தமிழகத்தில் பாஜக ஏன் காலூன்ற முடியவில்லை என்று ஒரு ஸ்பேஸ். நிறைய பேர் ஒவ்வொரு விதமான கருத்தை கூறினார்கள். எனக்கு தோன்றிய பதில்கள் இங்கே.

முன்குறிப்பு:  நானும் பலநேரங்களில் பாஜகவை குறை சொல்லும் பழக்கம் உள்ளவன்.

1. தமிழக பாஜக சரியாக வேலை செய்வதில்லை
2. தமிழக பாஜகவிற்கு தொலை நோக்கு பார்வையில்லை
3. மத்திய பாஜகவிற்கு தமிழகம் முக்கியமில்லை
4. மத்திய பாஜகவிற்கும் தமிழக பாஜகவிற்கும் ஒருங்கிணைப்பு இல்லை
5. தமிழகத்தில் களப்பணி செய்வதில்லை
6. மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடையே கொண்டு சேர்க்க முனைப்பு இல்லை
7. தமிழக பாஜகவிற்கு நல்லதொரு ஆளுமையான முகம் இல்லை
8. பலமுனை போட்டி இருப்பதால், பாஜகவிற்கு இங்கே வாய்ப்பு இல்லை
9. மேற்குவங்கத்தில் கூட ஆட்சியை பிடிக்க முடியவில்லை, தமிழகம் எட்டாகனியா?

எல்லாமே இல்லை இல்லை தான்.

என்னால் மத்திய பாஜக, தமிழக பாஜக என்று பிரித்து பார்க்க முடியவில்லை.

பாஜக என்றால் ஒரே கட்சி தான், ஒரே கொள்கை தான்.

தொலைநோக்கு பார்வை

பாஜக என்றால் வலதுசாரி கம்யூனிஸ்ட்கள் என்று சொல்வேன். இரு கட்சிகளுக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் உள்ளன.

  • இரு கட்சிகளுக்கும் தன்னார்வலர் தொண்டர்கள் அதிகம், பலம்.
  • இரு கட்சிகளும் சித்தாந்த அடிப்படையில் இயங்குபவை.

இதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்காதீர்கள்.

சீனாவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியோ தவறோ, 20 வருடத்திற்கு பிறகு நடப்பதை இன்றே திட்டமிடும் அந்த நாடு. அவர்களது கடல் கடந்த கட்டுமானம், தெற்காசியா கடல் ஆக்கிரமிப்பு எல்லாம் இந்த வகையே.

வெறும் 2 எம்பிக்கள் உடன் தனது பயணத்தை துவங்கிய கட்சி இன்று தொடர்ச்சியாக இரண்டு முறை சீரான ஆட்சி அமைத்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இடைப்பட்ட காலம் தான் எவ்வளவு? சந்தித்த அவமானங்கள் தான் எவ்வளவு?

இன்று நாம் இதை பேசிக்கொண்டு இருக்கும் வேளையில், 2029ல் ஆட்சி அமைக்க யோசித்து கொண்டு இருப்பார்கள் நம் தலைவர்கள். அது தான் அவர்கள்.

ஒற்றைக்காலில் நீரில் நிற்கும் கொக்கு, தனக்கு அருகில் வரும் மீனுக்காக காத்திருக்குமாம். அதே போல தான், தேசிய தலைமை திட்டம் வகுத்து தனக்கு ஆதாயமான நேரம் வர காத்திருக்கும்.

கொள்கையில் உறுதிகொள்

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றும் செயல்பட மாட்டார்கள், ஆர்டிக்கிள் 356 பயன்படுத்தி திமுக ஆட்சியை கலைத்து அதிமுகவிற்கு வழிவிடுவது தங்கள் கொள்கைக்கு முரணானது என்ற ஒற்றை காரணத்துக்காகவே தங்கள் ஆட்சியை இழந்தது வாஜ்பாய் தலைமையிலான நமது அரசு. மீண்டும் தேர்தலை சந்தித்து வென்றது வரலாறு.

தமிழகத்தை பொறுத்தவரை ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுகவை விழுங்கி இருக்கலாம், ஒரு வேளை காங்கிரஸ் இருந்தால் அதை தான் செய்து இருக்கும்.

எம்ஜிஆர் இறந்ததும் ஜானகி எம்ஜிஆர் தலைமையிலான அணிக்கு வால் பிடித்தது காங்கிரஸ் அன்று.

