ட்ரிங் ட்ரிங் – ஆஹா இந்த மணியொலிக்குத்தான் இன்னமும் எத்தனை ரசிகர்கள்!  இன்று கூடத் தங்களது மொபைலில் இந்த மணியோசையை ரிங்டோனாக வைத்திருப்பவர்கள் ஏராளம்.  இந்த ஒலி நினைவூட்டுவது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மட்டுமே.

 

கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பார்ப்போம். இன்றக்கு இதன் குறைகளாகச் சொல்லக்கூடிய ஏராளமான ஊழியர்கள் என்பது திடீரென்று இந்த வருடம் சேர்ந்தவர்களில்லை.  ஆரம்ப காலத்திலிருந்தே இத்தனை ஊழியர்களும் இருந்தார்கள். அப்புறம் ஏன் இப்போது மட்டும் நஷ்டம்?

 

4ஜி இல்லை என்பது ஒரு குறை —  சரி, முதன்முதலில் 3ஜி சர்வீஸை ஆரம்பித்த நிறுவனம் ஏன் உச்சத்திற்குச் செல்ல முடியவில்லை? சுமார் ஒரு வருட காலம் இது மட்டுமே 3ஜி சேவைகளை வழங்கியது.  4ஜியை வைத்துக் கொண்டு ஜியோ மாயாஜாலம் காட்டியது ஏன் இதனால் முடியவில்லை?

 

4ஜி இல்லை என்பதை முழுமையாக ஒத்துக்கொள்ள முடியாது. சொல்லப்போனால் ஒரு மாதிரி 4ஜி சேவையை முதன்முதலாக ஆரம்பித்த நிறுவனம் பி எஸ் என் எல் தான். ஆச்சரியமாக இருக்கிறதா? வை-மேக்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் 3.5ஜியா அல்லது 4ஜி க்ளோனா என்று சொல்ல முடியாத ஒரு தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தது நிறுவனம். எப்படி சி டி எம் ஏ தொழில்நுட்பம் ஜி எஸ் ம்மிடம் தோற்றதோ அது போல வை-மேக்ஸ் என்பது எல் ட் ஈ யிடம் தோற்றது.  இது ஆரம்பம்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் எஸ் டி டி என்ற ஒன்று இருந்தது ஞாபகமிருக்கிறதா?  ராத்திரி பத்து மணிக்குமேல் குறைந்த கட்டணம் என்பதால் கண்விழித்து அழைத்த நேரமது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு பேசவேண்டுமென்றாலும் அது எஸ் டி டி.  

 

காலப்போக்கில் அவை மறைந்து இந்தியாவெங்கும் ஒரே மண்டலமாயிற்று. இங்கு ஆரம்பித்தது பி எஸ் என் எல்லின் சரிவு.  அதுவரைக்கும் எஸ் டி டி மூலம் லாபம் பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தின் வருமானம் பலமடங்கு குறைய ஆரம்பித்தது.  உடனே அரசு நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவே இது குறைக்கப்பட்டது என்று கூவ வேண்டாம் டோலர்களே. நூறு கோடி மக்களின் நன்மைக்காக ஒரு நிறுவனம் நஷ்டமடைவது தவறேயில்லை. உடனே கொடி பிடிக்காதீர்கள். வாட்ஸப் காலால் ஐ எஸ் டி வருமானம் போனது என்று தனியார் நிறுவனங்கள் எதிர்த்தபோது மக்களுக்கு லாபமென்றால் அது தப்பில்லை என்று கோஷம் எழுப்பியது இதே போராளி கும்பல்தான் என்பதை நான் மறக்கவில்லை.

 

இப்போ உங்க வீட்டுல கல்யாணம் ஆகாத சகோதரர்கள் 10 பேர் இருக்காங்கன்னு வெச்சிக்குவோமே.  எல்லாரும் நல்ல வேலையில சம்பாதிக்கறாங்க. கடைசி தம்பி மட்டும் தொழில் பண்றேன்னுட்டு எப்பப்பாத்தாலும் நஷ்டத்தையே காமிக்கறான். எத்தனை நாளைக்குத்தான் மத்த சகோதர்கள் இந்த நஷ்டத்தை ஈடுகட்டுவார்கள்? வேணும்னா கூடப்பிறந்த பாவத்துக்கு உக்கார வச்சி சோறு போடலாம், நஷ்டத்தையும் சரி கட்டணும்னா? இதேதான் இன்றைய நிலை.

