போராட்டத்தால் போராட்டமான மக்களின் வாழ்வு

ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் செம்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் ஒரு தொழிற்சாலை. மின்மாற்றியில் பயன்படும் செப்புப் பட்டை, மின்சார செம்புக் கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோஃப்லோரொ சிலிக்கிக் அமிலம், ஜிப்சம் முதலியனவற்றை தயாரிக்கிறது. மின்சாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதால் நாட்டின் மின்சாரத்துறை வளர்ச்சியிலும் நேரடியாக ராணுவ உபகரணங்கள் தயாரிப்பிற்கு செம்பு வழங்குவதாலும் நாட்டில் ஒரு முக்கியமான தொழிற்சாலையாக பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய செம்பு உருக்காலையாகவும் உலகின் நான்காம் பெரிய செம்பு உருக்காலையாகவும் ஸ்டெர்லைட் தூத்துக்குடி ஆலை திகழ்கிறது. உலகத்தின் 2% சதவிகித செம்பு இங்கு உற்பத்தியாகிறது. அதுவே நமது நாட்டின் 36% செம்பு தேவையை பூர்த்தி செய்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் மீள்விட்டான் கிராமத்தில் தூத்துக்குடி நகரிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் சிப்காட் வளாகத்தில் இந்த தொழிற்சாலை இயங்குகிறது. இந்த தொழிற்சலையை ஒட்டி பல ரசாயன மற்றும் உருக்கு ஆலைகள் அமைந்துள்ளது. கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டங்களாலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழ்நாடு அரசு ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்கிறது. இப்போது ஆலை மூடப்பட்டதனால் வரும் விளைவுகளை பற்றின விரிவானதொரு பார்வை.

1. ஆலைத் தொழிலாளர்கள்

ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாக பணியிலமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் 1100 பேர்கள் , ஒப்பந்த அடிப்படையில் சுமார் 3500 பேர்கள் என 4500 தொழிலாளர்களையும் மறைமுகமாக 25,000 வேலைகளை (மறைமுக வேலைவாய்ப்புகளின் புள்ளிவிவரங்கள் இல்லை, ஆலையின் நிர்வாகம் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த தகவல்) உருவாக்கி தந்த மிகப்பெரிய தொழிற்சாலை.

தமிழ்நாடு அரசு ஆலையை நிரந்தரமாக முடுவதற்கான ஆணையை பிறப்பித்தவுடன் ஸ்டெர்லைட் நிறுவனத்தினால் மறைமுகமாகவும் நேரடியாகவும் பயனடைந்தவர்கள் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதால் அலை மீண்டும் இயங்கும் என்ற நம்பிக்கையில் தனது ஊழியர்கள் சுமார் 1000 பேர்களை பணியிலிருந்து விடுவிக்காமல் உள்ளது. ஆலை மீண்டும் நடக்குமா நடக்காதா என்று கவலையில் தோய்கிறது குடும்பங்கள்.

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருக்க “தாமிரா-1“, “தாமிரா-2” என இரண்டு குடியிருப்புகளை கட்டியிருக்கிறது. போராட்டங்கள் வெடித்து போரட்டக்காரர்கள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து கதவுகளை உடைத்து, வாகனங்களுக்கு தீ வைத்தும், விடுகளுக்கு பொருட்களுக்கு தீ வைத்து சூரையாடியிருக்கிறார்கள். அதனால் ஆலை நிர்வாகம் தனது ஊழியர்கள் அனைவரையும் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

sterlite staff quarters violent protests fire

வெளியூரிலிருந்து வந்த ஊழியர்கள் பெரும்பாலும் வெளியேறி தத்தம் தமது சொந்த ஊர்களுக்கு வேரறுந்த மரம் போல புரப்பட்டு விட்டனர். தூத்துக்குடியை சுற்றியுள்ள ஊழியர்களும் தமது சொந்த இல்லங்களுக்கு சென்று விட்டனர். ஸ்டெர்லைட் ஊழியர்கள் தமிழ்நாடு அரசிடம் ஆலையை திறக்கச் சொல்லி மனு கொடுத்திருக்கிறார்கள், ஆலை நிரந்தரமாக மூடப்பட்டால் அரசு வேலை தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஆலையை நிரந்தரமாக மூடும் உத்தரவு வந்தால் தங்களை ஆலையின் மற்ற கிளைகளுக்கு அனுப்ப வேண்டும் என்பது தொழிலாளர்கள் கோரிக்கை. ஆலை நிர்வாகமும் கடந்த 20 வருடங்களாக தங்களிடம் பணியிலிருக்கும் திறமை வாய்ந்த நம்பிக்கையான பணியாளர்களை நீக்க மனமில்லாமல் நீதிமன்ற உத்தரவு வரும் வரை காக்க வைக்கிறது.

ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கே இந்த நிலை என்றால் ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை மோசம். ஒப்பந்த தொழிலாளர்கள் 3500 பேருக்கும் ‘force majeure’ எனப்படும் எதிர்பாராத நிகழ்வுகளால் ஒப்பந்தத்தை ஒப்பந்த காலம் முடியும் வரை நிறைவேற்ற முடியவில்லை என கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ₹10,000- ₹25,000 மாத சம்பளமாக பெற்று வந்தனர். இன்னொரு வேலை தேடும் வரை கடன் வாங்கியும், வேலை கிடைக்கும் பட்சத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒரு குடும்பத்தில் நிரந்தரமான வருமானம் ஈட்டும் நபர் அதை நம்பி மட்டுமே வாழ்ந்த குடும்பம் புறக் காரணிகளால் வருமானம் இழந்தால் என்ன நிலைக்கு ஆளாகும்? அதுவே ஸ்டெர்லைட் ஆலையின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்தவர்களின் நிலை.

2. மறைமுக வேலைவாய்ப்பு

ஒப்பந்த தொழிலாளர்கள் தவிர்த்து சுமார் 25,000 பேர் ஆலையை நம்பி இருந்தவர் நிலை இன்னும் மோசம். இந்த முடிவினால் யார் என்ன வேலை/தொழில் இழக்கிறார்கள் என பார்ப்போம்:

உணவு: ஆலையின் கேன்டீன், அதன் சப்ளையர்கள், டீக்கடை நடத்தியவர்கள், பேக்கரி, ஓட்டல், பெட்டிக் கடை சிறு வியாபாரிகள், பழக்கடை வியாபாரிகள், மளிகை கடைகள்- அதன் பணியாளார்கள், பெரிய சூப்பர்மார்க்கெட், பால் வியாபாரிகள், சுத்திகரிப்பட்ட தண்ணீர் கேன் விற்பவர்கள், அரிசி வியாபாரிகள், மீன்/மாமிச விற்பனையளர்கள், காய்கறி/கருவாடு விற்கும் பெண்கள், தள்ளுவண்டியில் காய்கறி/பழம் விற்போர், முக்கிய நிகழ்ச்சிகளில் உணவு தயாரிப்போர், வழங்குவோர் என அனைவரும் தொழில்/வேலையிழப்பர்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக சுமார் 20,000 பேருக்கான விளைபொருட்களை வியாபாரிகளுக்கோ கடைகளுக்கோ நேரடியாகவோ வழங்கிய விவசாயிகளின் நிலை பரிதாபம்.

போக்குவரத்து: ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டுனர்கள்/உதவியாளர்கள், வாகன விற்பனை, வாகன இன்சூரன்ஸ், பெட்ரோல்/டீசல் நிலையங்கள்-அதன் ஊழியர்கள், ஃபிட்டர்/மெக்கானிக்குகள், சைக்கிள்/பஞ்சர் கடைகள், உதிரி பாக விற்பனை கடைகள், லாரி/வேன் மெக்கானிக், காரேஜுகள் அத்தனையும் தொழில் இழக்கும் அபாயம்

ஏன் க்ரீஸ் பம்ப்(grease pump) மட்டும் வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறவர்களும் உண்டு!

கட்டுமானம்: கட்டுமானத் துறையே மிகவும் பரிதாபமான நிலைக்குச் செல்லும். இந்திய மக்களின் பொதுவான கனவு ‘ஊரறிய திருமணம் குடியிருக்க வீடு’. இரண்டுமே மிகப்பெரிய சரிவை சந்திக்கும். முக்கியமாக விவசாயம் இல்லாத காலத்தில் கூலித் தொழிலாளர்களுக்கு வயிற்றை நிறப்புவது கட்டுமானப் பணிகளே. நிறைய கட்டுமானப் பொருட்கள் (டைல்ஸ், சிமென்ட், மணல், செங்கல், ஆட்கூலி, ஜன்னல், கதவு, ஆசாரி, சித்தாள், மேசன், கம்பி கட்டுபவர்கள், காங்கிரீட் தளமிடுபவர்கள், கட்டுமான உபகரணங்கள்) நிறைய பணப்புழக்கம் எல்லாம் முடங்கும்.

ஆலை குடியிருப்பில் குடியிருப்பவர்களும் ஒப்பந்த பணியாளர்களும் மறைமுக வேலைவாய்ப்பு பெறுபவர்களும் தங்களுக்கென சொந்த வீடு வாங்க எண்ணி வங்கியில் கடனோ சீட்டு போட்டோ பணம் திரட்டியிருப்பர். அந்த கடனை அடைக்க இனி பொருள் தேடும் வரை வங்கிகள் வாசலில் நிற்கும்; அந்த சூழ்நிலையில் கூனிக் குறுகி மனம் நொந்து புழுங்கி அழுபவர்கள் நிலை நினைத்தால் பெருமூச்சும் பரிதாபமுமே மிஞ்சுகிறது.

மின்சார/மின்னணு சாதனங்கள் சார்ந்த: வீட்டு உபயோக சாதனங்கள்(டி.வி. வாஷிங் மஷின், ஏ.சி. ஃப்ரிட்ஜ், இஸ்திரிப்பெட்டி, மிக்சி, ஃபேன், ), மொபைல், உப கருவிகள் (accessories), இணைய இணைப்புகள், டெலிபோன் இணைப்புகள், ரீசார்ஜ் கடைகள், மின்கம்பி, மோட்டார் தொழிலும் ஒரு 30,000 பேருக்கான தேவையை இழக்கும்.

