
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரம் வருடா வருடம் நூற்றுக்கணக்கான தென் கொரிய மக்களை விருந்தினர்களாக வரவேற்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்கள் வருவது கரக் இனத் தலைவரான அவர்கள் அரசர் கிம் சூரோ மணந்து கொண்ட அரசி ஹியோ ஹ்வாங் ஓகே (இளவரசி சுரிரத்னா என்றும் அறியப்படுபவர்) என்பவருக்கு அஞ்சலி செலுத்தவே!
இளவரசி சுரிரத்னா
கொரிய அரசரை மணக்கும் முன் அவர் அயோத்தியின் இளவரசி. அவர் தனது 16 வது வயதில் படகில் கொரியா சென்று அந்நாட்டு அரசரை மணம் புரிந்துள்ளார். காலகட்டம் AD 48. இவர் கும்க்வான் கயா அரசர் சூரோவின் பட்டத்து அரசியாவார். சரயு நதிக்கரையில் இருந்து தென் கொரியா சென்று ஒரு வம்சத்தையே உருவாக்கியுள்ளார். அவர் இராமன் பிறந்த அயோத்தியில் இருந்து வந்ததால் 2000 வருட கால அனைத்து அரசிகளிலும் அவரை மிகவும் புனிதமானவராக கொரிய நாட்டினர் கருதுகின்றனர். கிம்ஹே நகரத்தவர்(அங்கு தான் அவர் கல்லறை உள்ளது) இந்தத் தொடர்பினால் மிகவும் கவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் அரச குடும்பத்தின் சின்னம் இரண்டு மீன்கள் முத்தம் கொடுத்துக் கொள்வது அயோத்தி மிஸ்ரா அரச குடும்ப சின்னத்தை மிகவும் ஒத்துள்ளது அவர்களுக்கு தொடர்பின் இறுக்கம் அதிகமாக எண்ண வைக்கிறது.
கயாவில் தான் முதன் முதலில் ஹியோ அரசரை சந்தித்துள்ளார். இறைவன் சுரிரத்னா பெற்றோர்களின் கனவில் தோன்றி கொரிய அரசருக்கு மணமகள் கிடைக்காததால் அவரை அங்கு அனுப்பும்படி சொன்னதாக கூறப்படுகிறது. அரசி தன்னுடைய 157வது வயதில் தான் இயற்கை எய்தினார் என்றும் நம்பப்படுகிறது. கிம்ஹே என்ற இடத்தில் உள்ள இளவரசியின் கல்லறையின் முன்னே ஒரு பகோடா உள்ளது. அது அயோத்தியில் இருந்து இளவரசியே எடுத்து வந்த கற்களால் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
ஆயுத்தா
பதிமூன்றாம் நூற்றாண்டில் சம்குக் யுசா என்ற புத்தகத்தில் அரசர் சூரோவின் மனைவியாக அயோத்தியின் இளவரசி ஹியோவின் பெயர் முதன் முதலில் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்புத்தகம் புத்த பிக்ஷுக்களால் தொகுக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் அவர் ஆயுத்தா என்ற இடத்தில் இருந்து வந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிறகு மாந்திவியலாளர் கிம் பியுங் மோ ஆயுத்தா என்பது அயோத்தியை தான் குறிக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார்
அவரின் நினைவிடம் அயோத்தியில் இருப்பதால் சுமார் 60லட்சம் கரக் குழுமத்தினர் இந்நகரை தங்கள் தாய் வீடாகக் கருதுகின்றனர். தென் கொரியாவில் உள்ளவர்களுக்கு மூதாதையர் வழிபாடு முக்கியம் ஆகையால் அவர்களுக்கு இங்கு வருவது புனிதப் பயணம் அல்லது யாத்திரை போல் ஆகிவிட்டது.
