நம்ம வாத்தியார் ரொம்ப நாளா சொந்த வீடு கட்டணுமுன்னு ஆசைப்பட்டாருங்க.  வாயக் கட்டி வயத்தக் கட்டி ட்யூஷன்லே பசங்களைக் கட்டி ஒரு வழியா வீட்டைக் கட்ட ஆரம்பிச்சாரு. எஞ்சினியர்லாம் வெக்கல. நம்மாளே கணக்கு வாத்தியார்தானே, அதனால இவரே படமெல்லாம் போட்டு ஒரு மேஸ்திரியைப் பிடிச்சு நல்ல நாளாப் பாத்து வீட்டு வேலைய ஆரம்பிச்சார்.  பள்ளிக்கூடத்துல போயி கையெழுத்து போட்டுட்டு வீட்டாண்ட வந்திடுவாரு வேலைய கண்காணிக்க.

 

கடகால் தோண்டியாச்சு.  அஸ்திவார வேலை ஆரம்பிச்சாச்சு.  திடீர்னு பள்ளிக்கூடத்துக்கு கல்வி அதிகாரி வரப்போறதா பேச்சு. அதனால நம்ம வாத்தியால வீட்டுப் பக்கம் வர முடியல.  பள்ளிக்கூடத்துலயே நாலு நாள் பொழுது போச்சு..

 

நாலு நாள் கழிச்சு வீட்டுப்பக்கம் வந்து பாத்தாரு நம்ம வாத்தியாரு. அவரு கணக்குப்படி இன்னியோட சிமெண்டு மூட்டை தீந்துரும். அதனால வரும்போதே 20 மூட்டைக்கு சொல்லிட்டு வந்துட்டாரு. இங்கே வந்து பாத்தா  பத்து மூட்டை பாக்கியிருக்கு. வாத்திக்கு ஒண்ணும் புரியல. மேஸ்திரியக் கூப்பிட்டாரு.  

 

மேஸ்திரி, என்னவே இது என்னோட கணக்குப்படி மூட்டை தீர்ந்திருக்கணும். ஆனா இன்னும் பத்து மூட்டை பாக்கியிருக்கே?ன்னு கோவமா கத்தினாரு.

 

மேஸ்திரி யோசிச்சாரு.  இல்லே வாத்தியாரே.  நாந்தான் ஆளுங்களை கொஞ்சம் சிக்கனமா பாத்து செய்ய சொன்னேன்

 

அட முட்டாப்பயலே. எதுலடா சிக்கனம் பாக்கறது?  சிமெண்டுக்குப் பதிலா என்னத்தடா கலந்து தொலச்ச?

 

மேஸ்திரி சமாதானப்படுத்தினார் ஒண்ணும் கவலைப்படாதீங்க வாத்தியாரே.  பத்துக்கு ஒண்ணு கலக்கச் சொன்னேன். இப்போ நீங்க சொல்லிட்டீங்கல்ல. இனிமே பாத்துக்கிடுங்க  அஞ்சுக்கு ஒண்ணு கலந்து ஜமாய்ச்சுப்புடலாம். அஸ்திவாரம்தானே, யார் கண்ணுக்கும் தெரியாது, இனிமே பாருங்க சுவரெல்லாம் எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கப் போவுதுன்னு

 

வாத்தியாருக்கு கோவம் தலைக்கேறியது எவண்டா ஒனக்கு வேலை கத்துக்குடுத்தது?  மடப்பயலே. அஞ்சுக்கு ஒண்ணுக்கும் பத்துக்கு ஒண்ணுக்கும் வித்தியாசம் கூடவா தெரியாது? அஸ்த்திவாரம் பலமா இருந்தாத்தானடா வீடே நிக்கும்?  இது கூடத் தெரியாம நீயெல்லாம் ஏண்டா வேலைக்கு வந்தேன்னு ஆவேசமா கத்தினார்.

 

மேஸ்திரி சிரித்தார். எனக்கு வேலை கத்துக்குடுத்தது எங்கப்பன். ஆனா எனக்கு கணக்கு கத்துக் குடுத்த உங்களுக்கு அஸ்த்திவாரம் பலமா இருக்கணும்னு இப்போதான் தெரிஞ்சுதா வாத்தியாரே?ன்னு கேட்டார்.

 

என்னடா சொல்ற?

