
கழிவுகள் அகற்றுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு என்பது மிக அத்தியாவசியமான ஒரு தேவையாகும். எந்த ஒரு அரசு திட்டமும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் நடைபெறும் போது அது தோல்வியையே சந்திக்கிறது. மக்களின் பங்களிப்போடு செயல்படும் அரசின் திட்டங்களும் மற்றும் தனியார் அமைப்புகளின் பொது நலன் திட்டங்களும் நல்லதொரு வெற்றியை சந்திக்கின்றன என்பதற்கு பெருமளவில் உதாரணங்கள் பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு அரசாங்கங்களிலும் காணக் கிடைக்கின்றன. கழிவுகள் அகற்றுவதில் மக்களின் பங்களிப்பு என்பது தனிமனித சுத்தத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஏனெனில் தனிமனித சுத்தம் பேணப்படும் போது தான் சமுதாயத்தில் சுத்தமும் பேணப்படும்.
ஒரு நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஒரு அரசாங்கம் விரும்பினால் அதற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு அதை மக்களின் பங்களிப்போடு செயல்படுத்தும்போது அரசாங்கம் எதிர்பார்க்கும் வெற்றியை விட பல மடங்கு அதிகமான வெற்றியானது அத்திட்டத்திற்கு கிடைக்கும்.
எனது அரசாங்கமானது தனிமனித சுத்தத்தை வலியுறுத்தவேண்டும். தனிமனித சுத்தம் என்பது ஒரு குடும்பத்தின் சுத்தமாக நீளும். ஒரு குடும்பத்தின் சுத்தமானது ஒரு தெருவின் சுத்தமாக நீளும். ஒரு தெருவின் சுத்தமானது ஒரு வட்டாரத்தின் சுத்தமாக பரவும். ஒரு வட்டாரத்தின் சுத்தமானது ஒரு ஊரின் சுத்தமாக மாறும். ஒரு ஊரின் சுத்தமானது ஒரு மாவட்டத்தின் சுத்தமாகவும், ஒரு மாவட்டத்தின் சுத்தமானது ஒரு மாநிலத்தில் சுத்தமாகவும் விரிந்து நிற்கும். மாநிலங்கள் சுத்தமாக இருக்கும்போது நாடு சுத்தமாக மாறிவிடும்.
எனவே தனிமனித சுத்தத்தை வலியுறுத்துவது அடிப்படை செயல்திறன் அலகாக மாற்றப்பட வேண்டும். தனிமனித சுத்தம் என்பது தன்னை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருத்தல், கழிவுகள் சேராமல் பாதுகாத்துக் கொள்ளுதல், இயற்கையைப் பேணிப் பாதுகாத்தல் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது . இதன் நீட்சியாக அன்றாட வாழ்வில் தனிமனிதன் தனது சூழலை மாசுபடுத்தும் செயல்களை செய்வதையும் குறைத்துக்கொள்ள ஆரம்பிப்பான். உதாரணமாக குப்பைகளை தெருவில் கொட்டாமல் அவற்றை சேகரித்து குப்பை கூளங்கள் இடுவது, மக்கும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து அவற்றை மறுசுழற்சிக்கு பயன்படுத்துவது, மேலும் மலஜலம் ஊர்ப்புறங்களில் கழிக்காமல் தகுந்த கழிவறை மூலம் அவற்றை அப்புறப்படுத்துவது ஆகியவை இந்த செயல் திட்டங்களில் அடங்கும். இதன் மூலம் ஒரு கிராமம் அல்லது நகரமும் கழிவுகளின் கூடாரமாக இல்லாமல் சுத்தமான கட்டமைப்பாக உருமாறும்.
இதுபோன்ற ஒரு கட்டமைப்பை நமது இந்தியாவில் செயல்படுத்தி வருகின்றனர். இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தூய்மை இந்தியா என்னும் திட்டத்தை இந்திய நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறார் . இத்திட்டத்தின் மூலம் கழிவறைகள் கட்டப்பட்டு கழிவறை வசதி இல்லாத கிராமங்களில் கூட அவற்றை முறையாக பயன்படுத்த வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சுகாதாரம் என்பது உயர்ந்து காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மக்களை பொது சுகாதாரத்திற்கு வழி நடத்தும்போது தமது பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு கூட மக்கள் தாமாக முன்வந்து பங்களிப்பாளர்கள். எனவே சுகாதாரம் இன்றியமையாமையை மக்களுக்கு விளக்கிச் சொல்லும் போது மக்களிடமிருந்து சுகாதாரம் குறித்த நல்ல விளைவை நாம் எதிர்பார்க்க முடியும்.