
பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் நடந்த துயர சம்பவங்களுக்கு பின், இந்திய நாட்டில் ஒட்டுமொத்த இந்தியர்களின் பொதுவான எண்ணம் அண்டை நாட்டுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என்பதாகவே இருந்தது. அன்று நடந்தவற்றையும் அதன் பின் நிலவிய மக்களின் மனப்போக்கினை பற்றியும் தெளிவாக இங்கு பதிவிட்டிருந்தேன்.
அன்று முதல், ஒவ்வொரு இந்திய குடிமகனும், நம் ராணுவத்திற்கு பலம் சேர்க்க குரல் எழுப்பிய வண்ணமே இருந்தனர். அதுமட்டுமல்ல, ராணுவத்தை எதிர்த்து தேச விரோத குரல் எழும்பிய போதெல்லாம் அக்குரலை சட்ட ரீதியாக நொறுக்கிய வண்ணமே இருந்தனர். என்னை பொறுத்தமட்டில், இது நம் நாட்டில் பல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக வந்த நல்ல மாற்றம், இருப்பினும் பொது மக்கள் மனதில் ஓர் ஏமாற்றம்.
ஆம், அது வேறு ஒன்றும் இல்லை. நம் சகோதர்கள் 44 பேரை அநியாயமாக கொன்று குவித்த கோழைகளை பழிதீர்க்கும் எண்ணமே அது. இது போன்று ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போது நாமும் திரும்பி அடிக்க வேண்டும் என்று தோன்றுவது நியாயம் தானே?

சாதாரண பொது மக்களாகிய நமக்கே இப்படி ஒரு உந்துதல் இருக்குமேயானால், இந்த நாட்டை பாதுகாத்து கொண்டிருக்கும் நம் இராணுவத்திற்கு இல்லாமல் போகுமா?அப்படி என்றால் இதற்க்கு முன் ஏன் பதிலடி கொடுக்க படவில்லை என்று வினவும் மக்களா நீங்கள்? அப்படி என்றால், உங்கள் வினாவிற்கு விடை கிடைக்க மேற்கொண்டு படியுங்கள்.
இராணுவத்திற்கு மட்டுமே இந்த எண்ணம் இருக்குமானால், அதை எந்நாளும் செயல்படுத்த முடியாது. ஏனெனில், நம் நாட்டை பொருத்தமட்டும், இது போன்ற முடிவுகளை எடுக்க பிரதமர் அலுவலகம் பச்சை கோடி காட்டினால் தான் முடியும். இந்த காரணத்தினாலேயே இதற்கு முன் நடந்த மும்பை தாக்குதல் முதல் நமது பார்லிமென்ட் தாக்குதல் வரை எதற்கும் பதிலடி தரப்படாமல் இருந்து வந்தது. வெறும் பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்று கூறி கொண்டு நம் இராணுவத்தின் கைகளும் கட்டப்பட்டிருந்ததோ என்றே தோன்றுகிறது.
இன்று மனித நேயம் என்று கொடி பிடிக்கும் மூடர்கள் அனைவரும் ஒன்றை உணர மறுக்கின்றனர். மனித நேயம் மனிதர்களிடம் மட்டுமே காட்ட வேண்டியது. மிருகங்களிடம் அல்ல. நன்றாக சிந்தித்து பாருங்கள். உயிரை கொல்வது பாவம் என்று கூறும் இவர்கள், அன்று இறந்த 44 ராணுவ வீரர்களின் உயிரை பற்றி கவலைப்பட்டதுண்டா? அவர்களுக்கு உயிர் இல்லையா?அல்லது அவரை உயிருக்கு உயிராய் நேசிக்க ஒரு குடும்பம் இல்லையா?
அப்படி ஒரு கொடூர செயல் புரிந்த மிருகத்தினை கொல்வது கொலையாகாது. அது வேட்டை!!!
