சமீப காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் குறியீடுகள் அதிகமாகக் கையாளப் படுகின்றன.  ஆனால் இந்தப் படம் முழுவதுமே குறியீடுகளால் ஆனது. இயக்குனர் அருண்குமார் ஒருவேளை ஆரிய ஆர் எஸ் எஸ் பார்ப்பன பாஸிஸ கைக்கூலியோ?

 

ஆரம்பக் காட்சியே அற்புதம் – விஜய் சேதுபதியும் அவர் மகனும் ஊரையே கொள்ளையடிக்கின்றனர்.  வாரிசு அரசியலையும் குடும்பக் கொள்ளையையும் குறிக்கிறாரோ?. சங்கிலி, கடிகாரம், பணம் என்று எல்லாவற்றையும் திருடி வாழும் இந்தக் கூட்டணி இன்னொரு கும்பல் திருடியது என்று தெரிந்தவுடன் தேடிப்போய் அடித்து வீழ்த்துகின்றனர். அத்துடன் சங்கிலி திருடியது தப்பு என்று அறிவுரை வேறு.  ஊரைக் கொள்ளையடிப்பது குடும்பத்துக்கு மட்டுமே உரியது, அடுத்தவர் கொள்ளையடிக்க உரிமையில்லை என்பதைக் குறிக்கிறாரோ?. சண்டையில் சூப்பர் என்றழைக்கப்படும் இளம் நடிகர் விழுந்து விடுவார். அதற்காகவும் விஜய் சேதுபதி அடிப்பார். ஆனால் அந்தப் பையன் அருகில் வந்து அவன் தள்ளி விடவில்லை, நானேதான் விழுந்தேன் என்பான்.  இது அய்யய்யோ கொல்றாங்களே என்ற காட்சியைக் குறிக்கிறாரோ?

அஞ்சலி –  இவரைக் கண்டதும் காதல் கொள்கிறார் நாயகன். ஆனால் அஞ்சலியின் மாமா ஒரு திருடனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று மறுக்கிறார். உடனே அஞ்சலி அப்படியானால் நான் அவனைத்தான் காதலிப்பேன், பிள்ளை பெத்துக்குவேன் என்று கூறுகிறார்.  அஞ்சலி ஒரு வீட்டுக்கடங்காத வாயாடிப் பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். பெண்களை அடக்கி வளர்க்கவில்லையென்றால் இப்படித்தான் கல்யாணமே செய்து கொள்ளாமல் திருடனிடமும் போக்கிரிப்பயல்களிடமும் குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்று கூறுகிறாரா இயக்குனர்?  அத்தோடு விட்டாரா? தன்னை இத்தனை வருடம் வளர்த்து ஆளாக்கிய சொந்தத் தாய்மாமனையே அடித்து உதைக்குமாறு காதலனிடம் சொல்கிறார். அவரும் துவைத்து எடுக்கிறார். மருத்துவர் ராமாதாஸ் ஐயா அவர்கள் சொல்லும் நாடகக் காதலை இந்த அளவுக்கு யாராலும் இடித்துரைக்க முடியாது.  பெண்ணைப் பெற்றவர்கள் படும் அவலத்தைக் குறிக்கிறாரோ இயக்குனர்?.

 

அஞ்சலி மீண்டும் மலேஷியா போகும்போது விமான நிலையத்திலேயே தாலி கட்டி விடுகிறார்.  உடனே அஞ்சலியும் தாலி கழுத்தில் ஏறியதும் அடக்க ஒடுக்கமாக விஜய் சேதுபதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்.  என்னதான் சுதந்திரமாகப் பேசினாலும் கடைசியில் ஆணின் காலடியில்தான் பெண் என்று பெண்ணடிமைத்தனத்தை, சனாதன தர்மத்தை நிலைநாட்டுகிறாரோ இயக்குனர்?.  அது மட்டுமல்ல, தொண்டர்களின் மனைவிகளின் கழுத்தில் இருக்கும் தாலியைத்தான் அறுப்போம், தலைவர்களின் மனைவிகள் கழுத்தில் தாலியும் மஞ்சள் குங்குமமாக இருப்பார்கள் என்பதை என்பதைக் குறிக்கிறாரோ?

