பழமொழின்னு கிண்டல் செய்யறோம், ஆனா அதுல இருக்க ஆழமான அர்த்தம் எதுலயுமே கிடையாது. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட மாதிரின்னு பழமொழி சொல்வாங்க.  அதாவது ராஜபோக வாழ்க்கையைத் தருவான்னு நம்பி கணவனைக் கைவிட்டு அரசன் பின்னாடி போனாளாம் ஒரு பெண். கடைசியில் அரசனும் கைவிட, புருஷனும் ஏற்றுக் கொள்ள மறுக்க, நட்டாற்றில் நின்றாளாம். ஒருவேளை இது தமிழ்ல இருக்கறதால உத்தவ் தாக்கரேக்கு தெரியல போலிருக்கு. மும்பைலதான் ஏகப்பட்ட தமிழர்கள் இருக்காங்களே, யாராவது இதை மராத்தியிலே விளக்கி சொல்லக்கூடாதா?

 

சிவசேனா கட்சி என்பது மஹாராஷ்ட்ரத்தில் ஒரு துடிப்பான கட்சியாகவே இருந்துள்ளது.  மும்பையில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வளர்ச்சி கண்டது. ஆனாலும் தனித்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதன் செல்வாக்கு வளரவில்லை என்பதுதான் உண்மை.  பின்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஹிந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் என்பதால் இந்தக் கூட்டணி இயற்கையான கூட்டணியாகக் கருதப்பட்டது. மஹாராஷ்டிரத்தில் ஆட்சியையும் பிடித்தது. சிவசேனா முதல்வர் பதவியையும் பாஜக துணை முதல்வர் பதவியையும் பகிர்ந்து கொண்டனர். ஆனாலும் பாஜகவின் அரசியல் முறைகளுக்கும் சிவசேனையின் முறைகளுக்கும் உள்ளூர ஒரு வித்தியாசமும் நெருடலும் இருந்துகொண்டே இருந்தது.  மீண்டும் ஆட்சியை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் இழந்தது. பிறகு 2014ல் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மஹாராஷ்ட்ர சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. மோடியின் வெற்றி அலையால் பாஜக முன்னைவிட அதிக இடங்களைக் கேட்க, இந்த முறை மோடியின் புகழால் வெற்றி நிச்சயம் என்பதால் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க மறுத்து சிவசேனை கூட்டணியை முறித்துக் கொண்டது.  மும்முனைப் போட்டியாக பாஜக ஒரு பக்கமும், சிவசேனை இன்னொரு பக்கமும், காங்கிரஸ்-தேசியவாத கூட்டணி இன்னொரு பக்கமுமாகப் போட்டியிட்டது. ஆச்சரியப்படத்தக்க வகையில் பாஜக தனிப்பெரும்பான்மைக்கு சில இடங்களே குறைவாக இருந்தது. இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைக்க சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரலாம் என்ற நிலை இருந்தது. வேறு வழியின்றி சிவசேனை பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர முன்வந்தது. ஆட்சியில் பங்கேற்றாலும் கடைசிவரை வேண்டாத மருமகள் – மாமியார் போலவே இவர்கள் உறவு இருந்தது. 

2019 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியிலேயே கணிசமான இடங்களை சிவசேனைக்கு வழங்கியது பாஜக.  மத்தியில் ஒரு மந்திரி பதவியும் வழங்கியது. ஆனால் 2019 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பிரச்சினை தலைதூக்கியது. இந்த முறை முதல்வர் பதவிக்குக் குறி வைத்தது சிவசேனை.  2019ல் முன்பைவிடவும் அதிக இடங்களில் பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றது பாஜக. இருந்தாலும் மஹாராஷ்ட்ரத்தில் சிவசேனையே பெரிய கட்சி, அது இல்லாவிட்டால் பாஜக வெற்றி பெற முடியாது என்ற கற்பனையிலிருந்தார் உத்தவ் தாக்கரே.  ஆனால் தேர்தல் முடிவுகள் சோதனையாக மாறிவிட்டன. பாஜக 2014ல் தனித்துப் போட்டியிட்டு வென்றதை விடக் குறைவான தொகுதிகளே வென்றிருந்தது. சிவசேனைக்கும் இதே நிலைமைதான். பாஜக-சிவசேனை கூட்டணியால் பலனடைந்தது காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும்தான்.

