
கிராமத்துக்கு நடுநாயகமா இருக்க ஆலமரத்தடிலே வந்து உக்காந்தாரு பாட்டையா. அவரு வந்தாலே எளந்தாரிலேர்ந்து பெருசுக வரைக்கும் ஒரே கும்மாளந்தேன். ஏன்னா பாட்டையா அவரோட அனுபவத்துல கண்டது கேட்டதுன்னு எல்லாத்தையும் கொஞ்சம் கற்பனையோட சேத்து அள்ளி விடுவாரு. ஆனா கடைசீ வரைக்கும் ஊரையும் பேரையும் சொல்லவே மாட்டாரு. அதைக் கண்டுபிடிக்க பயலுவளுக்குள்ள ஒரே போட்டிதேன்.
இன்னைக்கும் அது மாதிரி பாட்டையா ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சாரு. அவரு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அவரு பக்கத்துல உக்காந்திருந்த கோவாலு வெத்தலயப் பதமா காம்பு கிள்ளி பின்னால அளவா சுண்ணாம்பு தடவி கொஞ்சமா பாக்கைத் தூவி மடிச்சுக் கொடுக்கான். அதை வாங்கி இடது பக்கம் கடவாப்பல்லுக்கு நடுவிலே சொருகிட்டு ரெண்டு நிமிஷத்துல பக்கத்துல திரும்பி துப்பினாரு பாட்டையா. “ஏலேய் பயலுவளா, எதுக்கு வெத்தலயப் போடோணும், எதுக்குத் துப்போணும்? தெரியுமா?”ன்னு கேக்க எல்லாரும் முழிக்கானுவ.
“ வெத்தலயப் போட்டதும் மொதல்ல வர்ற சாரும் கடைசியிலே வர்ற சாரும் ஒடம்புக்காகாதுடேய். அதான் துப்பிடணும். வெத்தல சும்மா இல்லே. தேவபத்ரம். இந்திரலோகத்துல இருந்து ஊர்வசி குடுத்தனுப்பின மூலிகை. அதனாலதான் புருஷன் பொஞ்சாதி ஒத்துமையா இருக்க வெத்தில போடணுங்கறது”
எளந்தாரிப் பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷி. “பாட்டையா நீங்க பட்டயக் கெளப்புங்க”ன்னானுவ.
“ நம்ம ஊரு மாதிரியே ஒரு கிராமம். அதுவும் ஒரு பாரம்பரியமான குடும்பங்க இருக்கற ஊரு. ஏராளமான தலக்கட்டு. விவசாயம் மட்டுமில்லாம மத்த தொழிலும் செழிப்பா இருந்த ஊருதேன். அப்போ புதுசா ஒரு எளந்தாரி தலக்கட்டா வந்தாரு. எல்லா ஊருலயும் இருக்கா மாதிரி சோம்பேறிப் பயலுவ அந்த ஊருலயும் இருந்தானுவ. அதே மாதிரி சொந்தமா நெலபுலம் இல்லாம கூலி வேலை பாத்துட்டு கஷ்ட ஜீவனம் செஞ்ச மனுஷாளும் இருந்தானுவ. அதுல பாருங்க செல சமயம் எல்லாருக்கும் வேலை அம்புடாது. வேலை இல்லாதப்போ ஒரு வேளை கஞ்சிக்கே கஷ்டம். இதப்பாத்தாரு புதுசா வந்த தலக்கட்டு. இனிமே நம்ம கிராமத்துல எல்லா வேலைக்கும் நம்ம ஆளுங்களத்தேன் வெக்கோணும், வெளியாளுங்கள வெக்கக்கூடாதுன்னு பஞ்சாயத்து கூட்டி தீர்ப்பு சொல்லிட்டாரு. கேக்கணுமா? கிராமத்துக்காரங்க ரொம்பவே சந்தோசமாயிட்டாவ. இனிமே நம்ம பயலுவ எல்லாத்துக்கும் பொழப்பு கெடைக்கும், யாரும் பட்டினியா இருக்க வேணாம்னு தலக்கட்ட வாழ்த்திட்டுப் போனானுவ”.
கதையைப் பாதியில் நிறுத்தினார் பாட்டையா. கோவாலு இன்னொரு வெத்திலையை மடித்து நீட்ட அதை வாங்கி வாயில் திணித்துக் கொண்டார் பாட்டையா. எதுவும் பேசாமல் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டதும் ஒரு எளந்தாரிப் பய எழுந்து கேட்டான் “ பாட்டையா, அப்போ அந்த ஊரே முன்னேறியிருக்கும். நாமளும் அதே மாதிரி செஞ்சா என்னா? இதத்தானே நம்ம சீமாண்டி சொல்லிக்கிட்டிருக்கான்னு” கேட்டான்.
உடனே பாட்டையா கெக்கே பிக்கேவென்று சிரித்தார். “ இதேன் அவசர குடுக்கைங்கறது. அப்பூ, நீ நெனைக்க மாதிரி அந்த ஊரு முன்னேறலே. நாசமாப் போச்சு. இங்கே கெடக்க எளந்தாரிப் பயலுவள்லாம் அந்த சீமாண்டிப் பய பின்னாலே சுத்தறது தெரிஞ்சுதேன் இதச் சொன்னேன்”னாரு பாட்டையா.