 

எஸ் டி டி மட்டுமல்ல, ஐ எஸ் டி யிலும் வருமானம் குறைய ஆரம்பித்தது.  இண்டர்னெட் கால், மெஸ்ஸஞ்சர் இதெல்லாம் ஐ எஸ் டியின் தேவையைக் குறைத்தன. இதிலே ஒரு விஷயம் கவனிக்கணும் – இந்த விலை குறைந்ததால் தொலைபேசி நிறுவனங்கள் செலவை விடவும் குறைந்த விலையில் சேவை தருவதாக அர்த்தமில்லை. விலை குறைத்தாலும் லாபம்தான் என்பதுதான் உண்மை. இதிலிருந்து இன்னொரு உண்மை புரியும் – அது வரைக்கும் அதிக கட்டணத்தை நம்மிடமிருந்து வாங்கிக் கொண்டு மக்களை மொட்டையடித்திருக்கிறார்கள். இதானே உண்மை? 

அரசு நிறுவனங்கள் நஷ்டம் அடைவது என்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முக்கிய காரணம் —  அரசு நிறுவனம் நஷ்டம் அடைந்தால் அது மக்களுக்குத்தான் பலன் என்ற முட்டாள்தனமான கருத்து. கூடவே இங்கே லாபம் என்பது ஒரு கெட்ட வார்த்தையாக்கப்பட்டு விட்டது – அதிலும் என்னுடைய லாபம் புனிதம், அடுத்தவனுடைய லாபம் பாவம். அத்தியாவசியமானதென்றாலோ அல்லது தனியார் துறை கொள்ளையடிக்கிறது என்றாலோ அதில் அரசின் பங்கு தேவை. உதாரணமாக கல்வி, மருத்துவம், சாலைப் போக்குவரத்து முதலியவை.  பண்டிகைக் காலங்களில் ஆம்னி பஸ்கள் கொள்ளையடிக்கின்றன. இதனைத் தவிர்க்க அரசு பேருந்து தேவை. ஆனால் அரசு நிறுவனத்தை விடவும் குறைந்த கட்டணத்தில் அதிக சேவைகளை வழங்கும் தொலைபேசித் துறையில் அரசு இன்னும் எதற்கு தொடர வேண்டும்?

 

விமான சேவையை எடுத்துக் கொள்வோம். ஏர் இந்தியாவில் உள்நாட்டுப் பயணம் செய்ய வேண்டுமென்றால் ஏகப்பட்ட கட்டணம். சேவையும் சொல்லுந்தரமன்று. அதே சமயம் அதைவிடக் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை அளிக்கும் தனியார் விமான நிறுவனங்கள் இருக்கும்போது இன்னமும் ஏர் இந்தியா எதற்கு?  ஆனா பாருங்க அரசு அதனை விற்க முன்வந்தாலும் வாங்க ஆளில்லை. அதே நிலைமைதான் பி எஸ் என் எல்லுக்கும். அம்பானிக்கு விற்று விடுவார் என்று கூறும் ஓட்டைவாய்களுக்கு ஒரு கேள்வி – சும்மா கொடுத்தாலும் பி எஸ் என் எல்லை ஒருவரும் வாங்க மாட்டார்கள். ஏன்னா அது யானையக் கட்டித் தீனி போடும் வேலை.

 

பிஎஸ்என்எல்லின் எம் டி சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார் – சுமார் 75% ஊழியர்களின் சம்பளத்துக்கே சரியாகிவிடுகிறது.  இதில் 60000 பேரை வி ஆர் எஸ்ஸில் அனுப்பலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். கணக்குப் பார்த்தால் தலை சுற்றுகிறது.  ஒருவருக்கு சுமார் 3000000 என்றாலும் 60000 பேருக்கு? 180,00,00,00,000. 2ஜீ கூட 176,00,00,00,000தான். நடக்கிற காரியமா இது?