ஒரு உயிரை கொல்வது பாவம் என்று கூறும் அதே நீதி நூல்கள் தான், கயவர்களின் உயிரை பறிக்கவும் கூறுகிறது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது வெறும் கவிதைக்கும் உவமைக்கும் கூறியது அல்ல. இன்று அதை நாம் நம் கண் முன்னே நடந்த தாக்குதலில் பாகிஸ்தானிற்கு புரிய வைத்துள்ளோம். நேருக்கு நேர் நின்று போர் புரிந்திருந்தால் கூட, நீ நிராயுதபாணியாக நிற்கும் போது “இன்று போய் நாளை வா” என்று வழியனுப்பி இருப்போம். ஆனால் கோழையான நீயோ எங்கள் முதுகில் குத்தி விட்டாய்.
போர் களத்தில் இறந்து கிடக்கும் தன் மகனை காண ஓடி வரும் தாய் கூட அவனது இறப்பிற்கு வருந்தும் முன், இறப்பிற்கான காயம் எங்கு என்று தான் பார்ப்பாள். ஒரு வேளை அவன் தன் புறமுதுகில் வேல் பாய்ந்து இறந்திருந்தால் பாலூட்டிய தன் கொங்கையையே அறுத்தெறிந்த வீர மகள் பிறந்த இந்த மண்ணில், கோழைகளுக்கு ஏது இடம்?அதனாலேயே 26.02.19 அன்று நடந்த இந்த தாக்குதல் இன்றியமையதாக இருக்கிறது.
நேருக்கு நேர் மோத துணிவின்றி தற்கொலை படை கொண்டு கோழைபோல் தாக்குதல் நடத்தி திரும்பி செல்ல ஒரு எலும்பு கூட கிடைக்க வில்லை அந்த கயவருக்கு. நாடு விட்டு நாடு சென்று தாக்குதல் நடத்துவது பெரிதில்லை. எங்களிடமும் உண்டு, நாட்டிற்காக இன்னுயிரை துறக்க பாரத தேசத்தில் பல்லாயிரம் மக்கள். ஆனால், அப்படி தன் மக்களின் சடலங்களின் மேல் வெற்றி கனியை பறிக்க எந்த வீரமுள்ள தலைவனும் சிந்திக்க மாட்டான்.
அங்கு சென்று தாக்குதல் நடத்துவதை விட, தாக்குதல் நடத்தி பத்திரமாக நம் மக்கள் திரும்பி நம் நாட்டிற்குள் வர வேண்டும் என்பதையே ஒரு தலைவன் விரும்புவான். அப்படி பட்ட தலைமை தான் இன்று நம் பாரத நாட்டிற்கு கிடைத்துள்ளது. பெருமை கொள்ளுங்கள்.ஆகவே தான், பன்னிரண்டு விமானங்கள் கொண்டு ஆயிரக்கணக்கான எடையுள்ள வெடிகுண்டுகளை தூவியவண்ணம் பாகிஸ்தான் நாட்டில் இருந்த தீவிரவாத பயிற்சி முகாமின் மீது தீவிர தாக்குதல் முடித்து வெற்றிகரமாக மீண்டும் நம் நாடு திரும்பியுள்ளார்கள்.
எனவே, தாக்குதல் நடத்திய நம் நாட்டு வீரர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டும் வேளையில், நம் நாட்டின் பிரதமர் அவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
வீட்டை துறந்தார்
வெளியில் வந்தார்
மக்களை கண்டார்
அவர்கள்
மனதை வென்றார்
இது நம் பாரத மண்ணில் பிறந்த சுவாமி விவேகானந்தருக்கு மட்டும் அல்ல, இன்னும் பல சரித்திர நாயகர்களுக்கு மிகவும் பொருந்தும். இன்றைய பொழுதினில் இது நம் பிரதமரை தவிர யாருக்கும் பொருந்தாது என்றே கூறலாம். ஆம், அவரை எதிர்க்க ஒரு கூட்டமே இருப்பினும், அவரை கொண்டாட கட்டுக்கடங்கா உள்ளங்கள் இன்று பாரத தேசத்தில் உள்ளது. இதை அவரே எதிர்ப்பார்த்திருப்பாரா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் தர்மம் தலை காக்கும் என்பதிற்கு இணங்க அவரது முன்வினை நிச்சயம் அவருக்கு துணை நிற்கும்.
