்தப்பட்டது தெள்ளத் தெளிவாகிறது. இந்தக் கால கட்டத்தில்தான் திரு முக ஸ்டாலின், திரு முரசொலி மாறன் போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர் என்பது வரலாறு. சிறையில் இருந்த ஸ்டாலின் அவர்களைக் கலைஞர் அவர்கள் பார்க்க செல்கிறார். அப்போது உடலெங்கும் இருக்கும் ரத்த காயங்கள் தெரியக் கூடாது என்பதற்காக முழுக்கை சட்டை அணிவித்து அழைத்து வரப்படுகிறார் ஸ்டாலின். உன்னை அடித்தார்களா என்று கலைஞர் கேட்டதும் இல்லை என்று தலையாட்டுகிறார் ஸ்டாலின். ஏனென்றால் ஆமாம் என்று சொன்னால் கூட இருப்பவர்களுக்கு இன்னும் அடி கிடைக்கும் என்பதால். இதெல்லாம் திமுகவின் சரித்திரத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும். அத்தகைய சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய கட்சிதான் காங்கிரஸ் என்பதையும் இத்தகைய கொடும் சித்திரவதைகளுக்குக் காரணமான இந்திரா காந்தி அம்மையாரின் பேரன் ராஹுல் காந்தியைத்தான் பிரதமராக்குவோம் என்று ஸ்டாலின் 2019 தேர்தலில் சூளுரைத்தார் என்பதும் திமுக தலைவரின் மிகுந்த பெருந்தன்மையைக் காட்டுகிறது.
இன்னும் ஷ கமிஷன் என்னவெல்லாம் காட்டுகிறது என்பதை அடுத்த பகுதிகளில் பார்ப்போம்.
ஸ்ரீஅருண்குமார்