இதனிடையில் விஜய் சேதுபதியும் அவர் மகனும் ஏராளமான பொய்க்கதைகளை அள்ளி விடுவார்கள். இதையும் ஜேம்ஸ் நம்புவார்.  இந்தக் குறியீடு எதைக் காட்டுகிறது? ஸ்டாலின் இறந்த அன்று பிறந்ததால் எனக்கு அவர் பெயரை வைத்தனர் என்று கூறினார், ஆனால் இவர் பிறந்து சில நாட்கள் கழித்துத்தான் ஸ்டாலின் இறந்தார். இதையா? அல்லது ஸ்டாலின் என்ற பெயர் வைத்ததால் சர்ச் பார்க் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை என்றதையா?  அண்ணா என் கனவில் வந்தார் என்று சொன்னதையா? ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றதையா? கண்டுபிடிப்பதற்குள் தலை சுற்றுகிறது.

 

வங்கி அதிகாரிகள் விஜய் சேதுபதியின் பின்னே அலையோ அலை என்று அலைகிறார்கள் – அவரது வீட்டை வாங்குவதற்காம். இத்தனைக்கும் வீட்டின் மீது கடன் ஒன்றுமில்லை.  வங்கி எதற்கு இவர் வீட்டை வாங்குகிறது என்று கேட்கக் கூடாது. விவசாயத்தை வளர்ப்பதற்கு மந்திரிகள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் செல்வதில்லையா? அதை ஏனென்று கேட்டோமா? அது போலத்தான். ஆனால் விஜய் சேதுபதி அவர்களை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறார். வீட்டை விற்க சம்மதிக்கவில்லை.

 

ஆனால் மலேஷியாவில் மனைவி மாட்டிக் கொண்டதும் அவசரமாகப் பணம் தேவை என்றதும் உடனே அதே வங்கிக்குச் சென்று ஐந்து லட்சம் மட்டும் கொடுங்கள் வீட்டை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார். அந்தக் காட்சியில் சுற்றிலும் விதம் விதமான மோடி படங்கள்.   தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரும் எந்தத் திட்டங்களையும் எதிர்த்து நின்று வேண்டாம் என்று கூறும் மக்கள் விரைவிலேயே மோடியின் தயவை எதிர்பார்த்து நிற்க வேண்டி வரும் என்று சூசகமாகக் குறிக்கிறாரா இயக்குனர்?

 

பணம் வாங்கியதும் பாஸ்போர்ட் எடுக்க திருட்டுத் தரகர்களிடம் போகிறார் நாயகன்,   தத்கால் திட்டம் உட்பட எத்தனையோ அரசுத் திட்டங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டாலும் இந்த தில்லு முல்லு கட்சிகள் நம்மை இன்னும் அறியாமையில் இருக்கச் செய்து பணம் பண்ணுவதைக்  குறிக்கிறாரோ? போலி பாஸ்போர்ட்டில் முஸ்லீம் பெயராம். எதற்கு? சிறுபான்மையினரின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவார்கள் என்பதைக் குறிக்கிறாரா இயக்குனர்?

 

அஞ்சலி கழுத்தில் தாலி கட்டியதும் இனி நான் திருட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார் விஜய் சேதுபதி, ஆனால் ட்ரெயினில் போகும்போது அவருடன் கூட இருக்கும் மகன் நம்பி வந்த ஒரு ஏமாளித் தமிழரின் பணத்தை ஆட்டையைப் போடுகிறார்.  நாங்கள் திருந்தி விட்டோம் என்று கூறினால் நம்பாதீர்கள், தமிழர் தமிழர் என்று பேசி உங்களைக் கொள்ளையடித்து நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள் என்பதைக் குறிக்கிறாரா இயக்குனர்?

அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தாலும் ட்ரெயின் முழுக்க எல்லாரிடமும் கை வரிசை காட்டுகிறார் சூப்பர்.  போலீஸில் மாட்டிக் கொண்டதும் இனிமேல் திருட மாட்டோம், எங்களை விட்டு விடுங்கள், என்று கெஞ்சுகிறார்கள். இத்தனை நாள் தண்டனை கொடுத்தது போறாதா?  ஒரு முறை பதவி கொடுக்கக்கூடாதா என்று கெஞ்சியதைக் குறிக்கிறாரா இயக்குனர்?