நேற்று அவர் புண்ணிய நதியாம் கங்கையில் நீராடுவதை கண்டு அவரது இறப்பிற்காக ஏங்கிய பலரும் இன்று வெட்கி தலை குனியும் நிலையில் உள்ளார்கள்.அமைதியாக அங்கே நீராடி பசுபதியை வணங்கி வந்தவர் மனதில் புலி போன்று இப்படி ஒரு செயல்திட்டம் ஓடி கொண்டிருந்தது என்றால், நம்ப முடிகிறதா?
இது நாள் வரை, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாரதம் பதிலடி தரவில்லை என்று கதறிய வாய் அனைத்தும் இன்றோ, மீண்டும் கதறுகிறது, பதிலடி தந்த காரணத்தால். இது தேர்தல் நோக்கில் எடுக்க பட்ட முடிவு என்று கதறுகிறார்கள். ஒரு தேர்தலுக்காக தன் சொந்த நாட்டு வீரர்களின் உயிரை பணயம் வைக்க வேண்டிய நிலையில் பிரதமர் இல்லை.
இதை எவர் கூறினாலும் மக்கள் அதை கண்டு எள்ளி நகையாடுவார்களே அன்றி, ஒருபோதும் நம்ப மாட்டார்கள். எங்கே இது அவரின் அரசியல் பயணத்திற்கு ஆதாயமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தால் கூக்குரல் எழுப்பிய வண்ணம் உள்ளார்கள் அவரது எதிரிகள்.
அந்த தெய்வம் துணை நிற்கும் போது இவர்கள் எவ்வளவு சேற்றை வாரி இறைக்க நினைத்தாலும் அது மலர்களாக மாறி அவரின் தோள்களுக்கு அழகு சேர்க்கும். எனவே, அங்கே கதறுபவர்கள் கதறிக்கொண்டே இருக்கட்டும்.
இந்த நாடே அவர் பின் வர எத்தனித்துள்ளது. நூறு சதவீத மக்களும் பின்வர எதிர்ப்பார்ப்பது சாத்தியமில்லை. ஏனெனில், தீயவர்கள் எங்கும் உண்டு. அவர்கள் இல்லையென்றால், நல்லவர்களை எங்கனம் அறிவது?பாவம் தீயவர்கள், அவர்களும் இருந்து விட்டு போகட்டும், இருந்து இன்னும் நடக்க உள்ளவைகளை கண்டு கதறிக்கொண்டிருக்கட்டும்.
அன்று யூரி-யில் நடந்த தவறுக்கு, காலாற் படை கொண்டு அவர்கள் இடுப்பிலே எட்டி உதைத்தாயிற்று.இன்று புல்வாமா–வில் நடந்த தாக்குதலுக்கு விமான படை கொண்டு அவர்கள் வீட்டிற்க்கே சென்று, நடு மண்டையில் நச்சென்று குட்டியாயிற்று.
இன்னும் அவர்கள் உணரவில்லை என்றால்? இருக்கவே இருக்கிறது நமது கப்பல் படை!!!
மறவாதீர், இன்று பாரத நாட்டின் பாதுகாப்பு தலைமை இருப்பது ஓர் பெண்ணிடம். பெண் என்னும் சக்தி-யிடம்.
அவரை ஊறுகாய் மாமி என்று கிண்டலடித்து மக்கள் அனைவரும் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் அவர் இருக்கிறார். ஊறுகாய் செய்வதும் உருளை அரிவதும் பெண்ணிற்கு இழுக்கில்லை. ஒவ்வொரு தாயும் பெருமையுடன் செய்யும் செயலே இவையாவும். ஊறுகாய் போடும் கை , கயவர்களை ஊறவைத்து துவைத்தும் எடுக்கும் என்பது ஏனோ அவர்களுக்கு புரியாமல் போனது. இப்போதாவது புரிந்திருக்கும் என்று நம்புவோம்.
கயவர்களும் ஒரு நாள் திருந்தி நல்லவர்களாக மாறுவர் என்ற நம்பிக்கையில்.
உங்கள் மகேஷ்