ஆனால், நம்பியவரை கைவிடாத நம் தலைவர்கள் அந்த கட்சியை ஒருங்கிணைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை 5 வருடம் பூர்த்தி செய்ய துணைபுரிந்தனர். அது நாம் அதிமுகவிற்கு செய்த உதவி என்று பெருமிதம் கொள்ள தேவையில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முழுமையாக ஆட்சிபுரிய உறுதியாக நிற்கும் என்று நம் கட்சியின் வ்ரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும்.

பெரும்பான்மை இல்லாத இடங்களில் கூட சில கட்சிகளை துணைக்கழைத்து ஆட்சி புரிய முயல்வோம், இல்லாவிடில் கர்நாடகம் போல நமக்கான நேரம் வரும்வரை காத்திருப்போம். காங்கிரஸ் கலைத்த ஆட்சிகளின் எண்ணிக்கை கணக்கில அடங்காது. அது தான் உண்மையில் பாசிசம்.

சரி விஷயத்துக்கு வருவோம். நான் மேல் சொன்ன உதாரணத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது.

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு

ஒவ்வொரு மாநிலத்திலும் தனக்கான நேரத்துக்காக காத்திருந்து வெற்றிகனியை சுவைக்கிறது பாஜக என்னும் கொக்கு. சில மாநிலங்களில் உடனே கிடைத்து விடுகிறது. சில மாநிலங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

பீகாரில் நாம் 15 வருடத்திற்கு முன்னரே நாம் கூட்டணி ஆட்சி அமைத்தோம். ஆனால் இன்று தான் நாம் அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.

உபியில் கல்யாண்சிங் மாயாவதி கூட்டணி 20 வருடம் முன்பே ஆட்சி அமைத்து விட்டோம். இன்று தான் யோகி தலைமையில் பூரண ஆட்சி அமைந்துள்ளது.

கர்நாடகத்தில் என்றும் நமக்கு நித்திய கண்டம், பூரண ஆயுசு தான். இன்று நிலையான ஆட்சி தரும் ஒரே கட்சியாக வளர்ந்துள்ளோம்.

கள நிலவரம்

ஆனால், இது தமிழகம்.

இங்கே களம் வேறு, இரு பெரும் கட்சிகள் இங்கே கட்டமைத்துள்ள திராவிட இயக்க சித்தாந்ததை உடைப்பது சுலபமான காரியம் அல்ல.

கிட்டத்தட்ட 70% வலுவான தொண்டர் பலம் கொண்ட கட்சிகளுக்கு மாற்று இங்கே இல்லை என்பது 2016லயே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் 2021ல் நாம் கூட்டணியுடன் களம் கண்டு 4 பேரை சட்டசபைக்கு அனுப்பி உள்ளோம்.

பொன்னார் ஒருமுறை சொன்னது போல், இட்லியா, தோசையா என்ற இரு மெனுக்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும் நம் மக்களுக்கு வடையும், பொங்கலும் என்றாவது ஒருநாள் தேவைப்படும்.

அதற்கு நாம் இங்கே நம்மை நிரூபிக்க வேண்டும். அதற்கான களம் அமைத்து தந்துள்ளது நமது தேசிய தலைமை. தேசிய திட்டங்கள் எந்த மாநிலத்திலும் வெற்றி தரும் என்று நினைப்பது பகல்கனவு. தேசிய அளவில் 2ல் துவங்கி, 82ல் மேல் உயர்ந்து இன்று 303ல் நாம் நிற்பதை போல, தமிழகத்தில் 4ல் கணக்கை மீண்டும் இங்கு துவங்கியுள்ளோம்.

மீண்டும் என்று சொல்ல காரணம், முன்னர் ஒருமுறை நமக்கு கிடைத்த வாய்ப்பை நாம் தவறவிட்டு விட்டோம். ஆனால் இந்த முறை, இந்த 4 தொகுதிகள் ஒவ்வொன்றையும் உதாரண தொகுதியாக (Model Constituency) உருவாக்கினால் போதும்.

அதுவே நமக்கு பெருமளவில் பலமாக அமையும். அந்த நான்கு தொகுதியின் வளர்ச்சி, நாளை 234 தொகுதியிலும் பிரதிபலிக்க மக்கள் சிந்தனையை தூண்ட வேண்டும். அதுவே நாளை அது நாற்பதும் ஆகலாம், 140ம் ஆகலாம்.