 

வில்லன் இவரிடம் நீங்கள் இந்தியனா என்று கேட்கிறார். உடனே நெஞ்சுயர்த்தி தமிழன் என்று கூறுகிறார். ஆனால் சில நிமிடங்களிலேயே பையன் தொலைந்து போனதும் வீதிகளில் போவோர் வருவோரிடத்திலெல்லாம் Indian small bachchaa என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசுகிறார் நாயகன்.  தமிழ் என் மூச்சு என்பதெல்லாம் வேஷம், மும்மொழிக் கொள்கைதான் எங்கள் வியாபாரம் என்பதைக் குறிக்கிறாரா இயக்குனர்? தமிழன் என்கிறார் பையன், இந்தியன் என்கிறார் அப்பா. இளமைத் துடிப்பில் தமிழன் என்று பேசலாம், ஆனால் காரியம் ஆக வேண்டுமென்றால் இந்திய அடையாளம்தான் வேண்டும் என்று கூறுகிறாரா இயக்குனர்?

 

மலேஷியா தாய்லாந்து கம்போடியா என்று எதையெதையோ கூறுகிறார்கள். ஆனால் எங்கே இருக்கிறார்கள் என்பதே குழப்பமாக இருக்கிறது,  ஒரு வேளை சுதந்திர தினம் ஜனவரி 15ஆ இல்லை டிசம்பர் 25ஆ என்ற குழப்பத்தைக் குறிக்கிறாரா இயக்குனர்?

 

வில்லனின் இடத்தில் திருடச் செல்லும் விஜய் சேதுபதியும் மகனும் மாட்டிக் கொள்கிறார்கள்.  கூடவே இருந்த பாவத்துக்காக இன்னொரு அப்பாவித் தமிழனும் மாட்டிக் கொள்கிறார். அவரை மலைஉச்சியில் இருந்து தள்ளி தூக்குக் கயிறை மாட்டித் தொங்க விடுகிறார்கள். அவர் ஊசலாடும்போது சாதிக் பாட்சாவை நினைவு கூறுகிறாரா இயக்குனர்?

 

கயவர்களிடம் மாட்டிக் கொள்ளும் அஞ்சலி தன்னைக் காப்பாற்றுமாறு ராபர்ட் அண்ணன் என்பவரிடம் கெஞ்சுகிறார். அவரும் காப்பாற்றுவது போல நடித்து நாயகனை வில்லனிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார். ராபர்ட்டை நம்பினால் இப்படித்தான் என்று எதைக் குறிக்கிறார் இயக்குனர்? குழப்பமாக இருக்கிறது.

 

படம் முழுக்க காது கேட்கும், ஆனால் வேண்டியது மட்டுமே கேட்கும் என்று சொல்லிக் கொள்கிறார் விஜய் சேதுபதி.  ஏழைகளின் அழுகுரல் கேட்காது, பணக்காரர்களின் தேவைகள் மட்டுமே தலைவர்கள் காதுகளில் விழும் என்பதைக் குறிக்கிறாரா இயக்குனர்?

 

மனைவியைப் பிரிந்த சோகத்திலும் பயணம் செய்யும்போது மனைவியை நினைத்து ஒரு கனவுக் காட்சி பாடல். ஒருவேளை மக்கள் வெள்ளத்திலும் வறட்சியிலும் தவித்த போது வெளிநாட்டில் இன்பச் சுற்றுலா சென்றதைக் குறிக்கிறாரா இயக்குனர்?

 

ஒரே ஒரு காட்சியில் மட்டும் நெற்றியில் விபூதி. ஒருவேளை தேர்தல் நேரத்தில் மட்டும் கோவிலுக்குப் போவதைக் குறிக்கிறாரோ?

ஆனால் கடைசிக் காட்சிதான் மணிமகுடம்.  இவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பணம் வருகிறது என்று கேட்கிறார் தோழி, அதற்கு அஞ்சலி கூறுகிறார் நாம இப்படியே இருக்கற வரைக்கும் அவங்க அப்படித்தான் இருப்பாங்க என்று.  தலைவர்கள் மட்டுமே ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாவதும் தொண்டர்கள் அன்றாடங்காய்ச்சிகளாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறாரா இயக்குனர்?

 

கடைசியாக தலைப்பு —  சிந்துபாத், ஒருவேளை இந்த வாரிசு அரசியலும் குடும்பக் கொள்ளைகளும் என்றைக்குமே முடியாது என்பதைக் குறிக்கிறாரோ?

 

சூடுகொட்டை

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.