நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே — மதுரை வீரன் படத்தில் எம் ஜி ஆர் பாடும் பாட்டு. இதுதான் ஞாபகத்துக்கு வருகிறது உங்களது அறிக்கையைப் பார்த்ததும் திருமா அவர்களே.

“பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபயா ராஜபக்சே இந்தியாவுக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு தன் அழைப்பைத் திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக உருவானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களின் முன்னேற்றத்துக்காகக் கிஞ்சித்தும் பாடுபடாமல் அவர்களை உங்களது சுயலாபத்துக்காகவே பயன்படுத்திக் கொண்டு வருகிறீர்கள் என்பது மீண்டும் உறுதியாகிறது.

கோத்தபய ராஜபக்சே யார்? பாதுகாப்புத்துறைக்குப் பொறுப்பேற்று விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒழித்துக் கட்டியவர். இவரிடம் பாதுகாப்புத் துறையின் பொறுப்பைக் கொடுத்தவர் யார்? அன்றைய இலங்கை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சே. இவர் கோத்தபய ராஜபக்சேவின் அண்ணனுமாவார். ஆக, சகோதரர்கள் இருவரும் சேர்ந்துதான் புலிகளை அழித்தொழித்தனர். இன்றைக்கு கோத்தபய ஜனாதிபதியானதும் தனது அண்ணன் மஹிந்தவை பிரதமராக்கியிருக்கிறார்.
சரி, கீழேயுள்ள படத்தில் முன்னாள் இலங்கை ஜனாதிபதியுடன் நினைவுப் பரிசு பரிமாறிக் கொள்வது யாரென்று தெரிகிறதா?


ஆமாங்க, உங்க கூட்டணிக் கட்சியின் ஒரு தலைவர்தான் கவிதாயினி கனிமொழி. அது சரி, கூட்டணி என்பதெல்லாம் அரசியல் கணக்கு, அதற்காக அவர்களது கொள்கைகளுக்கு நான் பொறுப்பல்ல என்று நீங்கள் கூறலாம். இப்போ கீழேயுள்ள இன்னொரு படத்தைப் பாருங்கள் திருமா அவர்களே.

சாட்சாத் நீங்களேதான் மஹிந்த ராஜபக்சேவுடன். ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சிப் பூரிப்பும் புன்னகையும் உங்கள் முகத்தில். உங்களை இப்படி சந்தோஷமாகப் பார்த்து வெகுகாலமாகிவிட்டது தலைவா. அதுக்காகவாவது மறுபடியும் ஒரு தடவை இலங்கை போயிட்டு வாங்க.
உடனே பட்டென்று பதில் வருமே — இவர் ஜனாதிபதிதான், விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டியது கோத்தபய ராஜபக்சேதான், ஆகவே அவரைத்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். சொன்னாலும் சொல்லுவீங்க. இப்போ கீழேயுள்ள படத்தையும் பாருங்க.

இவர்தாங்க கோத்தபய ராஜபக்சே. இவரோட கூட இருக்கிறது தயவு செஞ்சு உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் மாதிரி தெரியாமல் சுற்றுலா சென்று வந்துவிட்டேன் என்று சொல்லாதீங்க. மறுபடியும் பாருங்க படத்துல இருக்கற தலைவர்கள் திரு.டி.ஆர்.பாலு, கவிதாயினி கனிமொழி இவங்க முகத்திலே மட்டுமல்லாம கோத்தபய முகத்திலேயும் அளவுகடந்த மகிழ்ச்சி. ஏதோ நெடுநாள் நண்பனை மீண்டும் சந்தித்தா மாதிரி. நான் சொல்றது சரியா?

இப்போ சொல்லுங்க திருமா அவர்களே நீங்கள் இங்கிருந்து இலங்கை சென்று அவர்களை சந்திக்கலாம், அவர்களது விருந்தோம்பலில் அளவளாவலாம். நல்ல உறவு முறையைப் பேணலாம். ஆனால் இங்கிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் உங்களின் இரட்டை வேடத்தையும் நாடகத்தையும் கண்டுகொள்ளாமல் தங்களது வேலைகளை விட்டு விட்டு குடும்பத்தைக் கவனிக்காமல் உங்கள் பின்னால் ஆர்ப்பாட்டத்துக்கு அணிதிரள வேண்டும். கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் சேர்க்க வேண்டும். ஆனால் நீங்கள் மறுபடியும் கோத்தபய & மஹிந்தா ராஜபக்சேயின் அழைப்புக்கிணங்க அவர்களது விருந்தினராக மறுபடியும் போகமாட்டீர்கள் என்பதற்கு எதாவது உத்திரவாதம் இருக்கிறதா? கடந்த கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது நீங்கள் கட்டாயம் இலங்கை சுற்றுலா செல்வீர்கள் என்பதுதான் உறுதியாகிறது. ஏமாறுவதற்கு மட்டும்தான் ஒடுக்கப்பட்ட மக்களா?

 

ஸ்ரீ அருண்குமார்

 

One Reply to “நாடகம் தொடர்கிறது”

 1. இவர்களின் அரசியல் எவ்வளவு
  கீத்தரமானது என்பதை மக்கள்
  அறிந்துதான் வைத்திருகிறார்கள்.ஆனால்
  தேர்தல் என்று வருபோது இதையெல்லாம்
  மறந்துவிட்டு ஏதாவது ஒரு காரணதுக்காக
  மீண்டும் இவர்களுக்கே வாக்களிப்பதுதான் வேடிக்கையாக
  உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.