மத்திய அரசின் திட்டங்கள் கைகொடுக்குமா?

மத்திய அரசு திட்டங்கள் என்றும் இங்கே முன்கை எடுக்காது. அது மட்டுமே நமக்கு ஓட்டு வாங்கி தராது. மாநில அரசுகள் ஸ்டிக்கர் ஓட்டி தான் மக்களுக்கு அவை அடையாளப்படுத்தப் பட்டிருக்கும். இங்கே மட்டுமல்ல, அனைத்து மாநிலத்திலும் இதே நிலைமை தான். பாஜக ஆளும் மாநிலங்கள் விதிவிலக்கு.

இந்த திட்டங்கள் நம் ஓட்டுவங்கிக்கு முதன்மையாக துணைபுரியாது என்பது என் கருத்து. அவை என்றும் துணை காரணிகள் மட்டுமே. மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப, மாற்றம் வேண்டும் என்ற மக்கள் நம்மை நோக்கி வருகையில், இவை கூடுதல் பலமாக (added advantage) கைகொடுக்கும்.

பயனாளிகள் எல்லாம் ஓட்டு வங்கியாக உருவெடுக்கும் என்றால், மாற்று கட்சிகளுக்கு இடம் ஏது. அது தான் காரணி எனில், 2004ல் வாஜ்பாய் திரும்ப வென்றிருப்பார். இங்கே அதிமுக திரும்ப ஆட்சி அமைத்திருக்கும்.

இலவசங்கள் மட்டுமே தீர்மானிக்கும் என்ற கருத்தையும் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. எடைதூக்கி பார்த்தல், அதிமுகவின் இலவசங்களின் பலம் அதிகம் இம்முறை. 2016ல் திமுக அறிவித்த இலவசங்கள் அதிகம்.

இனிவரும் தேர்தல்களில் இலவசங்களும், பண விநியோகமும் மட்டும் தீர்மானிக்காது என்ற கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.

அந்த களம் தான் நமக்கானது. மாற்றத்தை நோக்கிய மக்கள் நம்மை தேர்ந்தெடுக்க முனைவர்.

கூட்டணி அரசியல்

இங்கே இருகட்சிகளில் அதிமுக நேற்று வரை நம் தோழமை கட்சி. கூட்டணி வைத்தது காலத்தின் கட்டாயம். இனி அவர்களையோ, அந்த முடிவு எடுத்த தலைவர்களையோ குற்றம் குறை சொல்லாமல், நாம் தனித்து ஓர் எதிர்க்கட்சியாக செயல்பட துவங்குவோம். நாம் எதிர்க்கட்சியாக செயல்படும்போது தான் பலமடங்கு பலத்துடன் எழுந்து நின்றது வரலாறு. கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகியவையே சிறந்த உதாரணம். இதுவே நம்மை நிரூபிக்க நமக்கு கிடைத்த வாய்ப்பு.

மேலும் ஒரு இடதுசாரி ஆதரவு கொண்ட, இந்துமத விரோத, பிரிவினைவாத கொள்கை வளர்த்தெடுக்கும் திராவிட கட்சி ஆட்சியில் இருப்பது நமக்கு நல்லதொரு வாய்ப்பு.

இயல்பாக தேசத்தை விரும்பும் வலதுசாரி ஆதரவாளர்கள் நம் பக்கம் ஈர்க்கப்படுவர். இதுவரை அதிமுக ஒரு வலதுசாரி ஆதரவு கொண்ட திராவிட கட்சி. நம் ஓட்டுவங்கி பெருமளவில் பங்குபோட்டு கொண்ட கட்சி.

இன்று நாம் நம்மை தனித்து அடையாளப்படுத்தி வலதுசாரி ஆதரவாளர்களை வயப்படுத்த நமக்கு ஒரு அரிய வாய்ப்பு. அதற்கு நாம் தயராக வேண்டும். ஒலிக்கும் தமிழ்தேசிய குரல்களும், திராவிட இன குரல்களும் நம் தேச ஒற்றுமைக்கு விடுக்கும் பெரிய ஆபத்து என்பதை மக்கள் போகப்போக உணர்வர். இயல்பில் தேசிய சிந்தனை கொண்ட மக்கள், நம்மை நோக்கி வரும்காலம் வெகுதூரம் இல்லை.

ஆளுமை மிக்க தலைவர்கள்

பாஜகவில் தோற்ற பொலிவுடன் ஆளுமை செலுத்திய தலைவர்கள் அரிது. நாம் மாற்றுகட்சியை பார்த்து சூடு போட்டு கொள்ள முடியாது.

