போராட்டத்தால் போராட்டமான மக்களின் வாழ்வு

ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் செம்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் ஒரு தொழிற்சாலை. மின்மாற்றியில் பயன்படும் செப்புப் பட்டை, மின்சார செம்புக் கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோஃப்லோரொ சிலிக்கிக் அமிலம், ஜிப்சம் முதலியனவற்றை தயாரிக்கிறது. மின்சாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதால் நாட்டின் மின்சாரத்துறை வளர்ச்சியிலும் நேரடியாக ராணுவ உபகரணங்கள் தயாரிப்பிற்கு செம்பு வழங்குவதாலும் நாட்டில் ஒரு முக்கியமான தொழிற்சாலையாக பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய செம்பு உருக்காலையாகவும் உலகின் நான்காம் பெரிய செம்பு உருக்காலையாகவும் ஸ்டெர்லைட் தூத்துக்குடி ஆலை திகழ்கிறது. உலகத்தின் 2% சதவிகித செம்பு இங்கு உற்பத்தியாகிறது. அதுவே நமது நாட்டின் 36% செம்பு தேவையை பூர்த்தி செய்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் மீள்விட்டான் கிராமத்தில் தூத்துக்குடி நகரிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் சிப்காட் வளாகத்தில் இந்த தொழிற்சாலை இயங்குகிறது. இந்த தொழிற்சலையை ஒட்டி பல ரசாயன மற்றும் உருக்கு ஆலைகள் அமைந்துள்ளது. கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டங்களாலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை வைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழ்நாடு அரசு ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்கிறது. இப்போது ஆலை மூடப்பட்டதனால் வரும் விளைவுகளை பற்றின விரிவானதொரு பார்வை.

1. ஆலைத் தொழிலாளர்கள்

ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாக பணியிலமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் 1100 பேர்கள் , ஒப்பந்த அடிப்படையில் சுமார் 3500 பேர்கள் என 4500 தொழிலாளர்களையும் மறைமுகமாக 25,000 வேலைகளை (மறைமுக வேலைவாய்ப்புகளின் புள்ளிவிவரங்கள் இல்லை, ஆலையின் நிர்வாகம் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த தகவல்) உருவாக்கி தந்த மிகப்பெரிய தொழிற்சாலை.

தமிழ்நாடு அரசு ஆலையை நிரந்தரமாக முடுவதற்கான ஆணையை பிறப்பித்தவுடன் ஸ்டெர்லைட் நிறுவனத்தினால் மறைமுகமாகவும் நேரடியாகவும் பயனடைந்தவர்கள் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதால் அலை மீண்டும் இயங்கும் என்ற நம்பிக்கையில் தனது ஊழியர்கள் சுமார் 1000 பேர்களை பணியிலிருந்து விடுவிக்காமல் உள்ளது. ஆலை மீண்டும் நடக்குமா நடக்காதா என்று கவலையில் தோய்கிறது குடும்பங்கள்.

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருக்க “தாமிரா-1“, “தாமிரா-2” என இரண்டு குடியிருப்புகளை கட்டியிருக்கிறது. போராட்டங்கள் வெடித்து போரட்டக்காரர்கள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து கதவுகளை உடைத்து, வாகனங்களுக்கு தீ வைத்தும், விடுகளுக்கு பொருட்களுக்கு தீ வைத்து சூரையாடியிருக்கிறார்கள். அதனால் ஆலை நிர்வாகம் தனது ஊழியர்கள் அனைவரையும் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