மற்றவைகள்: சவரக்கடை, பாத்திரக்கடை, துணிக்கடைகள், பேப்பர் கடை, புத்தகக் கடை, காயலான் கடை, துணி தைக்கும் டைலர்கள், பழைய துணி தைக்கும் தள்ளுவண்டிக்காரர்கள், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள், தோட்டக்காரர்கள், இரும்பு/சாக்கு/ப்ளாஸ்டிக் வியாபாரிகள், நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள்(event organisers), திருமண மண்டபங்கள், பேன்சி கடைகள்(fancy stores) வீட்டு உபயோகப் பொருள் கடைகள்(வாளி, மக், துடைப்பம், குப்பைத்தொட்டி, குடம் முதலியன வாங்க)

லாரி உரிமையாளர்கள் / டிரைவர்கள்: இவர்களை தனியே குறிப்பிடக் காரணம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உருக்காலை மட்டுமே. ஆலைக்கான மூலப்பொருட்கள் யாவும் வெளியிலிருந்து கொணரப்படுபவையாதலால் வெளியிலிருந்து வரும் மூலப்பொருட்கள், அமிலங்கள் கொண்டு செல்லும் டாங்க்கர் லாரிகள், தகடுகளை ஏற்றிச்செல்லும் 10-20 சக்கரங்கள் கொண்ட லாரிகள், உருக்குவதற்கான தாதுக்களை ஏற்றி வரும் டிப்பர்கள், தாதுக்கள் அள்ள பெரும் இயந்திரங்கள், சிறியதிலிருந்து பெரியது வரை பழு தூக்கிகள் என அத்தனையும் வேலையில்லாமல் நிற்கும்.
1000 லாரி/டேங்க்கர் லாரிகளுக்கு அனுதினமும் வேலை இருப்பதால் சுமார் 9000 லாரி ஓட்டுனர்களும் உதவியாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்தது ஸ்டெர்லைட் ஆலை. பெரிய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் வங்கியில் கடன் வாங்கியே இந்த பெரிய நில ஊர்த்திகளை வாங்க முடியும். கடன் தொகை திருப்பி செலுத்த வாகனங்களை விற்க வேண்டும் இல்லையேல் நகை நில புலங்களை அடகு வைத்தாலோ விற்றாலோ தான் உண்டு.

25,000 பேர் எனக் கூறுவது சும்மா கட்டுறை எழுதுவதற்காக என நினைத்தவர்கள் மேலுள்ள கடைகளையும் அந்த தொழில்கள் சார்ந்து வாழும் பணியாளர்களைப் பற்றியும் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும். நன்றாக பணம் புழங்கக் கூடிய சுமார் 2 பெரிய ஊர்களை(சென்னை அம்பத்தூர்/திருச்சி பெல் அளவுக்கு ஒப்பிட்டுப் பாருங்கள்) மொத்தமாக வெறுமையாக்கினால் எப்படி இருக்கும்??

3. பணியாளர் குடும்பங்கள்

வெளியில் கடை வைத்திருப்பவர்கள் சிறு வியாபாரிகள் கூட வேறு இடத்திற்கு கடையை மாற்றி வணிகம் செய்யலாம். ஆனால் நிரந்தர ஊழியர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் அடுத்து வேலைக்கு செல்லும் வரை மிகக் கடினம். திருமணம் போன்று வேறு எதாவது  நிகழ்ச்சிகள் நடந்தாலும் இனி அதனை தள்ளி மற்றொரு நாளில் வேறொரு இடத்தில் மாற்றி வைக்க நேரிடும். முதியவர்களும், நோயர்களும், குழந்தைகளும், கல்லூரி/பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். முதியோர்கள் மருத்துவரை மாற்றவேண்டும்; நோயர்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மாற வேண்டும்.

குழந்தைகள்: இது பள்ளிகள் தொடக்க காலமாதலால் பள்ளி மாற்றம், இட மாற்றம் போன்றவை குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். ஆலை தனது ஊழியர்களின் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு பள்ளி தலைமைகளுக்கு கூட கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் கூறுகிறது.

குடியிருப்புகள் சூரையாடப்பட்டபொழுது குழந்தைகள் மிரண்டு போய் “நிறுத்தச் சொல்லுங்கள்” “நிறுத்தச் சொல்லுங்கள்” என கத்தி வெள்ளித்திரையில் கண்ட வன்மங்களை நேரில் கண்டுள்ளனர். இச்சம்பவங்களால் வளரும் குழந்தையின் மனம் தவித்து, அந்த பாதிப்பினால் சமூகத்தை வெறுக்காதென என்ன நிச்சயம்?

4. பொருட்களின் விலையேற்றம்

copper prices graph2001ஆம் ஆண்டு கோலார் தங்க வயல் மூடப்பட்ட பின் தங்கத்தின் விலை 7 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏனென்றால் தங்க உற்பத்தி நம் கையில் இல்லை. இந்தியர்களின் தங்க மோகம் தெரியாத உலக நாடுகளே இல்லை. இனி செம்பும் அதே நிலை தான்!

  • ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய பொழுது ஒரு கிலோ செம்பு = ₹425
    ஸ்டெர்லைட் ஆலை நிறுத்திய பின்பு ஒரு கிலோ செம்பு = ₹460
  • ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய பொழுது ஒரு கிலோ கந்தக அமிலம் = ₹4
    ஸ்டெர்லைட் ஆலை நிறுத்திய பின்பு ஒரு கிலோ கந்தக அமிலம் = ₹16

5. தொழில்கள்(ஆலை தயாரிப்புகளை வைத்து)

ஸ்டெர்லைட் ஆலையின் மொத்த செம்பு உருக்குத் திறன் ஆண்டுக்கு 4 லட்சம் டன்கள்(4,00,000 tonnes).

ஸ்டெர்லைட் ஆலையின் முக்கிய தயாரிப்பான செம்பு மூலப்போருளாகக் கொண்டு செயல்படும் தொழில்கள் யாவும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். நாடு மாற்று எரிசக்தி வாகனங்களை நோக்கி பயணிக்கும் தருணத்தில் நாட்டின் பெரிய செம்பு உருக்கு தொழிற்சாலை மூடப்படுவது அவ்வளவு உசிதமல்ல. முக்கியமாக மின்சார வாகனச்சந்தை இந்தியாவில் உருவாகி வரும் இந்த காலத்தில் செம்பு பொருட்களை இறக்குமதி செய்தால் அன்னியச் செலாவணி கூடுதலாக ஈட்ட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையின் தயாரிப்புகளை வைத்து நிறைய தொழில்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் இயங்கிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக பாதிக்கப்படப் போகும் தொழில்கள் மின்மாற்றி(transformer), மின்சார கம்பிவடம்(electrical wires), பேட்டரி, மின் மோட்டார், ஏ.சி, வாஷிங் மெசின், மின்னணு சாதனங்கள்(electronics); மேற்கூறியவை அனைத்தும் கணிசமாக விலை கூடும். கோவையில் உள்ள மோட்டார் தயாரிப்பாளர்கள் ஒரு மின் மோட்டர் சுமார் ₹2000- ₹5000 வரையிலும், மின்சாரக் கேபிள் மீட்டருக்கு ₹5-₹10 வரையும், மற்ற மின்சார உபயோக பொருட்கள் 5-10% விலை அதிகமாகும் என்று கணிக்கிறார்கள்.

இது அல்லாமல் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் கந்தக அமிலம் ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தி; தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், தில்லி, ஹரியானா மாநிலங்களில் செயல்படும் ப்ளீச்சிங்(Bleaching), சாயமிடுதல்(dyeing), டாய்லெட் கிளீனர்(domex, mr muscle..) இன்னும் பல தொழில்களுக்குத் தேவையான கந்தக அமிலம் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனமாக ஸ்டெர்லைட் இருக்கிறது. இனி கந்தக அமிலத்திற்கு கூட வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டும்.

விவசாய உரம்: மிக முக்கியமாக ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் பாஸ்பாரிக் அமிலம் தான் டை-அம்மோனியம்-பாஸ்பேட்(DAP) எனும் விவசாய உரம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள். ஸ்டெர்லைட்டுக்கு அருகிலேயே செயல்படும் கோரமண்டல் கெமிக்கல்(coromandel), ஸ்பிக்(SPIC) போன்ற உர உற்பத்தி நிறுவனங்கள் இனி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை உருவாகும். 40,000 டன் பாஸ்பாரிக் அமிலம் தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கான தேவை. இனி தென்மாநிலங்களில் செயல்படும் கெமிக்கல்/விவசாய உர உற்பத்தி தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்தை நம்பியிருக்க வேண்டும்.

சுமார் 800 முதல் 1000 சிறிய/நடுத்தர தொழில்கள் ஸ்டெர்லைட்டை நம்பி இயங்கி வந்த நிலையில், இப்போது மூலப்பொருள் விலை உயர்ந்திருப்பதாகவும், மேலும் இதே நிலை நீடித்தால் தொழில்களை விட்டு வெளியேறும் அபாயம் உருவாகியுள்ளது.


தூத்துக்குடி துறைமுகத்தின் மொத்த வருமனத்தில் 8% ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் கிடைத்திருக்கிறது.

6. புதிய நிறுவனங்கள் வர தயக்கம்

தமிழ்நாட்டில் முதலீடுகளை  ஈர்க்கக்கூடிய வளம் இருந்தும், அதற்கான அரசியல் சூழல் இங்கு இல்லை. இது மட்டுமின்றி, உள்கட்டமைப்பு, மின்சார பிரச்சனை, அடிப்படை கட்டுமானப் பிரச்னை, வங்கியில் கடன் தர மறுத்தல், தொழிலாளர் பிரச்சனை, கட்சிகளின் தலையீடால் தொழில் நலிவு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. தமிழ்நாட்டில் தொழில் துறை கடந்த சில  ஆண்டுகளாக மிகவும் தேக்கநிலையில் உள்ளது. இதற்கு காரணம், தொழில் துறையில் அதிக முதலீடுகள் நடைபெறவில்லை. ஒரு பெரிய நிறுவனம் கொடுக்கும் வேலையை வைத்து தொழில் நடத்தும் சிறிய தொழில்கள் தமிழ்நாட்டில் ஏராளம்.

குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மோசமான காலத்திலிருந்து தமிழகத்திற்கு வர விரும்பிய நிறுவனங்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவுக்கு தொழில் தொடங்க செல்கின்றனர். இதனால், அந்த மாநிலங்களில் தொழில் வளர்ச்சியில் முன்னேறி செல்கிறது. சென்னை, கோவை, வேலூர், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இதன் எதிரொலியாக தமிழ்நாடு இந்த வருடம் தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் 15ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை நிறுத்தியதால் ஜவுளி, மின்சார மோட்டார், சோப்பு, மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் தொழில்கள் நலிவடையும் என பார்த்தோம். இனி ஸ்டெர்லைட் ஆலையின் தயாரிப்புகளை நம்பி தமிழ்நாட்டில் தொழில் தொடங்கலாம் என்று திட்டம் வைத்திருந்த நிறுவனங்கள் யாவும் வேறு மாநிலங்களுக்குச் செல்லும்.

7. தவறான வழிகாட்டுதல்/ தேவையில்லாத போராட்டங்கள்

கியா மோட்டார்ஸ்(KIA motors), இசுசு கார் நிறுவனம்(izusu), கொபெல்கோ(kobelco), நிஸ்ஸான்(Nissan), பியோலேக்ஸ்(Piolax) ஆகிய ஜப்பானிய நிறுவனங்கள் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள ஸ்ரீசிட்டி(Sricity) நோக்கி சென்றது. ஏன் சென்னை மெட்ரோவிற்கு பெட்டிகள் தயாரிக்கும் ஆல்ஸ்டோம்(ALSTOM) நிறுவனம் கூட அங்கு சென்றுவிட்டது. Och-Ziff PE Fund, Credit Asia Capital, Bedrock Llc US and Chintalapati Holdings ஆகிய பெரும் நிதியை கையாளும் நிதிநிறுவனங்களும் அங்கு சென்றுவிட்டன. இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனமும் ஸ்ரீசிட்டி சென்றது.

இந்தியாவின் டெட்ராய்ட்(Detroit) என அழைக்கப்பட்ட சென்னை இனி அந்த பெயரை இழக்கும்.

எத்தனை வேலைவாய்ப்புகளை இழந்தோம், எத்தனை கோடி முதலீட்டை இழந்தோம்? வருடத்திற்கு 30,000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடிகள் வரை முதலீடுகளை ஈர்த்த தமிழ்நாடு இன்று வெறும் 3,000 கோடிகளை ஈர்த்திருக்கிறது.

காரணம்?

  1. அரசின் மேல் நம்பிக்கையின்மை
  2. தேவையில்லாத போராட்டங்கள்.

முதல் காரணம் ஒரு தேர்தல் முடிந்தால் மாறலாம், இரண்டாவது காரணத்தை எப்படி சரி செய்வது? சிலரின் தூண்டுதலால் நடந்த போரட்டங்காளின் விளைவை சிறு/குறு தொழில்கள் நடத்துபவர்கள் இப்பொழுது உணரத் துவங்கியுள்ளார்கள்.

காட்டுமிராண்டிகள் வாழும் ஊர் என்று தமிழ்நாட்டில் வாழும் சில விஷமிகள் சொல்லும் கர்நாடகா தான் வருடாவருடம் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாம் இடத்திற்குள் உள்ளது. 4,000 வருட தமிழக வரலற்றில் தொழில் இல்லாமல் இருந்தது வெகு சில காலம் மட்டுமே!!

8. வேலையிழப்பால் போராடத்துணியும் இளைஞர்கள்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு நுட்ப அறிவில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு(பொறியாள்ர்கள், தொழிநுட்பப் பணியாளர்கள், டிப்ளமோ படித்தவர்கள், வணிகம்/கணக்குப்பதிவியல் படித்தவர்கள்). இந்தியாவிலிருக்கும் 4500 பொறியியல் கல்லூரிகளில் 590 தமிழ்நாட்டில்(சுமார் 3 லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி வெளியே அனுப்பும்) இன்று சில கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட இல்லை. காரணம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குமளவுக்கு வேலை வாய்ப்புகளை கொடுக்க முடியாத நிலை.


பட்டதாரிகள் நிலை இப்படியாக இருக்கும்பொழுது, நிறுவனங்களையும் மூடிவிட்டால் மேலும் பல படித்த அனுபவம் வாய்ந்த திறமையான பணியாளர்களும் போராடத் துணிவர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணையும் இந்தியர்கள் பெரும்பாலும் மெத்தப் படித்தவர்கள் என்று செய்தியை நாம் அனைவரும் சில மாதங்களுக்கு முன் கேட்டிருப்போம். 1960களில் தெலுங்கானா பகுதிகளில் நக்சல் இயக்கம் பெரிதாக உருவெடுக்கிறது. நமது இளைஞர்கள் அந்த வழியில் செல்லக் கூடாதென அப்போதைய முதல்வர் காமராசர் ஐயா தமிழ்நாடு முழுதும் ஏராளமான தொழில்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறார். அந்த புள்ளி தான் தமிழ்நாட்டை இந்தியாவின் தொழில் முன்னோடி மாநிலமாக இந்தியாவை மாற்றியிருந்தது.

9. சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும்

          கோலார் தங்க வயல் மூடப்பட்ட பின் அங்கிருக்கும் தொழிலாளர்களின் நிலை படு மோசமானது. அத்தனை பேரும் கூலிகளானர்கள். விவசாயத்திற்கும் கட்டுமான வேலைகளுக்கும் இன்ன பிற வருமானம் குறைவான வேலைகளுக்கு கொத்தடிமைகளைப் போல அழைத்துச் செல்லப்பட்டர்கள். இன்றும் அதே நிலை. கோலார் தங்க வயலை திறக்கச் சொல்லி மனுக்கள், பல போராட்டங்கள் என்று அந்த மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். பெங்களூரில் நடக்கும் கொலை கொள்ளை சிறிய திருட்டுகள் வாகனத் திருட்டு என்று ஈடுபடுபவர்களில் கணிசமானவர்கள் கோலாரை சேர்ந்தவர்கள்.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டால் அதே நிலை வருமோ?

10. அரசு வரி வருமானம்

ஸ்டெர்லைட் ஆலை வருடத்திற்கு சுமார் ₹1000 கோடிகளை வரியாக மத்திய மாநில அரசுகளுக்கு கொட்டிக் கொடுத்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஊழியர்கள், ஸ்டெர்லைட் ஆலையை சார்ந்த நிறுவனங்களின் வருமான வரி கணக்கு மட்டும் ₹200-300 கோடிகள் இருக்கும். 2015ஆம் ஆண்டு தூத்துக்குடி மண்டலத்தில் வரி செலுத்துபவர்களில் நட்சத்திர விருது வாங்கியிருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை.

வருடாவருடம் ஸ்டெர்லைட் காப்பர் செலுத்திய வரிக் கணக்கினை பெற முடியவில்லை; 2015ஆம் ஆண்டின் கணக்கு மட்டுமே கிடைத்தது.

11. அன்னியச் செலாவணி

        4 லட்சம் டன் செம்பு, 12 லட்சம் டன் கந்தக அமிலம், சுமார் 40,000 டன் பாஸ்பாரிக் அமிலம் அகியவைகளை இறக்குமதி செய்ய நேரிடும். நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தேவை வெளிநாடுகளின் கையில் பறிபோகும். பிறகு தங்கத்தின் விலை போல வெளிநாடுகள் வைத்தது தான் சட்டம்.

மேற்கண்ட பொருட்களின் இறக்குமதிக்காக 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அன்னியச் செலாவணியை அதிகமாய் இந்தியா செலவு செய்ய வேண்டி இருக்கும். இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு சரிவை சந்திக்கும். இதனால் வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்யும் மற்ற தொழில்களுக்கும் நஷ்டம் ஏற்படும்.

அல்லது 3 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா அதிக ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும்(இதன் வாய்ப்பு மிகக் குறைவு). அல்லது அன்னியச் செலாவணி பற்றாக்குறைக்காக உலக வங்கியில் கடன் வாங்க வேண்டும். கடனுக்கு வட்டி கட்ட மக்களிடம் வரிவிதிப்பை அதிகமாக்க வேண்டும்.

இந்தியாவின் அதிக இறக்குமதியாகும் பொருட்கள்

  1. கச்சா எண்ணெய்
  2. தங்கம்

நம் நாட்டின் அன்னியச் செலாவணியை கபளீகரம் செய்வதே இவை இரண்டும் தான். இனி அடுத்து போராட்டங்களால் தொழிற்சாலைகள் மூடப்பட்டால் அன்றாடத் தேவைகளையும் வெளிநாட்டில் அடகு வைத்து விட்டால் இந்தியா சுதந்திர நாடு என்று சொல்வது ஒரு இழிவான செயல்.

12. போராட்டத்தின் பின் விளைவுகள் (அரசாங்கத்தின் பார்வையில்)

ஸ்டெர்லைட் போராட்டம் ஓய்ந்துவிட்டது இனி பிரச்சனை இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் உள்ள நிறுவனங்களை இழுத்து மூட பல போராட்டங்களை நடத்த சில அமைப்புகள் முயற்சி எடுக்கின்றன. எதிர் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளின் தாய் அமைப்புகள் தாங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக போரட்டத்தை கையிலெடுப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

