
இன்றைக்கு ஸ்ரீராமநவமி. கோவில்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே ஸ்ரீராமரை பூஜை செய்ய வேண்டிய நிலை. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். நம்மைச் சுற்றியும் கவலைதரக்கூடிய தகவல்கள், பயமுறுத்தக் கூடிய தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக. நோயால் பாதிக்கப்பட்டோர் இத்தனை லட்சம், இறந்தவர்கள் இத்தனை ஆயிரம் அப்டீன்னு ஏறிட்டே போகுது. இதற்கெல்லாம் எப்போதான் தீர்வு? இந்த கொரொனா அரக்கனை எப்போதான் வீழ்த்தப் போறோம்? கொரோனாவை வெல்லக்கூடிய சக்தி படைத்த மருந்து எப்போ வரும்? அந்த நல்ல செய்தியை யார் நமக்கு சொல்வாங்க?
இப்படியெல்லாம் நம்மோட மனசுல ஆயிரம் கேள்விகள்.
இன்னைக்கு ஸ்ரீராமநவமி இல்லையா? ஸ்ரீராமரோட சீதையையும் நினைக்க வேண்டிய நேரம் இது. சீதா தேவியும் இப்படித்தான் அசோக வனத்துல தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை. சுற்றிலும் கவலைப்படுத்தறா மாதிரியும் பயமுறுத்தறா மாதிரியும் அரக்கிகள், பயமுறுத்தம் கொரோனாவைப் போல ராவணன், ஸ்ரீராமர் எங்கே இருக்கார், எப்போ வருவார்? அப்டீன்னு கவலையோடு காத்துக்கிட்டிருக்கற சீதாதேவி. கிட்டத்தட்ட நம்ம எல்லோருடைய நிலைமையும் அதேதான் இல்லையா?
நல்ல செய்தி வரும். கட்டாயமா வரும். ஆமாம், அங்கே அசோகவனத்துல ஹனுமான் மூலமா நல்ல செய்தி வந்தது சீதாதேவிக்கு. அங்குலீயக ப்ரதான சர்கம் — 36வது சர்கம். கவலையோடு இருந்த சீதாதேவிக்கு ராமர் பெயர் பொறிக்கப்பட்ட கணையாழியைக் கொடுத்து நான் ஸ்ரீராமதூதன் அப்டீன்னு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சீதாதேவிக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஊட்டிய சர்கம்.
சுந்தரகாண்ட பாராயணத்துல பல வழிமுறைகள் இருக்கு. ஒரே நாளில் படிப்பது, இத்தனை நாட்களில் படிப்பது அப்டீங்கற மாதிரி இந்தந்த சர்கத்தைப் படித்தால் இன்னின்ன் பலன்னும் இருக்கு. இந்த அங்குலீயக ப்ரதான படலம் – அதாவது கணையாழி கொடுக்கும் படலைத்தைப் படித்தால் ஆபத்து நீங்கும்னு பலன் சொல்லியிருக்கிறது. எந்த ஆபத்து? சீதாதேவிக்கு ஆபத்து அந்த ராவணன், நமக்கு ஆபத்து அந்த கொரோனா.
ராமாயணம் படிச்சா வியாதி வராதா?ன்னு சில பேர் கேக்கலாம். அவங்களுக்கு ஒரே பதில். இது நம்பிக்கையூட்டுகிற விஷயம். வியாதி வராதுன்னு சொல்லல, ஆனா வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை நம்பிக்கை கொடுக்கும். நம்பிக்கைதான் எல்லாமே. 1983ல இந்தியா கிரிக்கெட் வோர்ல்ட் கப்பை வின் பண்ணும்னு சொன்னா எல்லாமே சிரிச்சிருப்பாங்க. ஆனா ஒரு மனுஷன், ஒரே ஒரு மனுஷன் முழுசா நம்பினான். கபில்தேவ். அந்த நம்பிக்கையை தன்னோட டீம் மேட்ஸ் எல்லாருக்கும் குடுத்தான். அந்த நம்பிக்கை வந்ததும் அவங்களோட ஆட்டமே வேற லெவல். உலகமே அசந்து போகிறா மாதிரி உலகத்துல தலை சிறந்த டீமா இருந்த வெஸ்ட் இண்டீஸ் டீமை அனாயாசமா தூக்கி சாப்டுட்டு கோப்பையை வின் பண்ணி காமிச்சார் அந்த மனுஷன். ஒரு தனிமனிதனோட நம்பிக்கையினால உலகக்கோப்பையை வெல்ல முடியும் ஒட்டு மொத்த இந்தியர்கள் நம்பிக்கையோட போராடினா இந்த கொரோனாவையும் ஒழித்துக் கட்ட முடியும். ஒவ்வொரு நாடும் தனது ஆயுத பலத்தை அதிகரிக்கறதுக்குக் காரணம் சண்டை வராதுன்னு இல்ல. வந்தா மோதி ஜெயிக்கலாம்ன்ற நம்பிக்கைதான். உடல்லே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிச்சா வியாதி வராதான்னா? வரும், ஆனா வியாதி ஜெயிக்க முடியாது, தோத்து ஓடும். அது மாதிரிதான் இதுவும். நம்பிக்கை இல்லாம போராடுவதால எந்த பிரயோஜனமும் கிடையாது. அந்த நம்பிக்கையை ஊட்டுவதுதான் அங்குலீயக ப்ரதான படலம் – கணையாழி கொடுக்கும் படலம்.
இன்றைக்குத் தொடங்குவோம், 36வது சர்கம், எவ்வளது தடவை முடியுமோ அவ்வளவு தடவை படிப்போம். விரைவிலேயே நல்ல செய்தி வருங்கிற நம்பிக்கை நிஜமாகும்.
ஸ்ரீஅருண்குமார்.