
கருப்பு நிறத்தில் மேலே மட்டும் மஞ்சள் நிறத்தில் அம்பாஸடர்களும் ஃபியட் பத்மினிகளும் ஓடிக்கொண்டிருந்த காலம். அப்போதெல்லாம் டாக்ஸி வேண்டுமென்றால் தெருவில் நின்று கொண்டு எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் கதாநாயகி “ஏய் டாக்ஸி” என்று கத்தினால் டாக்ஸிக்கு முன்பாக வில்லன் தனது காரில் வந்து நிற்பான். டாக்ஸி ஸ்டாண்டுகள் ஒரு சில இடங்களில் மட்டும்தான் இருக்கும். இல்லையென்றால் ரிக்ஷாதான். அதுக்கப்புறம் ட்ராவல்ஸ்கள் தலை தூக்க ஆரம்பித்தன. ஆனாலும் அவையெல்லாம் ரொம்ப தூரம் போக வேண்டுமென்றால்தான். 90களில் கால் டாக்ஸி என்பது சென்னையில் புதிதாக ஆரம்பமானது. டாக்ஸிகளிலேயே போன் நம்பர் கொட்டை எழுத்தில் ஒட்டப்பட்டிருக்கும். எங்கு போக வேண்டுமென்றாலும் அந்த எண்ணை அழைத்து நீங்கள் எங்கிருக்கிறீர்கள், எங்கு போக வேண்டும் என்று கூறினால் உங்களுக்கு அருகில் இருக்கும் அவர்களது டாக்ஸியை அனுப்பி வைப்பார்கள். சென்னை நகரில் மட்டும் ஆரம்பத்தில் புற்றீசல் போல பல கால் டாக்ஸி நிறுவனங்கள் முளைத்தன. ஆனால் இது வெறும் கார்களை மட்டும் வைத்து இயக்குவது இல்லை. தொழில்நுட்பம் தேவை. அந்தத் தொழில்நுட்பமும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும், ஆகவே தரமுயர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும். இதனால் பல சிறு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. சென்னையில் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து நின்றன.
ஆனால் அவற்றிற்கெல்லாம் ஆப்பு வைத்தாற்போல வந்து சேர்ந்தது ஊபர் மற்றும் ஓலா. இவை மொபைல் ஃபோன்களில் இருக்கும் ஆப் மூலமாக இயங்குபவை. தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாகத் தங்களை தரமுயர்த்திக் கொண்டிருப்பவை.
சரி, இதெல்லாம்தான் எங்களுக்குத் தெரியுமே! இப்போ இத்தனை வருஷம் கழிச்சு எதுக்கு புதுசா சொல்றா மாதிரி எழுதறீங்கன்னு கேக்கறீங்களா? இருங்க. தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக இப்போது அமெரிக்காவில் ஊபர் நிறுவனம் டாக்ஸி புக் செய்வதற்கு ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது என்னன்னு கேக்கறீங்களா? அதாவது போன் மூலமாக டாக்ஸி புக் செய்வது.
நில்லுங்க அடிக்க வராதீங்க. நெஜமாத்தாங்க. ஆனால் அது ஆப் மூலமாக அல்ல, மொபைல் எண்ணை அழைத்து ஊபர் நிறுவனத்தில் ஒரு மனிதனிடம் பேசி உங்கள் இடத்துக்கு டாக்ஸியை வரவழைப்பது. நெஜமாவே 2020ல்தான் இது.
பெரும்பாலும் வயதானவர்கள் ஸ்மார்ட் ஃபோன் உபயோகிப்பதில்லை. அப்படியே உபயோகித்தாலும் வாட்ஸப் கால் இது போன்ற ஒரு சில பிரத்யோக பயன்களுக்காக மட்டுமே. அதிலும் க்ரெடிட் கார்டு, ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் போன்றவையெல்லாம் இவர்கள் பயன்படுத்துவதில்லையாம். இதுபோன்ற வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுக்க வேண்டும் மற்றும் இவர்களுக்கும் சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரிஸோனா மாகாணத்தில் இது முதன்முதலாக செயல்படுத்தப்படுகிறது.
காலம் எவ்வளவுதான் மாறினாலும் சில விஷயங்கள் மாறாது. அதிலே ஒன்றுதான் பர்ஸனல் டச் எனப்படும் மனித உறவுகள். எத்தனை காலம்தான் இயந்திரங்களையே கட்டிக் கொண்டு மாரடிப்பது? வங்கிகளில் போனால் காசு போட இயந்திரம், காசு எடுக்க இயந்திரம், பாஸ்புக்கில் என்ட்ரி போட இயந்திரம், காசோலைகளைப் போட ஒரு மரப்பெட்டி, அரசு வங்கிகளில் மட்டும்தான் கவுண்டரில் காசு கட்டுவதும் எடுப்பதும் நடந்து கொண்டிருக்கின்றது. அதுவும் எத்தனை நாளைக்கோ தெரியவில்லை. ஒருவிதத்தில் பார்த்தால் இவையெல்லாம் முன்னேற்றம் போலத் தோன்றுகிறது. ஆனால் விரைவிலேயே மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் வருகிறது சில மனிதர்கள் பதில் சொல்லும் விதத்தைப் பார்த்தால்.
