
பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிய $20 பில்லியன் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தின் மூலம் 111 மில்லியன் கழிப்பறைகள் ஐந்து வருடங்களில் கட்டி முடிக்கப்படும். 2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதி செய்தலே இத்திட்டித்தின் நோக்கமாகும். இது மக்களின் சுகாதாரம் பெருகுவதற்கான திட்டமாக அமைந்துள்ளது.
லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசன்ஸ் என்வைரன்மெண்டல் ஹெல்த் குழுமத்தின் இயக்குநர் வால் கர்டிஸ் இத்திட்டத்தின் தாக்கத்தைப் பெரிதாகப் புகழ்ந்துள்ளார். இது உலகத்திலேயே மிகப் பெரிய வெற்றிகரமான நடத்தை முறை மாற்றம் கொண்டுவந்துள்ள பிரச்சாரம் என்று கூறியுள்ளார். இந்தியாவில் நடக்கும் இப்பெரு மாற்றம் மிகவும் வியப்புக்குரியது என்று சொல்லியிருக்கிறார்.
உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation – WHO) நரேந்திர மோடியின் தலைமையில் ஸவச் பாரத் திட்டத்தின் பலனாக 2014ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 2019க்குள் வயிற்றுப்போக்கினாலும் புரதச் சத்துக் குறைப்பாட்டினாலும் ஏற்பட இருந்த ஒரு இலட்சத்தி எண்பதினாயிரம் இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று ஓர் அறிக்கை ஆகஸ்ட் மூன்றாம் தேதி சமர்ப்பித்துள்ளது. மேலும் மூணு இலட்சம் இறப்புக்களை இனி வரும் காலங்களில் இத்திட்டம் முழுமைடையும்போது தடுக்க உதவும். வெட்ட வெளியில் உடற் கழிவுகளை கழிப்பது குறைந்துள்ளதால் உண்டான நன்மை இது.
2014ல் 45% இருந்த கழிப்பிடங்கள் நாலு வருடங்களில் 89% அதிகரித்து 8 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகளில் வெட்ட வெளியில் காலைக் கடன்களை மக்கள் கழித்து வந்ததால் தொற்று நோய் பாதிப்பு அதிகம் இருந்தது. கழிப்பிடங்கள் கட்டப்படதானால் மக்கள் ஆரோக்கியத்தில் உண்டான முன்னேற்றத்தை WHO ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. கழிப்பறைகள் கட்டி அதனால் ஏற்பட்ட சுகாதார நலனினால் 14 மில்லியன் வருட ஆரோக்கிய வாழ்க்கை காலம் இந்தக் கால கட்டத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் புள்ளி விவரக் கணக்குகள் தெரிவிக்கின்றன.
2014ல் சுகாதாரமற்ற வெட்ட வெளிக் கழிப்பிடங்களால் தொற்று ஏற்பட்டு வயிற்றுப்போக்கினால் அவதியுற்று வந்த 199 மில்லியன் மக்கள் எண்ணிக்கை ஸ்வச் பாரத் திட்டம் தொடங்கிய பிறகு தற்போது குறைந்து முற்றிலுமாகவே அக்டோபர் 2019ல் இல்லாமல் போய்விடும் என்று WHO அறிக்கை சொல்கிறது.
மோடியின் கிளீன் இந்தியா/ஸ்வச் பாரத்/தூய்மை இந்தியா திட்டம் அமலுக்கு வரும் முன் நாட்டில் (1.1 பில்லியன் குடிமக்களில்) பாதிப் பேர் கடற்கரை, நதி ஓரங்களை, மைதானங்களை தான் கழிப்பிடமாகப் பயன் படுத்தி வந்தனர். இதனால் உணவுப் பொருட்களும், குடிநீரும் அசுத்தம் அடைந்தன. அதன் காரணமாக தொற்று நோய் பரவி வயிற்றுப்போக்குத் தவிர குழந்தைகளிடம் வளர்ச்சி குறைபாடுகளும் ஏற்பட்டன. இதனால் உலக வங்கியின் கணிப்புப் படி நாட்டிற்கு GDP தொகையில் 6.4%
அனாவசிய செலவாகியது.