 

ஆமா வாத்தியாரே.  நம்ம ஊரு கிராமத்துப் பள்ளிக்கூடத்துலதான் நான் படிச்சேன். எட்டாப்பு வரைக்கும் பேருக்கு பரிட்சைன்னு வெச்சிட்டு பாஸ் போட்டுட்டீங்க.  ஒம்பதாவதுலே மூணு வருஷம். ஒரு வழியா அதை தாண்டி பத்தாவது வந்தா எல்லாத்துலயும் ஃபெயிலு. நாலு வருஷம் தலையால தண்ணி குடிச்சேன். ஒண்ணும் முடியல. அதான் எங்கப்பாரோட சேந்து வேலைக்கு வந்துட்டேன். எனக்கு அஸ்த்திவாரத்தை நீங்க ஒழுங்கா போட்டிருந்தா இன்னைக்கு உங்க வீட்டோட அஸ்த்திவாரம் பலமா இருந்திருக்கும் வாத்தியாரே

இதாங்க இங்கே பிரச்சினையே.  அஞ்சாவதிலும் எட்டாவதிலும் பொதுத்தேர்வுன்னு உடனே எது கிடைக்கும் போராட்டம் பண்ணலாம்னு காத்திருந்த ஒரு கும்பல் ஆரம்பிச்சிடுச்சு அழிவு வேலைய.   அரசியல்வியாதிகள் சொல்றாங்க இதனால கிராமப்புற ஏழை மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகுமாம், அப்புறம் அவங்களோட குலத் தொழிலுக்குப் போவாங்களாம்.

 

உண்மை என்ன தெரியுமா?  மேலே பாத்த மேஸ்திரி மாதிரி பரிட்சையில்லாம பாஸ் போட்டாத்தான் பத்தாவது தாண்ட முடியாம இவங்க குலத் தொழிலுக்குப் போக வேண்டிய கட்டாயம். ஒழுங்கா படிச்சா மேலே கல்லூரிக்குப் போயி படிப்பை முடிச்சு நல்ல வேலையில் சேரலாம்.  அப்படி எல்லாரும் நல்லா படிச்சிட்டா இவங்க பருப்பு வேகாதே. மக்களை கொஞ்சம் கூட முன்னேற விடாமல் குழியிலேயே அழுத்தி வெச்சாத்தானே இவங்க கட்சிக்காரங்க ஸ்கார்ப்பியோவிலேயும் பென்ஸிலேயும் மிடுக்கா போகமுடியும்!

இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா கிராமப்புற ஏழை மாணவர்கள் —  இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு அறிவில்லை, அவங்க நல்லா படிக்க மாட்டாங்க, அவங்க முட்டாள்கள்னு ஊரை ஏமாத்திட்டிருக்கப் போறீங்க?  அஞ்சாவதுல பரிட்சை வெச்சா கிராமப்புற ஏழை மாணவர்கள்தான் ஃபெயிலாவாங்களா? அவங்களுக்கு அறிவில்லையா? அப்போ நகர்ப்புறத்துல இருக்க மாணவர்கள் ஃபெயிலாக மாட்டாங்களா? நகர்ப்புறத்துல இருந்தா அவங்களுக்கு அறிவு அதிகமா?  என்ன பைத்தியக்காரத்தனமான வாதம் இது? தமிழ் வாத்தியார்கள்னா கோமாளிகள்னு இந்த சினிமாக்காரங்க உண்டாக்கி வெச்சிருக்கா மாதிரி கிராமப்புற ஏழை மாணவர்கள்னா முட்டாள்கள்னு இந்த அரசியல்வியாதிகள் உருவாக்கி வெச்சிருக்காங்க. இதை உடைக்கவாவது பரிட்சை வர வேண்டும், இதிலே கிராமப்புற ஏழை மாணவர்கள் தேர்ச்சி அடைந்து இவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும்.

 

உடனே இதுக்கு முட்டுக் குடுக்க வருவாங்க – கிராமப்புற பள்ளிகளில் வசதிகள் கிடையாது. அட போங்கய்யா அஞ்சாவது படிக்கற பையனுக்கு என்ன கம்ப்யூட்டர் லேபும் வேதியியல் லேபுமா வேணும்?  வெறும் புத்தகமும் நோட்டும்தானே. உடனே பதில் வரும் – இல்லேயில்லே கிராமப்புற அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு நன்றாகப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் கிடையாது. அப்படியா? எதனாலன்னு யோசிச்சீங்களா? 

