வடகிழக்குப் பருவமழைக்கு முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையின் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், நள்ளிரவில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. புறநகர்ப் பகுதிகளிலும் இரவில் மழை வெளுத்து வாங்கியது.

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, நாகை மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரியில் பலத்த மழை பெய்ததால், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இரண்டு வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. வீட்டில் யாருமில்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

உதகை- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் கற்பூர மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் சாலையில் மழை காரணமாக இரவில் வாகனங்கள் செல்ல காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்ததால் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

உதகையின் மார்க்கெட் உள்ளேயும் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.