அதெல்லாத்தையும் விடுங்க, இது ஒரு பெரிய செய்தான்னு தூக்கிட்டு வந்துட்டீங்களான்னு கேக்காதீங்க மக்களே. இது ஒரு பெரிய செய்தி இல்லை, ஆனால் இதன் பின்னால் பெரிய செய்தி உள்ளது.
இன்றைக்கு ஆன்லைன் வணிகத்தைத் தடை செய்ய வேண்டுமென்ற கோஷம் உரத்து ஒலிக்கின்றது. ஆனால் தடைசெய்ய வேண்டும் என்று கேட்பது வணிகர்கள்தானே தவிர பொதுமக்கள் இல்லை. இன்றைக்கு எனக்கு ஒரு ரூபாய் குறைவாகக் கிடைத்தால் நான் அங்குதான் வாங்குவேனே தவிர இந்தக் கடையில் ரொம்ப காலமாக வாங்குகிறே, ரொம்பப் பழக்கம் என்ற விசுவாசமெல்லாம் இன்றைய தலைமுறைக்கு இல்லை.
இன்றைக்கு நமது பாரம்பரியமான தெருமுனை மளிகைக்கடைகளில் நேரில் வந்து சாமான் வாங்குபவர்கள் யார்? வயதானவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பணியாளர்கள்தான் பெரும்பாலானோர். இதிலும் நீ எதுக்கு வெளியே போறே? நான் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துடறேன், வீட்டுக்கே வந்துடும் என்று சிறிசுகளின் அலப்பறை. ஊபரின் புதிய ( பழைய ) தொழில்நுட்பத்தில்தான் இருக்கிறது சூட்சுமம். ஆன்லைன் மாதிரியும் இருக்க வேண்டும், மளிகைக்கடையாகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மளிகைக் கடையும் தங்கள் அக்கம்பக்கத்திலும் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடமும் தங்களது வாட்ஸப் எண்ணையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்து விடுங்கள். வாட்ஸப்பிலோ அல்லது தொலைபேசியிலோ ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே டெலிவரி கொடுக்கலாம். இன்றைக்குப் பல மளிகைக்கடைகளில் குறிப்பிட்ட தூரம் வரைக்கும் இலவச டோர் டெலிவரி கொடுக்கிறார்கள். வேண்டுமென்றால் வணிகர் சங்கம் முன்வந்து இவர்களே ஒரு டெலிவரி நிறுவனம் ஆரம்பித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கடைகளை இணைத்து குறைந்த கட்டணத்தில் டெலிவரி சேவையை ஆரம்பிக்கலாம்.
கடைக்கு நேரில் வர வேண்டிய அவசியம் குறையும்போது ஏராளமான பொருட்களை வாங்கிக் குவிக்க பெரிய இடம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. போன் இருந்தால் போதும், கடை விடுமுறை அன்றைக்கும் வியாபாரம் செய்யலாம். பொருட்களை வாங்க முதல் போட வேண்டிய அவசியமில்லை, அன்றன்றைக்கு பெரிய விநியோகஸ்தரிடம் ஆர்டர் கொடுத்து அன்று இரவே பணம் செட்டில் செய்து விடுவதால் கடன் இல்லை, அதனால் லாபவிகிதம் கூடுகிறது. இந்த லாபத்தைப் பொருளின் விலையில் குறைத்தால் ஆன்லைனை விடக் குறைவான விலையில் பொருட்களை விற்கலாம். இப்போது மறுபடியும் அந்த வரிகளைப் பாருங்கள். “இன்றைக்கு எனக்கு ஒரு ரூபாய் குறைவாகக் கிடைத்தால் நான் அங்குதான் வாங்குவேனே தவிர இந்தக் கடையில் ரொம்ப காலமாக வாங்குகிறே, ரொம்பப் பழக்கம் என்ற விசுவாசமெல்லாம் இன்றைய தலைமுறைக்கு இல்லை”.
நம்மைச் சுற்றிலும் தினந்தோறும் ஏராளமான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்தச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகளையும் காரணங்களையும் ஆராய்ந்தறிந்து அவற்றை நமக்கு உபயோகப்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். செய்யலாமா?
ஸ்ரீஅருண்குமார்