 

முன்பு கிராமப்புறங்களில் தனியார் நிறுவனங்கள் சேவையளிப்பதில்லை. இப்போது பட்டி தொட்டியெங்கும் 4ஜிதான். போட்டி மட்டுமே சந்தையில் விலையைத் தீர்மானிக்கிறது. 

 

பிஎஸ்என்எல் என்றால் மொபைல் மட்டுமே இல்லை. லேண்ட்லைனும்தான். அதிலும் கம்பி வடத்தடங்களைப் பராமரிப்பதற்கு ஏராளமான ஆட்கள் தேவை – இது இன்னொரு வாதம். சொல்லப்போனால் இது மோசமான பக்கவாதம்.  இன்றைக்கு லேண்ட்லைன் சேவையில் பிஎஸ்என்எல் 50-60% மட்டுமே. மீதி தனியார் நிறுவனங்கள். அது மட்டுமல்ல பிராட்பேண்ட் என்ற ஒன்று மறந்து விட்டீர்களா? அதிலும் ஆக்ட், ஹாத்வே, யூ, செர்ரிநெட் போன்ற தனியார் நிறுவனங்கள் உள்ளன.  இவைகளும் கம்பிவடத் தடங்களை பராமரிக்க வேண்டியிருக்கின்றதே! அவைகளில் இந்த அளவுக்கு ஊழியர்கள் இல்லையே? எப்படி சமாளிக்கிறார்கள்? இவைகளில் பழுது என்றால் உடனடியாக கவனிக்கிறார்கள். ஆனால் பிஎஸ்என்எல் விஷயத்தில் அப்படிச் சொல்ல முடியுமா?

 

4ஜி இல்லை, அதனால் மொபைல் சேவையில் பின்தங்கியிருக்கிறோம் என்று சொல்லும் டோலர்களே பிராட்பேண்ட் சேவையில் இன்னமும் ஏன் ஆலையைல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாகவே இருக்கிறது பிஎஸ்என்எல்?  வேகமும் குறைவு, கொடுக்கப்படும் ஜி பி யும் குறைவு, கட்டணமும் அதிகம். பிராட்பேண்ட் சேவை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக டயர் 3, டயர் 4 பகுதிகளில் சேவையை விஸ்தரிக்கும்போது பிஎஸ்என்எல்லின் பிராட்பேண்ட் சேவையும் மொபைல் மாதிரித்தான் ஆகும்.

 

ஒரு விஷயம் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் – ஒரு அரசு நிறுவனத்தின் நஷ்டம் என்பது அரசாங்கத்தின் நஷ்டமல்ல. நீங்களும் நானும் செலுத்தும் வரிப்பணத்தின் நஷ்டம். அது பாதிப்பது நம்மைத்தான். எத்தனை காலம்தான் 130கோடிப் பேரின் வரிப்பணம் நாசமாப் போவது?

 

 

ஸ்ரீஅருண்குமார்

One Reply to “ட்ரிங் ட்ரிங் – கடைசி மணியா? பகுதி-2”

  1. இந்த நிறுவனம் வீழ்ச்சி அடைந்து சீன கம்யூனிஸ்ட் ஆதரவு தொழிற்சங்கங்கள் காரணமாக அமைந்தது என்றால் வியப்பு ஏதும் இல்லை இந்தியா சிறு பெரு தொழில் முடக்கம் இவர்கள் ங பங்கு மிக முக்கியமானது அது தொடர்ந்து அரசியல் ஆக்கப்பட்டு தொடர்ந்து கொண்டு உள்ளனர் இவர்களுக்கு மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதை எதிர்த்து கொண்டு அரசியல் செய்வது பிஎஸ்என்எல் வீழ்ச்சிக்கு மாறிவரும் தொழில்நுட்ப கட்டமைப்பு தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியாத அரசு அரசியல் எதிர்ப்பு கொண்ட நிலையில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.