sterlite staff quarters violent protests fire

வெளியூரிலிருந்து வந்த ஊழியர்கள் பெரும்பாலும் வெளியேறி தத்தம் தமது சொந்த ஊர்களுக்கு வேரறுந்த மரம் போல புரப்பட்டு விட்டனர். தூத்துக்குடியை சுற்றியுள்ள ஊழியர்களும் தமது சொந்த இல்லங்களுக்கு சென்று விட்டனர். ஸ்டெர்லைட் ஊழியர்கள் தமிழ்நாடு அரசிடம் ஆலையை திறக்கச் சொல்லி மனு கொடுத்திருக்கிறார்கள், ஆலை நிரந்தரமாக மூடப்பட்டால் அரசு வேலை தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஆலையை நிரந்தரமாக மூடும் உத்தரவு வந்தால் தங்களை ஆலையின் மற்ற கிளைகளுக்கு அனுப்ப வேண்டும் என்பது தொழிலாளர்கள் கோரிக்கை. ஆலை நிர்வாகமும் கடந்த 20 வருடங்களாக தங்களிடம் பணியிலிருக்கும் திறமை வாய்ந்த நம்பிக்கையான பணியாளர்களை நீக்க மனமில்லாமல் நீதிமன்ற உத்தரவு வரும் வரை காக்க வைக்கிறது.

ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கே இந்த நிலை என்றால் ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை மோசம். ஒப்பந்த தொழிலாளர்கள் 3500 பேருக்கும் ‘force majeure’ எனப்படும் எதிர்பாராத நிகழ்வுகளால் ஒப்பந்தத்தை ஒப்பந்த காலம் முடியும் வரை நிறைவேற்ற முடியவில்லை என கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ₹10,000- ₹25,000 மாத சம்பளமாக பெற்று வந்தனர். இன்னொரு வேலை தேடும் வரை கடன் வாங்கியும், வேலை கிடைக்கும் பட்சத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒரு குடும்பத்தில் நிரந்தரமான வருமானம் ஈட்டும் நபர் அதை நம்பி மட்டுமே வாழ்ந்த குடும்பம் புறக் காரணிகளால் வருமானம் இழந்தால் என்ன நிலைக்கு ஆளாகும்? அதுவே ஸ்டெர்லைட் ஆலையின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்தவர்களின் நிலை.

2. மறைமுக வேலைவாய்ப்பு

ஒப்பந்த தொழிலாளர்கள் தவிர்த்து சுமார் 25,000 பேர் ஆலையை நம்பி இருந்தவர் நிலை இன்னும் மோசம். இந்த முடிவினால் யார் என்ன வேலை/தொழில் இழக்கிறார்கள் என பார்ப்போம்:

உணவு: ஆலையின் கேன்டீன், அதன் சப்ளையர்கள், டீக்கடை நடத்தியவர்கள், பேக்கரி, ஓட்டல், பெட்டிக் கடை சிறு வியாபாரிகள், பழக்கடை வியாபாரிகள், மளிகை கடைகள்- அதன் பணியாளார்கள், பெரிய சூப்பர்மார்க்கெட், பால் வியாபாரிகள், சுத்திகரிப்பட்ட தண்ணீர் கேன் விற்பவர்கள், அரிசி வியாபாரிகள், மீன்/மாமிச விற்பனையளர்கள், காய்கறி/கருவாடு விற்கும் பெண்கள், தள்ளுவண்டியில் காய்கறி/பழம் விற்போர், முக்கிய நிகழ்ச்சிகளில் உணவு தயாரிப்போர், வழங்குவோர் என அனைவரும் தொழில்/வேலையிழப்பர்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக சுமார் 20,000 பேருக்கான விளைபொருட்களை வியாபாரிகளுக்கோ கடைகளுக்கோ நேரடியாகவோ வழங்கிய விவசாயிகளின் நிலை பரிதாபம்.

போக்குவரத்து: ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டுனர்கள்/உதவியாளர்கள், வாகன விற்பனை, வாகன இன்சூரன்ஸ், பெட்ரோல்/டீசல் நிலையங்கள்-அதன் ஊழியர்கள், ஃபிட்டர்/மெக்கானிக்குகள், சைக்கிள்/பஞ்சர் கடைகள், உதிரி பாக விற்பனை கடைகள், லாரி/வேன் மெக்கானிக், காரேஜுகள் அத்தனையும் தொழில் இழக்கும் அபாயம்

ஏன் க்ரீஸ் பம்ப்(grease pump) மட்டும் வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறவர்களும் உண்டு!