நல்ல கழிப்பிடங்கள் என்பது குடிமக்களின் அத்தியாவசியத் தேவை, முக்கியமாக பெண்களுக்கு. அத்தேவை மோடி பிரதமராகும் வரை பூர்த்தி செய்யப்படவில்லை. மோடி அவர்கள் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்று முதன் முதலாக ஆகஸ்ட் 15 2014 அன்று செங்கோட்டையில் இருந்து பேசிய சுதந்திர தின உரையில் பெரிய பெரிய திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக தன்னுடைய மிகப்பெரிய இலக்கு மக்கள் வெளியிடங்களை கழிப்பிடமாகப் பயன் படுத்தாமல் பாமர மக்களுக்கு உதவும்படியான நல்ல கழிப்பறைகள் கட்டித் தர அரசு மேற்கொள்ளப் போகும் ஸ்வச் பாரத் திட்டத்தைப் பற்றி அறிவித்தது மக்களிடையே ஓர் ஆச்சர்ய அலையை ஏற்படுத்தியது. மக்களுடனான நெருக்கத்தை, அவர்களின் தேவையை அறிந்து முக்கியமாக பெண்களின் சிரமத்தை அறிந்து உதவ அவர் மேற்கொண்ட இந்த முயற்சி மிகவும் குறிப்பிடத்தக்கது.
இம்மாற்றத்தைக் கொண்டுவர அரசு வெவ்வேறு விதமாக சுகாதாரமற்ற சூழல் பிரச்சினையை அணுகியது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை சுகாதார பிராண்ட் அம்பாசடராகத் தேர்வு செய்தது. அவர் நடித்துள்ள படம் ‘டாய்லட்- ஒரு காதல் கதை’ டாய்லட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படம், ஏழை எளியவரிடம் ஒவ்வொரு வீட்டுக்கும் டாய்லட் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்ப்பது மூலம் கழிப்பறையின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுகிறது.
மேலும் கழிப்பறை சுத்தம் செய்யும் பொருட்களை விற்பனை செய்பவர்களும் கழிப்பறை கட்ட தேவையான பொருட்களை விற்பவர்களும் அவர்களுக்கு அதிக கழிப்பறைகள் இருப்பதால் ஆதாயம் உள்ளதால் கழிப்பறை கட்டுவதில் அதிக விழிப்புணர்வை அவர்கள் பங்குக்கு மக்களிடம் ஏற்படுத்துகின்றனர்.
இந்திய தொழில் துறைக்கு இத்திட்டம் பெரிய அளவில் வியாபாரம் பெருக உந்துதலாக உள்ளது. கட்டுமானத் துறையில் பொருட்களின் விற்பனை 81% உயர்ந்துள்ளது. கழிப்பறைக்குத் தேவையான சுகாதார பாகங்களின் விற்பனை 48% அதிகரித்துள்ளது. சேனிடரிவேர் விற்கும் நிறுவனங்களின் பங்கு விலைகள் இந்த நான்கு வருடங்களில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளன.
இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருக்க வேண்டும் என்பதே. நாலு வருடங்கள் முன்பு 40% வீடுகளே கழிப்பறை வசதியுடன் இருந்தது. இன்று 85%. 47,000 கிராமங்களே வெளியிடத்தில் அசுத்தம் செய்யாமல் இருந்தனர். இப்பொழுது 384,000. சுமார் 65% கிராமங்கள் சுகாதாரத்தின் மேன்மையை புரிந்து கொண்டு செயல்படுகின்றன.
புள்ளிவிவரம் கொடுத்திருக்கும் இந்த நடத்தையில் மாற்றம் (behaviour change ) மிகவும் அற்புதமான சாதனை. கிராமப்புற பெண்கள் வெட்ட வெளியில் காலைக் கடன்களை செய்யத் தேவையில்லை. பெரும்பாலான கிராமங்களுக்கு இந்த மாற்றம் வந்துவிட்டது. இந்தியா முழுவதும் இந்த மாற்றம் மிக விரைவில் வந்துவிடும். இதனால் பெண்களின் கெளரவம் காப்பாற்றப்படுகிறது. மதிப்பு கூடுகிறது. இந்த மாற்றம் நான்கு வருடங்களில் ஏற்பட்டது தான் மிகப் பெரிய சாதனை.