வாஜ்பாயியோ, மோடியோ ஒரு காலத்தில் 10% மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிச்சயமான தலைவர்கள் அல்ல. நம் கட்சியில் தலைவர்கள் பிறப்பதில்லை, தனிச்சையாக உருவாகிறார்கள்.

மஹாராஷ்டிரத்தில் தேர்தல் முடியும் வரை தேவேந்திர பட்நாவிஸ் யாரென்று பெரியளவில் பரிச்சயம் இல்லை. திரிபுராவின் பிப்லப் குமார் தேவ் தேர்வு அதை விட அதிசயம்.

கேசுபாய் பட்டேலுக்கு பதில் நரேந்திர மோடி பெயரை பரிந்துரைக்கும் வரை கட்சியினருக்கு மட்டுமே மிகப்பெரிய அளவில் மோடிஜி அறிமுகமானவர்.

இதே தான் மற்ற மாநிலங்களிலும். கடந்த 10 வருடத்தில் கட்சியை கண்டவர்களுக்கு இது அவ்வளவாக புரியாது. ஆகையால் தமிழகத்தில் நாளைய தலைவர்கள் பிறந்து இருப்பார்கள், நம்மில் யாரோ ஒருவர் தான் அவர்.

நேற்றைய தலைவர்கள் போட்ட விதை, இன்றைய தலைவர்கள் ஊற்றும் நீரில் வளர்ந்து நாளைய தலைவனை உருவாக்கபோகிறது. அந்த ஆளுமை தலைவர் முருகனாகவோ, அண்ணாமலையாகவோ கூட இருக்கலாம்.

அவர்கள் அவர்தம் பணிசெய்ய நாம் அனுமதிக்க வேண்டும், குறை மட்டுமே சொல்லி அவர்களை திசை திருப்பிவிட கூடாது.

என்ன தான் செய்யவேண்டும் நாம்?

அதுவரை நாம் என்ன செய்ய வேண்டும்.

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சோசியல் மீடியா மட்டுமே கள அரசியல் இல்லை. களப்பணியாளர்கள் நம்மில் இருந்து தான் உருவாக வேண்டும். களப்பணியாளர்களுக்கு தேவையான ஆதாரங்களை பகிரத்தான் நம் சமூக ஊடக ஆதவாளர்கள்.

விருப்பமுள்ள தன்னார்வலர்கள் களப்பணியாற்ற தயாராக வேண்டும். தெருமுனை பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். இன்றைய இளைஞர்கள் பலர் நல்ல கருத்துக்களை எடுத்துரைப்பதை இந்த ஒரு மாதத்தில் ஸ்பேஸ் தளத்தில் பார்க்கிறேன். நல்ல பேச்சாளர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தெருமுனை பொதுகூட்டங்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது தவறு, நீயென்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை இருக்கு.

நம் கட்சிக்கு செய்வது நம் நாட்டிற்கு செய்யும் தொண்டு.

தேசமும் தெய்வீகமும் தான் நம் கொள்கை. தேசம் காக்கும் வீரர்கள் நாம்.

5-10 வருடங்களில் இருகட்சிகளில் ஏதேனும் ஓன்று விலகி நமக்கு வழிகொடுக்கும். அதுவரை நம் செயல் பணிசெய்து கிடப்பதே. ஒற்றைக்கால் கொக்காய் காலம்கனிந்து வரும்வரை காத்திருப்போம்.

நாளைய வருங்கால சந்ததியினருக்கு நல்வாழ்வை தந்திட நம் தலைவர்கள் வழியில் பொறுமையாய் காத்திருப்போம். அதுவரை ஆதங்கங்களை கொட்டி தீருங்கள், ஆனால் கட்சியின் மீது அதினும் அதிக நம்பிக்கை கொள்ளுங்கள். நம் கட்சியின் கட்டமைப்பையும், செயல்பாட்டையும் தெரிந்தவர்களுக்கு இது எளிதில் புரியும்.

பொறுமை கடலினும் பெரிது!

ஜெய்ஹிந்த்

~முகுந்தன்.

4 Replies to “பொறுமை கடலினும் பெரிது”

  1. மிக தெளிவாக எடுத்து உரைத்துள்ளீர்கள்…அருமையான பதிவு👏👏👏👏👏💐💐💐

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.