அரசின் மேல் நம்பிக்கை: மக்களுக்கு அரசின் மேல நம்பிக்கை குறைவதால் சட்டம் ஒழுங்கு பிரக்சனைகள் உருவாகும். புதிய அமைப்புகள் பிரபலமாக இதே உத்தியை பயன்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும். அரசாங்கம் இருந்தால் அடிமைகளாக இருப்பீர்கள் என்ற கட்டுக்கதைகளை பரப்பும்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அரசாங்கத்தின் மேல் பல குறைகள் இருந்தாலும் இந்த அமைப்பு இருக்கும் வரையே அனைவருக்கும் பாதுகாப்பு. உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் நிலையான நம்பிக்கை யான ஆட்சி இல்லை, உள்ளாட்சி அமைப்புகள் இல்லை. இருந்தாலும் நமக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகின்றன; எதனால்? அரசாங்க அமைப்புகள் அதிகாரிகள் இருப்பதனால். பால், பெட்ரோல், காய்கறிகள், அரசு சேவைகள், நீதிமன்றம், இணையம், தொலைபேசி இவையனைத்திற்கும் மேலாக சமூக ஒழுங்கு.

போலீஸ் மேல் நம்பிக்கையின்மை: இது ஒரு புதிய யுக்தி காவலரை தாக்குவது, காவல் நிலையத்தை உடைப்பது, காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்புவது, காவல்துறைக்கு எதிராக மக்களை திருப்புவது போன்ற நடவடிக்கைகளில் சில அமைப்புகள் ஈடுபடுகின்றன. காவல்துறை அமைப்பு மேல் பயம் இல்லை என்றால் உங்கள்/பக்கத்து வீட்டில் ஒரு குன்றிமணி தங்கம்/ உலோகம் மிஞ்சுமா? நமது உறவினர்கள் தான் காவல்துறை அமைப்பிற்குள் இருக்கிறார்கள்; அவர்கள் ஒன்றும் மக்களுக்கு தீங்கு நினைக்க மாட்டர்.

போராட்டம் தான் தீர்வு: இது முக்கியமான பிரச்சனை. போராட்டம் வேண்டும்; நியாயமானதும் கூட. ஆனால், அந்த விஷயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்பது சிறுபிள்ளைத்தனம். அரசாங்கம் எப்படி கையாளுகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மெத்த படித்த இளைஞர்கள் தான் இன்று போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். தனக்கு பிடிக்காத/தவறு செய்யும் ஒரு விஷயத்தை ஒழிப்பது நிரந்தரமாக தீர்வாக இருக்காது.

ஜல்லிக்கட்டை எடுத்துக்கொள்வோம், ஜல்லிக்கட்டு போட்டி நடந்தபொழுது சில தவறுகள் நடந்தது, அதற்காக ஜல்லிக்கட்டை முற்றிலுமாக நிறுத்த சொல்லி தான் பீட்டா அமைப்பு இந்தியாவில் தோற்றது.

ரயிலை எடுத்துக்கொள்வோம், விபத்துகள் அனுதினமும் நடக்கும். அதனால் ரயில் அனைத்தையும் நிறுத்திவிட முடியுமா? ரயில் விபத்துகளுக்கான காரணங்களை கண்டு பிடித்து அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து உயிர்ச்சேதங்களை குறைக்கலாம்.

பி.கு: இந்த முழுக் கட்டுரையில் ஸ்டெர்லைட் ஆலை நல்லதா இல்லை கெடுதல் செய்யுமா என்பது பற்றி இல்லை. ஸ்டெர்லைட் ஆலை மூடிய பின்னர் மக்கள், அரசு, பணம், தொழில்கள் ஆகியவற்றிற்கு நடக்கும் விளைவுகளை பற்றி மட்டும் கண்டோம்!!

ஆலையை திறக்கக் கூறி தூத்துக்குடியை சுற்றி உள்ள ஊர் பொதுமக்களும், ஸ்டெர்லைட் நிறுவன நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தினமும் செய்திகளில் காண முடிகிறது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை தனது பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR funds) நிதியில் செய்து வந்த அத்தனை உதவிகளையும் தூத்துக்குடி மக்கள் இழப்பர்.

ஊருக்கே உப்பிட்ட தூத்துக்குடி மக்கள் இன்று உப்பு கூட வாங்க முடியாத நிலையைக் கண்டு மனம் வெதும்புகிறது.

~ @noyyalan

REFERENCES

[1] – https://timesofindia.indiatimes.com/city/madurai/trucks-begin-to-shift-sulphuric-acid-from-sterlite/articleshow/64640452.cms

[2] – https://timesofindia.indiatimes.com/city/chennai/sterlite-workers-face-uncertain-future/articleshow/64442388.cms

[3] – https://timesofindia.indiatimes.com/business/india-business/sterlite-copper-smelter-shut-down-pushes-up-copper-cost/articleshow/63931820.cms

[4] – https://timesofindia.indiatimes.com/city/madurai/villagers-dependent-on-sterlite-want-firm-reopened/articleshow/64923981.cms

[5] – https://timesofindia.indiatimes.com/city/bengaluru/karnataka-accounts-for-44-of-indias-investment-plans/articleshow/61587492.cms

[6] – https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sterlite-workers-on-charm-offensive-to-reopen-tamil-nadu-plant/articleshow/65015192.cms