தொற்று நோய் பரவுவது குறைந்ததினால் மக்கள் வேலைக்கு செல்லும் நாட்கள் அதிகரித்தன, மருத்துவ செலவும் அவர்களுக்குக் குறைந்தன, நோயினால் உண்டாகும் இறப்பு விகிதமும் கணிசமாக குறைந்துள்ளது. இப்படி நாட்டு மக்களுக்கு இத்திட்டத்தினால் பல முனைகளில் நன்மை பெருகியுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு திறன் மேம்பாடு, மனித ஆதாரங்கள், பழக்க வழக்க மாற்றத்திற்கான தொடர்பு, அறிவாற்றல் பகிர்வு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்டவை மூலம் மாநில அரசுகளுக்கு குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது. சிறந்த நடைமுறைகளை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள, பல்வேறு இடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க இணைய வகுப்புகள் ஆகியவற்றுக்காக ஸ்வச்சங்கரஹ் எனப்படும் தூய்மை இந்தியா இயக்கத்திற்கான இணையதளம் போன்ற முயற்சிகள், இத்திட்டத்தில் தொழில்நுட்பம் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
மேலும் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக்கொள்ளவும், ஊக்கமளிக்கவும் பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான பயிலரங்குகளும், நிகழ்ச்சிகளும் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிர்வாகிகள், குறிப்பாக பெண் நிர்வாகிகள் போன்ற அடிமட்ட பிரமுகர்கள் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் கூடுதல் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
நகரித்தில் உள்ளவர்களுக்கு முதலில் இந்தப் பிரச்சினையின் தாக்கமே அதிகம் இருந்திருக்காது அதனால் இப்பிரச்சினையின் தீர்வையும் பெரிதாக எண்ணமாட்டார்கள். ஆனால் நகரங்களிலும் டாய்லட் வசதிகளின் எண்ணிக்கை பள்ளி கல்லூரி வளாகங்களில் அதிகரிக்க செய்திருக்கிறது இத்திட்டம்.ஆனால் இது அசாத்தியமான செயல்படுத்த மிகக் கடுமையான திட்டம். ஆண்டாண்டு காலமாக மக்கள் பொது இடங்களில் அசுத்தப் படுத்தி வந்திருக்கின்றனர். அவர்களுடைய நடத்தையை மாற்ற வேண்டும், அவர்களின் எண்ணத்தை மாற்றவேண்டும். அது எளிதான காரியம் அல்ல.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை ஏற்றோர் இது மிகக் கடுமையான மலையையேறும் சிரமத்துக்கு ஒப்பானது என்று தெரிந்து கொண்டனர். நடைமுறை படுத்த இயலாது என்றும் நினைத்தனர். ஆனால் இந்த மாற்றம் நிகழ்ந்தது. எப்படி மெட்ரோ ரயில் திட்டத்தின் வெற்றிக்குக் காரணமாக E.ஸ்ரீதரன் இருந்தாரோ அதே மாதிரி இந்தத் தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றிக்கும் காரண கர்த்தாவனவர் பரமேஸ்வரன் ஐயர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, முன்னாள் உலக வங்கியில் பனி புரிந்தவர், வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து வந்தவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்தியுள்ளார்.
மிகவும் எளிமையானவர் ஐயர். மோடி ஒரு பொது கூட்டத்தில் இவரை புகழ்ந்து இவர் மேல் மீடியா வெளிச்சத்தைப் பாய்ச்சினாலும் அந்தப் பெருமையை தன் குழுவினருக்கே சமர்ப்பிக்கிறார் ஐயர்.
அவர் மகாத்மா காந்தி மாதிரி ஒரு கர்ம வீரர். தெலுங்கானாவில் ஒரு இரட்டைக் குழி கழிப்பிடத்தினுள் புகுந்து தன் கைகளாலேயே மலத்தை அள்ளிக் கொட்டினார். அவர் இதை செய்தது இதனால் எந்த பாதிப்பும் வராது என்று அங்கிருந்தவர்களுக்கு உணர்த்தவே. தலைவராகவே அவர் முதலில் தொண்டனாக செயலை முடித்துத் தன் குழுவையும் வழி நடத்துவதில் அவர் வல்லவர். வர இத்துறையில் 13 நாடுகளில் பனி புரிந்திருக்கிறார். குழிக்குள் இறங்கி சுத்தம் செய்வதை இனிமையான பணியாக கருதுகிறார்!!
