
வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிகனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் வகையிலும், பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாகவும் வானிலை தொடர்பான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நாளை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது வலுவடைந்து புயலாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்க கடலிலும் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8ம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. எனவே அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் கேரளத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரும் 7ஆம் தேதி வாக்கில், மிக அதிகனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்திற்கு வரும் 7ஆம் தேதி, வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் தேதியன்று, 25 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மிக அதிகனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் வகையிலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தும் வகையிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த சிவப்பு எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் ஆயிரத்து 275 இளைஞர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் தலா 60 முதல் 80 பேர் கடலோர மாவட்டங்களிலும், மற்ற மாவட்டங்களில் தலா 45 முதல் 50 பேரும் தயார் நிலையில் இருப்பார்கள். தேவையெனில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் அழைத்துக் கொள்ளப்படும் என பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மழை குறித்த விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலிடம் ஏற்கெனவே கேட்டறிந்துள்ளார்.