கட்டுமானம்: கட்டுமானத் துறையே மிகவும் பரிதாபமான நிலைக்குச் செல்லும். இந்திய மக்களின் பொதுவான கனவு ‘ஊரறிய திருமணம் குடியிருக்க வீடு’. இரண்டுமே மிகப்பெரிய சரிவை சந்திக்கும். முக்கியமாக விவசாயம் இல்லாத காலத்தில் கூலித் தொழிலாளர்களுக்கு வயிற்றை நிறப்புவது கட்டுமானப் பணிகளே. நிறைய கட்டுமானப் பொருட்கள் (டைல்ஸ், சிமென்ட், மணல், செங்கல், ஆட்கூலி, ஜன்னல், கதவு, ஆசாரி, சித்தாள், மேசன், கம்பி கட்டுபவர்கள், காங்கிரீட் தளமிடுபவர்கள், கட்டுமான உபகரணங்கள்) நிறைய பணப்புழக்கம் எல்லாம் முடங்கும்.

ஆலை குடியிருப்பில் குடியிருப்பவர்களும் ஒப்பந்த பணியாளர்களும் மறைமுக வேலைவாய்ப்பு பெறுபவர்களும் தங்களுக்கென சொந்த வீடு வாங்க எண்ணி வங்கியில் கடனோ சீட்டு போட்டோ பணம் திரட்டியிருப்பர். அந்த கடனை அடைக்க இனி பொருள் தேடும் வரை வங்கிகள் வாசலில் நிற்கும்; அந்த சூழ்நிலையில் கூனிக் குறுகி மனம் நொந்து புழுங்கி அழுபவர்கள் நிலை நினைத்தால் பெருமூச்சும் பரிதாபமுமே மிஞ்சுகிறது.

மின்சார/மின்னணு சாதனங்கள் சார்ந்த: வீட்டு உபயோக சாதனங்கள்(டி.வி. வாஷிங் மஷின், ஏ.சி. ஃப்ரிட்ஜ், இஸ்திரிப்பெட்டி, மிக்சி, ஃபேன், ), மொபைல், உப கருவிகள் (accessories), இணைய இணைப்புகள், டெலிபோன் இணைப்புகள், ரீசார்ஜ் கடைகள், மின்கம்பி, மோட்டார் தொழிலும் ஒரு 30,000 பேருக்கான தேவையை இழக்கும்.

மற்றவைகள்: சவரக்கடை, பாத்திரக்கடை, துணிக்கடைகள், பேப்பர் கடை, புத்தகக் கடை, காயலான் கடை, துணி தைக்கும் டைலர்கள், பழைய துணி தைக்கும் தள்ளுவண்டிக்காரர்கள், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள், தோட்டக்காரர்கள், இரும்பு/சாக்கு/ப்ளாஸ்டிக் வியாபாரிகள், நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள்(event organisers), திருமண மண்டபங்கள், பேன்சி கடைகள்(fancy stores) வீட்டு உபயோகப் பொருள் கடைகள்(வாளி, மக், துடைப்பம், குப்பைத்தொட்டி, குடம் முதலியன வாங்க)

லாரி உரிமையாளர்கள் / டிரைவர்கள்: இவர்களை தனியே குறிப்பிடக் காரணம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உருக்காலை மட்டுமே. ஆலைக்கான மூலப்பொருட்கள் யாவும் வெளியிலிருந்து கொணரப்படுபவையாதலால் வெளியிலிருந்து வரும் மூலப்பொருட்கள், அமிலங்கள் கொண்டு செல்லும் டாங்க்கர் லாரிகள், தகடுகளை ஏற்றிச்செல்லும் 10-20 சக்கரங்கள் கொண்ட லாரிகள், உருக்குவதற்கான தாதுக்களை ஏற்றி வரும் டிப்பர்கள், தாதுக்கள் அள்ள பெரும் இயந்திரங்கள், சிறியதிலிருந்து பெரியது வரை பழு தூக்கிகள் என அத்தனையும் வேலையில்லாமல் நிற்கும்.
1000 லாரி/டேங்க்கர் லாரிகளுக்கு அனுதினமும் வேலை இருப்பதால் சுமார் 9000 லாரி ஓட்டுனர்களும் உதவியாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்தது ஸ்டெர்லைட் ஆலை. பெரிய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் வங்கியில் கடன் வாங்கியே இந்த பெரிய நில ஊர்த்திகளை வாங்க முடியும். கடன் தொகை திருப்பி செலுத்த வாகனங்களை விற்க வேண்டும் இல்லையேல் நகை நில புலங்களை அடகு வைத்தாலோ விற்றாலோ தான் உண்டு.