இந்த நினைவிடம் அயோத்தியில் முதலில் 2001ல் திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வரலாற்றாசிரியர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள வட கொரிய தூதர் முதற்கொண்டு அனைவரும் அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அரச வம்சம்
கிம்ஹே கிம் குழுமம், ஹர் குழுமம், இன்ச்சியான் யி குழுமம் ஆகியோர், கிட்டத்தட்ட 70 லட்சம் கொரிய நாட்டினரின் மூதாதையர்கள் இந்த அரச சம்பந்தத்தில் தான் பிறந்தவர்கள் ஆகிறார்கள். கிம் ஹே கிம் குழுமம் மிகப் பிரசித்திப் பெற்ற இனம். இவர்களில் பலர் அதிபர், பிரதமர் போன்ற மிகப் பெரிய அரசு பதவிகளை இது வரை வகித்து வந்துள்ளனர். அந்த வம்சத்தில் பிறந்தவர் தான் கொரிய நாட்டை ஏழாம் நூற்றாண்டில் ஒருங்கிணைத்த கிம் யூ ஷின், நோபெல் பரிசு வாங்கிய கிம் டே ஜங், முன்னாள் முதலமைச்சர் கிம் ஜாங் பில், முன்னாள் அதிபர் கிம் யங்-செம் முதலியோர். மிக உன்னதமான பரம்பரையை தந்துள்ளதால் கொரிய மக்கள் சூரோ அரசியை மிகவும் பெருமையாக நினைக்கின்றனர். கிம்ஹே கிம்ஸ், ஹர்ஹ் இனத்தவர்கள் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்களாம், ஏனென்றால் அவர்கள் அரசர் கிம் சூரா, அரசி ஹியோவின் வம்சாவளியினர் என்பதால். இந்தியாவில் இருக்கும் கோத்திர முறை மாதிரி அங்கும் உள்ளது குறிப்பிடத் தக்கது.
2000 வருடங்களுக்குப் பிறகு இந்த உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்துக்குரியதே. அயோத்தியின் மேயரும் கிம் ஹே நகரத்தின் மேயரும் சகோதர நகர பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நினைவிடத்தில் உள்ள கட்டடத்தில் மூன்று மீட்டர் உயரமுள்ள 7500 கிலோ எடையுள்ள கல் தென் கொரியாவில் இருந்து எடுத்து வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.
நினைவு மண்டபம்
போன மே மாதம் நரேந்திர மோடியின் தென் கொரிய பயணத்தின் போது இளவரசிக்குப் பெரிய நினைவு மண்டபம் அயோத்தியாவில் கட்டப்பட வேண்டும் என்று இரு நாடுகளும் சேர்ந்து முடிவு செய்தது. கொரிய அதிகாரிகளுடன் சமீபத்தில் நடந்த சந்திப்பில் உத்தர் பிரதேச முதன் மந்திரி அந்த நினைவிடம் கொரிய கட்டட கலையமைப்புடன் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். விரைவில் அத்திட்டத்தை அரசு செயல்படுத்த கொரியாவை சேர்ந்த மத்திய காரக் குழுமத் தலைவர் கிம் கி-ஜே விடம் நினைவிடத்துக்கான வரை படத்தைத் தரும்படி கேட்டுள்ளார் உபி முதன் மந்திரி.
நவம்பர் 6 தீபாவளி அன்று தென் கொரிய முதல் மனுஷி கிம் ஜுங் சூக் இப்பொழுது இருக்கும் நினைவிடத்தைப் பெரிதாக்கவும் அழகு படுத்தவும் அடிக்கல் நாட்டினார். இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி, உத்தர் பிரதேச முதன் மந்திரி யோகி ஆதித்தியநாத் பங்கு பெற்றனர். மூன்று லட்ச தீபங்கள் சரயு நதியில் ஏற்றப்பட்டு அழகுற அமைந்தது விழா.
இந்த நல்லுறவால் வியாபாரம் மற்றும் பல்வேறு துறையில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான உறவு தொடர்ந்து வளங்கள் பெருக வழி அமைகிறது.
~பல்லவி