 

ஆசிரியர்களுக்குத் தகுதி இருக்கான்னு தேர்வு வெச்சா ஒரு சதவீதம் கூட பாஸாகலை. பாஸ் பண்ணலைன்னா வேலை கிடையாதுன்னு சொன்னா அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கறதும் இதே கும்பல்தானே? ஆக, ஆசிரியர்களின் தகுதி பத்தி எதுவும் கேள்வி கேக்கக்கூடாது. ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள் என்பதை அறிய உதவும் பொதுத் தேர்வும் கூடாது.  நேரா எட்டாவது வரைக்கும் ஒன்றையுமே சரியாகக் கற்பிக்காமல் பாஸ் போட்டுவிட்டு ஒன்பதாவதிலிருந்து ஃபெயிலாக்கி ஃபெயிலாக்கி அவனைக் குலத் தொழிலுக்கு அனுப்பி விட்டு பழியை ஆளுங்கட்சி மீதும் மோடி மீதும் போட்டு விட்டு நம்ம ஸ்கார்ப்பியோவுக்கு பெட்ரோலைப் போட்டு சுத்த கெளம்பணும். அதானே உங்க ஆசை?

3 வயசுக் கொழந்தையையெல்லாம் நடனப் போட்டி பாட்டுப் போட்டின்னு ஆயிரம் பேர் நேர்லயும் பல லட்சம் பேர் டி வி யிலேயும் பாக்க கலந்துக்க வெச்சு, போட்டியின்போதே அவங்களை அழ வெச்சு அதுலயும் துட்டு பாக்கற சமூகம், அதுக்கு ஒத்து ஊதற பெற்றோர்கள்.  அப்புறம் என்னா பத்து வயசுப் பையனுக்கு பொதுத்தேர்வு கூடாதுன்னு பயமுறுத்தல்? காலம் மாறிப் போச்சு, இன்னும் நீங்க அவுத்து விடுற புளுகுமூட்டைகளை மக்கள் நம்பத் தயாராயில்லை. இந்த காலத்துல பத்து வயசுப் பையன் தெரிஞ்சு வச்சிருக்க விஷயங்கள் உங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.  அதுனால நிறுத்துங்க உங்க அலப்பறையை.

 

அடுத்தது ஆசிரியர்கள் —  தமிழ் இரண்டு தாள் , ஆங்கிலம் இரண்டு தாள் என்று இருந்ததை ஒரே தாளாகக் குறைத்திருக்கிறார்கள். இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கம் கண்டனம். எதுக்குங்க? உங்களுக்குப் பரிட்சை வெச்சு எட்டு வருஷமா பாஸ் பண்ணுங்க பாஸ் பண்ணுங்கன்னா மட்டும் பண்ண மாட்டீங்க. எனக்கே பரிட்சையான்னு கேப்பீங்க. ஆனா பாவம் அந்தப் புள்ள, ரெண்டு தேர்வுக்குப் பதிலா ஒரு தேர்வு போதும்னு சொன்னதுமே எவ்ளோ குஷியாயிடுச்சு தெரியுமா? நீங்க என்னடான்னா ரெண்டு தேர்வுதான் வேணும்னு ஒரே கலாட்டா.  ஆனா பாருங்க அதே அறிக்கையிலேயே அஞ்சாவது எட்டாவது பொதுத்தேர்வை ரத்து செய்யணும்னு இன்னொரு கோரிக்கை. என்னதாங்க உங்க பிரச்சினை?

 

தனியார் பள்ளிகளில் பையன் 60க்குக் கீழே மார்க் எடுத்தாலே பெத்தவங்களைக் கூப்பிட்டு டி ஸி குடுத்து அனுப்பிடறாங்க. ஆனா அரசுப் பள்ளிகளில் வாத்தியார் என்ன நடத்தினாலும் பசங்க என்ன படிச்சாலும் கேட்பாரில்லை. அப்புறமென்ன? தமிழ்நாட்டில் கல்வித் தரம் உயர வேண்டுமென்றால் முதலில் படிக்கவில்லையென்றால் பாஸாக முடியாது என்பதை உறுதியாக்க வேண்டும். அப்போதுதான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாகும். கட்டாயம் உருவானால்தான் மாணவர்கள் படிப்பார்கள். படித்தாலும் படிக்காவிட்டாலும் பாஸ் என்றால் கல்வியின் தரம் அதலபாதாளத்தில்தான் போகும்.  அப்புறம் ஆசிரியர்களின் தரம் உயர்த்தப் பட வேண்டும். அப்புறம் பள்ளிகளின் கட்டமைப்பு உயர்த்தப் பட வேண்டும். பசங்களைக் கண்டிச்சா போலீஸிலே பொய்ப்புகார் கொடுப்பதை அனுமதிக்கக் கூடாது. 

 

இதுக்கெல்லாம் முதல் படி — தமிழன் கல்வியில் உயர வேண்டுமென்றால் — சீக்கிரமே கொண்டு வாங்க பரிட்சைக்கு நேரமாச்சு.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.