இது கலி காலம்.

இந்துக்கள் அனைவரும் நம்மை காக்க மீண்டும் அந்த இறைவன் கல்கி அவதாரம் ஏற்று வருவார் என்று ஏக்கத்துடன் காத்து கொண்டிருக்கும் காலம்.

பாவம், அவர்கள் அறிய மாட்டார்கள் – அவர்கள் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு கல்கி இருப்பதை.

இன்னல் படுத்தும் இகழ்ந்தோரை இமைப்பொழுதில் காத்திட இக்கணமே இறைவன் வருவான் என்று கூறினால் இன்று இவ்வுலகிற்கு வருகை தந்த குழந்தை கூட பல் இளிக்கும் இந்த கலியுகத்தில் .

எது எப்படியோ, இன்றைய பதிவு கல்கியை பற்றியது அல்ல, கல்வியை பற்றியது.

அடுப்பூதும் பெண்டிர்க்கு படிப்பெதற்கு 

என்று கேட்ட காலம் மலையேறிவிட்டது.

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே 

என்று நமது முன்னோர்கள் அன்றே கூறியது போன்று அனைத்து மக்களுக்கும், அது ஆணோ பெண்ணோ, படிப்பு என்பது ஒரு இன்றியமையாததாக ஆகிப்போனது.

ஏன்?

அறிவுவை வளர்க்கவா? காமெடி பண்ணாதீங்கப்பா.

அது பெரும்பாலும் செல்வம் சேர்க்கவே இன்றைய உலகில் பயன்படுகிறது.

தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்று கொடி தூக்கும் பலர் ஒன்றை மறுக்கிறார்கள். நீங்கள் கற்றாலும் கல்லாவிடிலும் தமிழ் வாழும். வளர்ந்து தழைத்தோங்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

தமிழ் மீது பற்று கொண்ட பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தங்களை அம்மா அப்பா என்றழைக்கவே இன்று ஆவல் கொண்டுள்ளனர். மம்மி டாடி என்றழைப்பது குறைய தான் துவந்தியுள்ளது. உண்மை.

இருந்தும், அதே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் பயிற்றுவிக்கும் போது அவர்கள் விரும்புவதோ ஆங்கில வழிக்கல்வி தானே?

தன் பிள்ளைகள் நன்கு தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஏங்கும் அதே பெற்றோர்கள், தமிழ் வழி கல்விக்கு ஆதரவு தருவதில்லையே, ஏன் என்று சற்றே சிந்தித்து பாருங்கள்.

இதற்கு பலரும் கூறும் முதல் காரணம், பள்ளிப்படிப்பை முடித்து மேற்படிப்பு படிக்க அதற்கான வழிமுறைகள் தமிழில் இல்லை என்பதே. நான் மட்டும் விதிவிலக்கா என்ன, எனது ஆதங்கமும் அதுவாகவே இருந்தது.

ஆனால், கடந்த 2010ம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகள் பல தமிழ் வழி கல்வி கொண்டு இயங்குகிறது. அதுவும், பெருமை கொண்ட நமது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்.

நல்ல செய்தி தானே என்று தானே கூறுகிறீர்கள்? மேம்போக்காக நோக்கினால் அப்படி தான் தோன்றும். துரதிஷ்டவசமாக, அது தான் இல்லை.

ஏனென்றால், கடந்த மாதம் வெளிவந்த செய்திகள் நிலைமை வேறு மாதிரி இருப்பதை தோலுரித்து காட்டுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையிலன் படி, இக்கல்லூரிகளில் 6 சதவிததிற்கும் குறைந்த மாணாக்களே சேர்ந்துள்ளனர். திருச்சியில் மட்டுமே 36%. பெரும் நகரங்களில் தான் தமிழை தள்ளி வைத்துவிட்டனர் என்று பார்த்தால் பல கிராமப்புற இடங்களிலும் தமிழ் வழி கல்விக்கு பெற்றோர்கள் முன்வருவதில்லை என்பது வேதனையல்லவா?