 

கட்சியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத உத்தவ் தாக்கரே கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.  பாலா சாஹேப் தாக்கரே இருந்தவரையில் காங்கிரஸும் சரத்பவாரும் பரம எதிரிகள். ஆனால் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க வேண்டும் என்ற கனவில் இவர்களுடன் பேரம் பேச முன்வந்து விட்டார் உத்தவ் தாக்கரே.  ஆட்சியமைக்க ஆதரவு தரவேண்டுமென்றால் முதலில் பாஜக கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் சரத்பவார். அதனையேற்று சிவசேனையின் மத்திய மந்திரி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருக்கிறார். இனி கூட்டணி அரசு, இலாக்கா பகிர்வு என எல்லாம் விரைவில் நடந்தேறும்.

 

இதன் விளைவுகள் என்ன?  காங்கிரஸ் கட்சிக்குள்ளே சிவசேனையுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது.  இத்தனை காலம் சிவசேனையை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று வர்ணித்துவிட்டு இப்போது அவர்களுடன் கூட்டணி என்றால் அடுத்து தேர்தல் வரக்கூடிய உ பி, பீஹார் போன்ற மாநிலங்களில் இனி சிறுபான்மையினரின் ஆதரவு கொஞ்சமும் கிடைக்காது என்று மஹாராஷ்டிர மாநிலத் தலைவர்களே கருதுகின்றனர். தங்களது கொள்கைகளுக்கு இணக்கமான பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு ஜென்மவிரோதி என்று தாக்கரே கருதிய சரத்பவாருடன் கூட்டணி சேருவது மக்கள் மத்தியில் எடுபடுமா என்ற கவலையில் சிவசேனைத் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் தேசியவாதக் கட்சித் தலைவர்கள் மட்டுமே கட்சிக்கு எதிர்காலமே இல்லையென்ற நிலையில் இப்படி ஒரு வாய்ப்பா என்று மகிழ்ந்து போயிருக்கின்றனர்.

 

சிவசேனையுடன் கூட்டணி வைத்தாலும் காங்கியஸ் அமைச்சரவையில் பங்கேற்குமா?  ஜனாதிபதி ஆட்சியைத் தவிர்க்கவும் உடனடியாக இன்னொரு தேர்தலைத் தவிர்க்கவுமே ஆதரவு கொடுத்தோம் என்று காங்கிரஸ் கூறலாம், ஆனால் ஆட்சியில் பங்கேற்றால் இந்த வாதம் செல்லுபடியாகுமா?  ஆட்சியில் பங்குபெறாமல் வெளியிலிருந்து ஆதரவு என்றால் பதவிக்காகக் காத்திருக்கும் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

பாஜக கூட்டணியை ஒரேயடியாக முறித்துக் கொண்டு வெளியே வந்துவிட்ட சிவசேனைக்கு இனி திரும்பிப் போக வழியில்லை என்ற நிலையில் சரத்பவாரின் கட்டளைகள் நிபந்தனைகள் அனைத்துக்கும் பணிந்து போக வேண்டிய சூழ்நிலை. பதவி மோகத்தால் இதனை உத்தவ் தாக்கரே புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்.  ஒருவேளை ஆதித்யா தாக்கரேவுக்கு முதல்வர் பதவி கொடுத்தாலும் முக்கியமான இலாகாக்கள் அனைத்தும் சரத்பவார் கைகாட்டுபவர்களுக்கு மட்டுமே. பி எம் ஸி வங்கி ஊழல் போன்ற முக்கியமான ஊழல் வழக்குகளின் விசாரணை முடுக்கிவிடப்படும் நிலையில் மாநிலத்தில் ஆட்சி என்பது சரத்பவாருக்குப் பயனளிக்கலாம். ஆனால் ஊழல் வழக்குகளின் விசாரணையை எந்த அளவுக்கு எதிர்கொள்ள முடியும் என்பதுதான் கேள்வி.  

 

ஒருவேளை இந்தக் கூட்டணி ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்தாலும் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மஹாராஷ்டிரத்தில் முடிவு கட்டுவதாகவே இந்தக் கூட்டணி அமையும்.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.