[7] – https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/tamil-nadu-government-orders-permanent-closure-of-sterlite-plant-in-tuticorin/articleshow/64355730.cms

[8] – https://economictimes.indiatimes.com/jobs/decision-to-shut-tuticorin-plant-will-put-30000-jobs-on-line-sterlite/articleshow/64372676.cms

[9] – https://economictimes.indiatimes.com/sterlite-industries-(india)-ltd-(amalgamated)/infocompanyhistory/companyid-12977.cms

[10] – https://economictimes.indiatimes.com/industry/indl-goods/svs/metals-mining/tuticorin-operations-closure-to-cause-monthly-loss-of-usd-210-million-sterlite-copper-ceo/articleshow/64484252.cms

[11] – https://www.thenewsminute.com/article/sterlite-vs-sterlite-how-copper-smelter-has-left-its-own-employees-divided-82475

[12] – https://www.thenewsminute.com/article/why-tamil-nadu-no-longer-one-india-s-top-10-investment-destinations-77143

[13] – https://www.businesstoday.in/current/corporate/sterlite-copper-tuticorin-protests-jobs-plant-shut-pollution-killed-police/story/277575.html

[14] – https://www.businesstoday.in/current/corporate/sterlite-plant-shutdown-in-tuticorin-could-trigger-temporary-spike-in-copper-price/story/277914.html

[15] – https://www.businesstoday.in/current/economy-politics/tamil-nadu-govt-seeks-dismissal-of-petition-challenging-closure-of-sterlite-copper/story/280397.html

[16] – https://www.business-standard.com/article/economy-policy/analysts-see-limited-impact-of-vedanta-s-sterlite-copper-plant-closure-118053000016_1.html

[17] – https://www.business-standard.com/article/companies/vedanta-s-sterlite-copper-shutdown-hits-chemicals-units-in-tamil-nadu-118053000989_1.html

[18] – https://www.business-standard.com/article/current-affairs/either-reopen-plant-or-give-us-jobs-sterlite-employees-to-tn-govt-118070200293_1.html

[19] – https://www.thehindu.com/news/cities/chennai/industrialists-concerned-over-decision-on-sterlite/article24018347.ece

[20] – https://www.thehindu.com/news/national/tamil-nadu/closure-evokes-mixed-feelings/article24017932.ece

[21] – https://www.thehindu.com/news/national/tamil-nadu/exiting-thoothukudi-not-on-the-cards-says-sterlite-ceo-p-ramnath/article23982482.ece

[22] – https://www.thehindu.com/business/Industry/hero-motocorp-to-set-up-1600-cr-plant-at-sri-city/article23333611.ece

[23] – https://www.thehindu.com/news/national/karnataka/Karnataka-ranks-third-in-FDI-flow-Economic-Survey/article15618958.ece

[24] – https://www.thehindu.com/news/national/tamil-nadu/closure-evokes-mixed-feelings/article24017932.ece

[25] – https://www.thehindubusinessline.com/economy/maharashtra-ncr-attract-49-of-fdi-inflows-into-india/article6871003.ece

[26] – https://in.reuters.com/article/vedanta-smelter-india/vedanta-says-indian-copper-smelter-shutdown-causing-deficit-price-rise-idINKCN1IJ1WO

[27] – https://in.reuters.com/article/india-sterlite-copper-smelter-tuticorn/sterlite-industries-copper-smelter-ignites-toxic-debate-idINDEE93803120130409

[29] – https://www.moneycontrol.com/news/business/sterlite-plant-closure-may-turn-india-into-copper-importer-2579437.html

[30] – https://www.moneycontrol.com/news/business/vedanta-blames-ngos-for-sterlite-copper-plant-closure-2721881.html

[31] – http://www.india.com/news/india/full-list-of-states-with-most-investment-potential-in-india-2332740/

[32] – http://trak.in/tags/business/2012/02/16/most-preferred-investment-destinations-india/

[33] – https://www.bankbazaar.com/gold-rate/gold-rate-trend-in-india.html?ck=Y%2BziX71XnZjIM9ZwEflsyDYlRL7gaN4W0xhuJSr9Iq7aMYwRm2IPACTQB2XBBtGG&rc=1

[34] – http://greenbusinesscentre.com/energyaward2017presentations/Metal/5.%20Sterlite%20Copper,%20Tuticorin..pdf

[35] – https://indianexpress.com/article/india/anti-sterlite-protest-900-workers-families-told-to-leave-tuticorin-5190102/

[36] – https://www.livemint.com/Industry/lfNbBwsomcfrEs5fjsD0qK/Is-Chennai-losing-out-to-SriCity.html

[s1] – https://www.sterlitecopper.com/know-the-truth/

[s2] – https://sterlitecopper.com/sustainability/Corporate-Social-Responsibility/?id=1

[s2] – https://sterlitecopper.com/pdf/Sterlite_Copper_Bags_Star_Tax_Payer_Award.pdf

[s3] – http://www.vedantaresources.com/media/233191/faqs-on-sterlite-copper-june6.pdf

[s4] – http://www.vedantaresources.com/media/178102/ved_ltd_press_release_final_july_2015.pdf

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.