
2019 ஆம் ஆண்டு காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க அனைத்து வீடுகளிலும் பொது இடங்களிலும் கழிப்பறை கட்டுவது என உறுதியோடு தொடங்கப்பட்ட திட்டம். கழிப்பறை கட்டுவதோடு மட்டும் நில்லாமல் வீடுகளையும் சாலைகளையும் பொது இடங்களை சுத்தமாக வைக்க பிரச்சாரங்கள், அறிவிப்பு, மக்களுக்கு விழிப்புணர்வு என நீண்ட பட்டியல்.
1999ம் ஆண்டு திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமாராக இருந்த காலத்தில் முழுமைத் துப்புரவு இயக்கம்(Total Sanitation Campaign) என தொடங்கிய திட்டம், திரு.மன்மோஹன் சிங் ஆட்சியில் முழுமைத் துப்புரவு பாரதம் (Nirmal Bharat Abhiyan ) என பெயர் மாற்றப்பட்டு, இன்றைய பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளன்று தூய்மையான பாரதம் இயக்கம்(Swachh Bharat Abhiyan) என மாற்றம் காண்கிறது.
ஏன் இந்த திட்டம்?
பாரதம் தொன்மையான நாடு; இன்னும் நிறைய பழைமைகளை சுமக்கின்ற தேசங்களில் இதுவும் ஒன்று. கலாச்சாரத்தின் தொட்டில் எனப்படும் பாரதம் ஏன் குப்பைக்கூளமாக இருக்கிறது? நகரங்களை காணுங்கள், சாலைகளின் இரு மருங்கிலும் குப்பை. ஏன் எல்லா நகரங்களிலும்/கிராமங்களிலும்/சாலைகளிலும்/ரயில் தண்டவாளங்களிலும் சொல்லி வைத்தாற் போல குப்பைகளே காணப்படுகிறது? நமது நாட்டில் தொண்மை என்னாயிற்று? வெளிநாட்டவர் வந்து கண்டு வியந்த பாரதம் எங்கே? இப்போது இந்தியா என்றால் குப்பை நாடு என்று சொல்வது ஏன்? பல மருத்துவ முறைகளை கொண்ட நாட்டில் அதிகமான நோயாளிகள் இருப்பது ஏன்?
சிற்று பின்னோக்கி நகர்வோம். பொது வருடம்(CE)1500இல் இப்போழுது நாம்!! பாரதத்தின் எந்தவொரு கிராமத்திற்கு சென்றாலும் பசுமை போர்த்திய வயல்கள், சாலைகள் இருமருங்கிலும் மரங்கள், கோவில்கள், ஊர் பொது இடம், நீர் நிரம்பிய குளம், இடுகாடு, ஆடு, மாடு, கோழி, மனிதர்கள்…. குப்பை எங்கே??? அட ஆமாம் எங்கே??
அன்று சுத்தமாகத்தானே இருந்தது?!! இன்று ஏன் இந்த நிலை?
ஏன் தெரியுமா? அன்று ப்ளாஸ்டிக் இல்லை! மக்கள் தொகை குறைவு! பெருநகரங்கள் இல்லை! தன்னிறைவான கிராமங்கள்! இவ்வளவுதான்!
எண்ணிப் பாருங்கள் இலை, தழை, கால்நடைக் கழிவுகள், சமையல் கழிவுகள் என எந்த கழிவையும் எந்த சூழ்நிலையிலும் மக்க வைக்க முடியும். வீடு, ஓடு, பானை எல்லாம் மண்; சாப்பிட இலை; பொருட்கள் வைக்க மூங்கிலாலான கூடை; சணல்/தேங்காய் நார் கயிறு; முக்கியமான ஒன்று பொருட்கள் வாங்க துணிப் பைகள், சணல் சாக்குகள்.
கோவிலில் பிரசாதம் உண்டு இலையை தூக்கி எறியலாம்; மக்கும்!
பொருட்கள் வைத்த கூடை சேதாரமான பின்பு தூக்கி எறியலாம்;மக்கும்!
கயிறு அறுந்து விட்டதா? தூக்கி எறியலாம்; மக்கும்!
துணிப்பை, சணல் பை கிழிந்துவிட்டதா? தூக்கி எறியலாம்; மக்கும்!
சரி எதற்கு இத்தனை கதை? ஏன் ஐஃபோன் அய்யாக்கண்ணுவைப் போல எங்கெங்கோ சுற்றுகிறது?
ஒன்றுமில்லை, இந்தியாவெங்கும் குப்பைகிடங்காக மாறிய காரணம் என்னென்று உங்களுக்கு சொல்லியாயிற்று! எங்கே?? முந்தைய பத்தியில்!!
என்னடா ஒன்னுமே காணோம்… புரியவில்லையா? தொடருங்கள்……
- கோவிலில் பிரசாதம் உண்டுவிட்டு தட்டை என்ன செய்வீர்கள்?
- பொருட்கள் வைத்த கூடை சேதாரமான பின் என்ன செய்வீர்கள்?
- மளிகை வாங்கிய பின் காகிதப்பைகளை என்ன செய்வீர்கள்?
- செயலிழந்த தொல்லைக்காட்சியை என்ன செய்வீர்கள்?
- உடைந்த கண்ணாடி துண்டுகளை என்ன செய்வீர்கள்?
- உடைந்த நெகிழி குடத்தை என்ன செய்வீர்கள்?
பண்பாடு மாறா பாரதமாயிற்றே! தூக்கி எறிவீர்கள்!