பயலுவளுக்கு ஒண்ணும் புரியலே. “ அதெப்படி பாட்டையா? நம்மூரு வேலையெல்லாம் நம்மாளுவளுக்கு மட்டும்தேன் குடுக்கணுங்கறது எப்படி தப்பாவும்”னு கேட்டாங்க.
பாட்டையா சொன்னாரு “ அடேய் பயலுவளா, இப்படித்தேன் அந்த எளந்தாரித் தலக்கட்டும் நெனச்சாரு. ஆனா என்ன ஆச்சின்னா அந்த ஊருலே கடை கண்ணி வெச்சிருந்த அசலூர்க்காரனுவ மட்டுமில்லே, அந்த ஊர்க்காரனுவ கூட வெளியூர்லேர்ந்து ஆளக் கூட்டி வெச்சு வேலை பாத்தானுவ. இப்படி பொசுக்குன்னு அசலூர்க்காரனை வேலைக்கு வெக்கக்கூடாதுன்னா? அசலூர்க்காரன் பஞ்சம் பொழைக்க வந்தவன், அதனால கஞ்சித்தண்ணி ஊத்தினா போதும், கூலி எவ்ளோ குடுத்தாலும் வாங்கிக்குவான். உள்ளூர்க்காரன் விடுவானா? நல்லா வக்கணையா இவ்வளவு கூலி குடுத்தாத்தேன் வேலை செய்வோம்னான். கூலி குடுத்து கட்டுப்படியாவலை. அசலூர்க்காரனுவ எல்லாம் கடையை மூடிட்டு பக்கத்து ஊருக்குப் போயிட்டானுவ. உள்ளூர்க்காரனுங்க வேற வழியில்லாம கூலி அதிகமா குடுத்தானுவ. அத செரிகட்ட வெலைய ஏத்திட்டானுவ. ஊர்க்காரனுவளுக்கெல்லாம் சங்கடமாப் போச்சு. அத்தோட விட்டானுவளா? கடைய மூடிட்டுப் போன அசலூர்க்காரனுவனெல்லாம் அந்த ஊருலே இனிமே பொழைக்கவே முடியாதுன்னு அக்கம்பத்து ஊரு வியாவாரிகிட்டேயெல்லாம் சொல்ல, ஒரு பயலும் அந்த ஊருக்குப் போவலை. அத்தோட விட்டானுவளா? இவனுங்க இப்படி தீர்ப்பு சொன்னது எல்லாருக்கும் தெரிஞ்சதும் பக்கத்து கிராமத்துலேயும் இப்படி தீர்ப்பு சொல்லிட்டாவ. இதனால என்னாச்சு தெரியுமா? அந்த ஊரு சனங்க சுத்தி இருக்க ஊருலயெல்லாம் வேலை செஞ்சிட்டிருந்தானுவ. அத்தனை பயலையும் துரத்தி விட்டுட்டானுவ. இப்போ அத்தனை பயலும் ஊருலதேன் சும்மா சுத்திட்டிருக்கானுவ. ஆளுவ அதிகமா போயிட்டதால கஞ்சித் தண்ணி ஊத்தினா போதும், வேலை செய்யத் தயார்னு எல்லாம் எறங்கிட்டானுவ. ஆனா என்னா செய்ய? கஞ்சி காச்சக்கூட பவுசு இல்லே யார்கிட்டேயும்”
கூடியிருந்த கூட்டம் மௌனமானது.
“ அடேய் சீதாபதி, உங்கண்ணன் எங்கடே?” பாட்டையா கூவினார்.
“ பாட்டையா, அவன் பக்கத்து கிராமத்துல இருக்கான். திருவிழா அன்னிக்குதேன் வருவான்”
“ கவலப்படாதடே. சீக்கிரமே ஒட்டுக்கா வந்துடுவான். உன்ன மாதிரியே அந்த ஊருலயேயும் ஊர்க்காரனுவக்குத்தான் வேலைன்னு கோஷம் போடுதானுவ. இனிமே அண்ணனைப் பக்கத்துலயே வெச்சி பாத்துக்கிடலாம்”
“ அய்யய்யோ பாட்டா, அப்புறம் சோத்துக்கு என்ன செய்யறது?”
“ போடேய், போயி அந்த சீமாண்டிப் பயலப் போயி மேய்க்கறதுக்கு பத்து ஆடு கேளு, குடுக்கானா பாப்பம். நடையக் கட்டுங்கடேய், அக்கம்பக்கத்துல இருக்க நம்மூருப் புள்ளைகளெல்லாம் திரும்பி வார நேரம். இருக்க கோழிய அடிச்சு குழம்பு வெச்சிக் குடுங்க. இதுக்கப்புறம் கறிக்கஞ்சி எப்போ கெடைக்குமோ தெரியாது” வெத்திலையின் கடைசி ஊறலைத் துப்பியபடியே நடையைக் கட்டினார் பாட்டையா.
ஸ்ரீஅருண்குமார்