25,000 பேர் எனக் கூறுவது சும்மா கட்டுறை எழுதுவதற்காக என நினைத்தவர்கள் மேலுள்ள கடைகளையும் அந்த தொழில்கள் சார்ந்து வாழும் பணியாளர்களைப் பற்றியும் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும். நன்றாக பணம் புழங்கக் கூடிய சுமார் 2 பெரிய ஊர்களை(சென்னை அம்பத்தூர்/திருச்சி பெல் அளவுக்கு ஒப்பிட்டுப் பாருங்கள்) மொத்தமாக வெறுமையாக்கினால் எப்படி இருக்கும்??

3. பணியாளர் குடும்பங்கள்

வெளியில் கடை வைத்திருப்பவர்கள் சிறு வியாபாரிகள் கூட வேறு இடத்திற்கு கடையை மாற்றி வணிகம் செய்யலாம். ஆனால் நிரந்தர ஊழியர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் அடுத்து வேலைக்கு செல்லும் வரை மிகக் கடினம். திருமணம் போன்று வேறு எதாவது  நிகழ்ச்சிகள் நடந்தாலும் இனி அதனை தள்ளி மற்றொரு நாளில் வேறொரு இடத்தில் மாற்றி வைக்க நேரிடும். முதியவர்களும், நோயர்களும், குழந்தைகளும், கல்லூரி/பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். முதியோர்கள் மருத்துவரை மாற்றவேண்டும்; நோயர்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மாற வேண்டும்.

குழந்தைகள்: இது பள்ளிகள் தொடக்க காலமாதலால் பள்ளி மாற்றம், இட மாற்றம் போன்றவை குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். ஆலை தனது ஊழியர்களின் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு பள்ளி தலைமைகளுக்கு கூட கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் கூறுகிறது.

குடியிருப்புகள் சூரையாடப்பட்டபொழுது குழந்தைகள் மிரண்டு போய் “நிறுத்தச் சொல்லுங்கள்” “நிறுத்தச் சொல்லுங்கள்” என கத்தி வெள்ளித்திரையில் கண்ட வன்மங்களை நேரில் கண்டுள்ளனர். இச்சம்பவங்களால் வளரும் குழந்தையின் மனம் தவித்து, அந்த பாதிப்பினால் சமூகத்தை வெறுக்காதென என்ன நிச்சயம்?

4. பொருட்களின் விலையேற்றம்

copper prices graph2001ஆம் ஆண்டு கோலார் தங்க வயல் மூடப்பட்ட பின் தங்கத்தின் விலை 7 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏனென்றால் தங்க உற்பத்தி நம் கையில் இல்லை. இந்தியர்களின் தங்க மோகம் தெரியாத உலக நாடுகளே இல்லை. இனி செம்பும் அதே நிலை தான்!

  • ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய பொழுது ஒரு கிலோ செம்பு = ₹425
    ஸ்டெர்லைட் ஆலை நிறுத்திய பின்பு ஒரு கிலோ செம்பு = ₹460
  • ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய பொழுது ஒரு கிலோ கந்தக அமிலம் = ₹4
    ஸ்டெர்லைட் ஆலை நிறுத்திய பின்பு ஒரு கிலோ கந்தக அமிலம் = ₹16

இந்த கட்டுரையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் எப்படி ஸ்டெர்லைட் ஊழியர்களையும், ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சார்ந்திருந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என பார்த்தோம்.

அடுத்த பகுதியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை சார்ந்த தொழில்கள் எப்படி நலிவடையும் என்பதை காண்போம்…

~ @noyyalan

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.