இந்தியா குப்பைமேடாக மாற மக்களின் உளவியல் காரணம் இப்பொழுது புரிந்ததா?
எதை பயன்படுத்தினாலும் தூக்கி எறியும் பழக்கம் இன்னும் மாறவில்லை. இன்ன குப்பை மக்கும், இன்னது மக்காது என்று மக்களுக்கு சொல்ல யாரும் இல்லை. அரசாங்க அறிவிப்புகள் ஒரு சில படிநிலைகளோடு நின்றுவிட்டது. தகவல் தொழில்நுட்பம் புகாத வானொலி கேட்கும் கிராமங்கள் இன்னும் உண்டு. அவர்களுக்கு யார் சொல்வது? இன்று ப்ளாஸ்டிக் குப்பை இல்லாத கிராமங்கள் கூட கிடையாதே, யார் அந்த குப்பைகளை நீக்குவது? குப்பைகள் நீக்கினாலும் யார் பிரிப்பது?
இந்த சிக்கல்களை களைய உருவானதே ‘தூய்மையான இந்தியா இயக்கம்’.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து கண்டனங்கள், விமர்சனங்கள்; நடிகர்களை வைத்து விளம்பரம், பிரதமர்/அமைச்சர்கள்/நடிகர்கள் எல்லாம் ஒரு நாள் பெறுக்குவர் மீதி 364 நாட்கள் யார் செய்வது?, முந்தய ஆட்சியில் தொடங்கப்பட திட்டதிற்கு பெயர் மாற்றம், செலவு என்னவாகும், வெற்று விளம்பரங்கள் என நீளும்.
இவையெல்லாம் இருப்பினும் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை இந்தியா முழுதும் கவணித்தீர்களா? 100 நாள் வேலைவாய்ப்பு திட்டன் வாயிலாக இதுவரை இல்லாத அளவிற்கு துப்புரவு பணியாளர்கள் கிராமந்தோறும்/வார்டுகளிலும் துப்புரவு பணிக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.
மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்காக புதிய ரூபாய் நோட்டுகளில் கூட அரசு அச்சிட்டுள்ளது.
இப்போதும் கூட ஏன் சுத்தமாக இல்லை. அரசாங்கம் தன் பங்கை செய்ததது. மக்கள் தங்கள் பங்கை சரியாக செய்யத் தவறியதே காரணம்.
என்ன மக்கள் தான் குற்றவாளிகளா? ஆமாம்!
குப்பை மேலாண்மையில் பல நிலைகள் உண்டு
சேகரித்தல் > இடம் பெயர்த்தல் > பிரித்தல் > மறுசுழற்சி/எரித்தல்
மிகக் கடினமான பணி பிரிப்பது தான் (மக்குவது, மக்காதது, கண்ணாடி, இரும்பு, மருத்துவ கழிவுகள், நெகிழி காகிதம், மின்னனு சாதனங்கள், சமையல் கழிவுகள்). இவற்றில் எல்லா நிலைகளையும் அரசாங்கம் மட்டுமே செய்கிறது. பாருங்கள் குப்பைக்கு சொந்தக்காரர்கள் மக்களாகிய நாம் எதுவும் செய்வதில்லை. ஏன்?
- சோம்பேரித்தனம்
- குப்பை பிரிப்பது/பொறுக்குவது என் வேலையில்லை
- அதற்குதான் அரசாங்கம் இருக்கிறதே
எண்ணிப் பாருங்கள் நம் தெருவில் அள்ளும் குப்பைகளை ஒரு நாள் நம்மை தரம் பிரிக்க சொன்னால் பிரிப்போமா? பிரிக்கும் இடத்தில் இருப்பவரும் நம்மை போன்ற மனிதர் தான் என்ற கரிசனம் எழுந்ததில்லையா?.
சரி நம் பங்கிற்கு என்ன செய்யலாம்?
- நாமெ குப்பைகளை பிரிக்கலாம் (மக்கும், மக்காத குப்பை)
- நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு தரலாம்
- சாலைகளில்/வீதிகளில்/ தண்டவாளங்களில் குப்பை வீசாமலிருக்கலாம்
- மக்கும் குப்பையை உரமாக்கி வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்
- ப்ளாஸ்டிக் பைகளை உபயொகிக்காமல் துணி/சணல் பைகள்
- மின்னனு கழிவுகளை தனியாக பிரித்து மின்னனு கழிவு சேகரிப்பு மையங்களில் சேர்க்கலாம்
இவையெல்லாம் வெகு சுலபமாக செய்யக்கூடிய செயல்கள். கொஞ்சம் நமது சோம்பேரித்தனத்திலிருந்து வெளியே வர வேண்டும் அவ்வளவே.
நாம் சமூக வலைதளங்களின் சுவர்களுக்குள் அமர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகக் கடமை வாக்களிப்பதோடு நின்றுவிடுமா? நாமும் அரசாங்கத்தோடு கைகொர்த்து நடக்க வேண்டும். நல்லது செய்யவில்லை என்றாலும் தொந்தரவு செய்யாமலிருப்போம். கூட்டு முயற்சியில் தான் இவையெல்லாம் சாத்தியமாகும்.
ஒன்று சேர்வோம்! நாட்டுக்காக உழைப்போம்! தூய்மையான பாரதத்தை உருவாக்குவோம்! கூட்டுறவே நாட்டுயர்வு!
ஜெய் ஹிந்த்! வாழ்க பாரதம்!
தொடரும் >>>> தூய்மையான இந்தியா இயக்கம் பாகம்-2