இது இப்படியே நீடித்தால் இது போன்ற கல்லூரிகள் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது. தமிழ் தமிழ் என்று மார்த்தட்டி கொள்ளும் தமிழர்கள் கூட இங்கு சென்று பயில்வதில்லை போலும்.

ஹிந்தியை எதிர்ப்பதும் ஆங்கிலத்தை கண்டு இளிப்பதுமாக இருக்கும் மக்கள் சற்றே சிந்திக்க வேண்டும்.

எந்த மொழியாகினும், அதன் மூலம் சிறிது பணம் சம்பாதிக்க முடியுமாயின், அது எந்த மொழியாக இருந்தாலும் கற்க தயாராக இருப்பதே மனித இயல்பு.

இதன் காரணம் கொண்டே ஆங்கில மொழி இந்த உலகை இன்றும் ஆண்டுக்கொண்டிருக்கிறது.

இனியும் அரசியல் தலைவர்கள் மக்களிடம் சென்று தமிழ் பற்றை பற்றி உணர்ச்சி தீர பேசி தமிழை வளர்க்கலாம் என்று மனப்பால் குடித்தால் அது நடவாது.

மற்ற மொழிகளை குறைத்து பேசி, அதன் மீது வெறுப்பை உருவாக்கி அரசியல் வேண்டுமாயின் செய்யலாம். தமிழை வளர்க்க முடியாது. தமிழர்களை அடக்கவும் முடியாது.

அதற்கு இந்த தமிழ் வழி கல்லூரிகளே ஓர் மிக சிறந்த எடுத்துக்காட்டு.

படித்து விட்டால் மட்டும் போதுமா, சம்பாதிக்க வேண்டாமா? அதற்கு ஏற்ற வழிவகையை இந்த அரசு செய்யவேண்டாமா?

ஆங்கில கல்வி கற்றால் மட்டும் என்ன இங்கே வேலை கிடைக்கிறதா என்று கேட்கிறீர்களா?

தெரியும், உடனே நீங்கள் வருவீர்கள் என்று.

அது தான் வேலை கிடைக்கவில்லையே, அப்படியென்றால் ஏன் இன்னும் ஆங்கில கல்வியின் பின் சென்று கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் உயிரினும் மேலான தமிழ்வழி கல்விதான் இன்று சாத்தியமாயிற்றே, அதை பயிலலாமே? மனம் இல்லையா?

அதற்கு ஒப்புதல் உண்டா?

தமிழ் வளர்க்க துடிக்கும் அரசியல் தோழர்களே, இதோ உங்களுக்கு ஒரு இனிய வழி கூறுகிறேன்.

தமிழக துறை அனைத்திலும், தமிழ் வழிப்பயின்றவர்களுக்கே முன்னுரிமை என்று சட்டங்கள் கொண்டுவர முடியுமா?

தமிழ் வழி கல்வியில் பயின்றாலும் பணம் சம்பாதிக்க விழிவகை ஏற்படுத்தி தர முடியுமா?

அது ஏதுமின்றி, வெறும் பள்ளியையும் கல்லூரிகளையும் வைத்து கொண்டு தமிழை வாழ வைப்பதே கடினமாக உள்ள இந்த சூழ்நிலையில், வளர்க்க நினைப்பது எட்டாக்கனியே.

பல ஆண்டு முயற்சியில் முளைத்த இந்த தமிழ் வழி கல்லூரிகளை நாம் இழக்கலாமா? கூடவே கூடாது.

இது ஒரு நல்ல முன்னேற்றம், ஆனால், இது வீணாகாமல் இருக்க நமது அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுக்குமா – அந்த கல்லூரிகளுக்கு  மூடுவிழா எடுப்பதை தவிர.

நிச்சயம் எடுப்பார்கள், அதுவும் சீக்கிரமே எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்.

உங்கள் மகேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.