இவர் தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப் படுத்தப் பயன்படுத்தும் மாடல் “PM-CM-DM-VM model”, பிரதம மமதிரி இலக்கை நிர்ணயிக்கிறார், முதல் மந்திரி மாநில அளவில் ஆதரவு தருகிறார், மாவட்ட நீதிபதி (district magistrate) லோகல் மக்களை வழி நடத்துகிறார், கிராம சேவகர்கள் (“village motivators” ) மக்களை உந்தி செயல்பட வைக்கின்றார்கள். இந்திய மக்கள் பொதுவில் மிகவும் சுத்தமானவர்கள் நடுவில் பல காலமாக சுகாதாரமற்ற பழக்கங்களை சூழ்நிலையால் மேற்கொண்டு வந்துள்ளனர் என்பது பரமேஸ்வரன் ஐயரின் கருத்து.
93% மக்கள் கழிப்பறை வசதியிருந்தால் அதை பயன்படுத்துகின்றனர் என்று சமீபத்திய புள்ளி விவர சர்வே சொல்கிறது. அது ஐயரின் கணிப்புப்படி மிகப் பெரிய சாதனை. இதற்கு முக்கிய காரணம் அவர் மேற்கொண்ட பிரச்சாரம். வியட்நாமில் இந்தப் பிரச்சினையை தீர்க்க அவர் வெளியிடத்தில் அசுத்தம் செய்தால் குழந்தைகள் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும் என்று சொல்லி மக்களின் பழக்கத்தை மாற்றினார். இந்தியாவில் வெளியிடத்தில் அசுத்தம் செய்தால் நீர் நிலைகள் அசுத்தம் அடைந்து அந்தத் தண்ணீரை நீங்கள் குடிக்கும்போது உங்கள் மலத்தை நீங்களே திரும்ப உட்கொள்கிறீர்கள் என்று பிரச்சாரம் செய்தார், இது மிகச் சிறந்த பலனை தந்தது. மக்கள் வெட்ட வெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துவதை நிறுத்தினர். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததில் பெண்களின் பங்கே அதிகம் என்றார் ஐயர்.
ஐயரின் இலக்கு 2 அக்டோபர் 2019க்குள் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளுக்குள் இந்தியாவை தூய்மை இந்தியாவாக மாற்றுவது. அவர் ஆபிசில் ஒரு பெரிய வெள்ளை போர்ட் உள்ளது. அதில் இத்தட்டத்தை முழுதுமாக அமல் படுத்த இன்னும் எத்தனை நாட்கள் பாக்கி என்று எண்ணிக்கையை காட்டிக் கொண்டு! இதுவரை எட்டு கோடி கழிப்பறைகளை அவர் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டிருக்கு. நாலு இலட்சம் கிராமங்கள் வெளியிடத்தில் அசுத்தம் செய்யப்படாத கிராமங்களாக மாறியுள்ளன. காலக்கெடு அச்சமுறுத்துகிறதா என்கிற கேள்விக்கு இல்லை அது தான் தன்னை ஊக்கப்படுத்துகிறது என்கிறார், நிச்சயமாக இலக்கை அடைந்து விடுவோம் என்று உறுதி அளிக்கிறார்.
~பல்லவி
மோடியின் நல்ல சிந்தனைக்கு இம்மாதிரி நல்ல உள்ளங்கள் உறுதுணையாக செயல் படுவது நாம் செய்த பேறு. வாழ்க பாரதம்! வாழ்க நம் பிரதமர் மோடி! வாழ்க தூய்மை இந்தியா திட்டம்! வாழிய இத்திட்டத்தில் தலைமையேற்றும் தொண்டாற்றியும் செயல்பட்ட அனைத்து மக்களும்!
இது தொடர்பான இன்னொரு பதிவு – தூய்மை இந்தியா இயக்கம் – பொது மக்களின் பங்களிப்பு முக்கியம்.