
பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை இந்தப் பன்முகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குவதோடு அதன் அஸ்திவாரத்தையே
அசைத்துப் பார்க்கிறது. பன்முகத்தன்மை இப்போது பலமுனை சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பன்முகத்தன்மை அழிந்தால் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் – இப்படிப்பட்ட வாதங்கள் அதிகமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது, குறிப்பாக மோடி இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து.
பன்முகத்தன்மை சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
உண்மையிலேயே பன்முகத்தன்மைக்கு எதிராக யுத்தம் ஆரம்பித்துள்ளதா? யார் இதன் பின்னே இருக்கிறார்கள்? இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்?
பவர்பாயிண்ட் என்ற ஒன்று வந்தபிறகு எந்த ஒரு விஷயத்தையும் ஒரு வரியிலேயே அடக்கிவிட வேண்டும், அதற்கான தீர்வுகளை ஒரு பக்கத்திலேயே அடக்கிவிட வேண்டும் என்ற நிர்பந்தம். இப்போது அதன் இடத்தை ட்விட்டர் பிடித்துக் கொண்டது. இதனால் எந்த ஒரு பிரச்சினையையும் ஆழமாகப் புரிந்து கொள்ள யாருக்கும் பொறுமையில்லை. பிரச்சினையைப் புரிந்து கொள்ளாவிட்டால் தீர்வு காண்பது எப்படி? யாரோ சொன்னார்கள் என்பதால் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வது, முன்வைக்கப்படும் தீர்வுகள் சரியானதா, ஏற்புடையதா என்பதைப் பற்றிய அக்கறையின்றிப் போராட்டத்தில் இறங்குவது என்பவை இப்போது அதிகரித்துவிட்டது. அதற்கு உறுதுணையாக விஷவித்தைப் பரவலாக விதைப்பதற்கு சமூக ஊடகங்களும் வழிகோலுகின்றன.
பன்முகத்தன்மை என்றால் என்ன?
பல மொழிகள்,கலாச்சாரங்கள், மதங்கள், சாதிகள், உணவுப் பழக்கவழக்கங்கள்,திருவிழாக்கள் – இவையே ஒரு நாட்டின் பன்முகத்தன்மை.
அமெரிக்கா என்ற நாடு ஆதிக்குடிகளான சிவப்பிந்தியர்களைக் கொண்டமைந்த நாடு. சிவப்பிந்தியர்கள் அனைவரும் ஒரே இனம் என்றாலும் அவர்களிடையேயும் பல்வேறு பழக்க
வழக்கங்களும் வித்யாசங்களும் இருந்தன. ஆனாலும் அவற்றை ஒருமுகத்தன்மையாகவே சித்தரித்தது பின்னாளைய அமெரிக்கதேசம். பிறகு வெள்ளையர்களின் குடியேற்றம் ஆரம்பித்தவுடன் சிவப்பிந்தியர்கள் ஒடுக்கப்பட்டு, சிலகாலத்தில் பெருமளவில்
அழிக்கப்பட்டு ஒருமுகம் ஒழிந்து பலநாடுகளிலிருந்தும் குடியேறிய பலமொழி, பல கலாச்சாரங்களைக் கொண்டவர்களால் பன்முகத்தன்மை அமெரிக்க மண்ணுக்கு
அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் எத்தனை காலத்திற்கு? அமெரிக்காவில் இன்றைக்கு ஆங்கிலம் மட்டுமே கோலோச்சுகிறது. பிற மொழிகள் என்ன ஆயின? அமெரிக்கக்
கலாச்சாரம் என்று நாம் பேசுகிறோம். ஆனால் பன்முகத்தன்மை எப்படி ஒரே கலாச்சாரத்தை உள்ளடக்கியதாகும்? அமெரிக்கா முழுவதும்– அலாஸ்கா தவிர – ஒரே வித உணவுப் பழக்கம்தான் பின்பற்றப்படுகிறது. அப்போது அமெரிக்காவின் பன்முகத்தன்மை என்ன ஆயிற்று?
இந்தக் கேள்வியோடு நாம் இப்போது இந்தியாவுக்கு வருவோம்.அமெரிக்காவை விடவும் மிக மிகப்பழமையான நாடு பாரதம்.இங்கே பலநூறு மொழிகள் பன்னெடுங்காலமாகப் பேசப்பட்டு
வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்து மதமும் சிலநூறு ஆண்டுகளாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களும் தழைத்தோங்கும் நாடு இது. பல்வேறு
கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், வழிபாடுகள்,திருவிழாக்கள், பண்டிகைகள் என்று வண்ணமயமாகத் திகழும் நாடு இது. இங்குதான் சோதனை ஆரம்பம்.
மொழி
பிரதானமான மொழி ஹிந்தியாக இருந்தாலும் ஹிந்தி பேசாத மக்கள் நிறைந்திருக்கும் நாடு இந்தியா. ஹிந்தியைத் திணிப்பதாக அவ்வப்போது எதிர்ப்புகள் எழுந்தாலும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில்துறை, வியாபார நிறுவனங்கள் என்று எங்கு பார்த்தாலும் நீக்கமற ஆக்ரமித்துள்ளது ஆங்கிலம்தானே!
உலகமயமாக்கல் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் இன்றியமையாதது என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் சீனா, ஜப்பான், ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகள் இந்த அளவுக்கு ஆங்கிலத்துக்கு அடிமையாகவில்லையே! சொந்த நாட்டின் மொழிகளை ஒதுக்கிவிட்டு ஒரே மொழியை நோக்கி நடைபோடுவது பன்முகத்தன்மையா?
கலாச்சாரத்தின் ஒரு பகுதியான உடை
ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சல்வார் கமீஸ் என்பது வடஇந்தியாவியலே மட்டும் அணியும் உடையாக இருந்தது.தமிழ்நாட்டில் புடவையும் தாவணியும்தான் பெண்களின் உடை.ஆனால் இன்று? தாவணி கிட்டத்தட்ட வழக்கொழிந்தே போய்விட்டது. புடவையும் தாவணியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் சல்வார்கமீஸின் இன்னொரு அவதாரமான சுரிதார். அதற்கடுத்து ஜீன்ஸும் பேண்டும். இன்றைக்குப் பெரும்பான்மையான தனியார் நிறுவனங்களில் பெரும்பாலானவர்களின் உடைகள் மேல்நாட்டினரைப் பின்பற்றியே இருக்கிறது. தமிழ்நாட்டின் பாரம்பரிய உடை ஒழிந்தது மட்டுமன்றி ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்யாசமின்றி ஒரே மாதிரியான உடையை இருபாலரும் அணியும் நிலை இன்று. இதுதான் பன்முகத்தன்மையா?
உணவுப் பழக்க வழக்கம்
ஒவ்வொரு மாநிலத்துக்கு பாரம்பரியமாக பிரத்யோகமான உணவு முறை இருந்தது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் கேழ்வரகு, கம்பு முதலியவையே பிரதான உணவு. ஆனால் அதை ஒழித்து அரிசி ஆக்ரமித்துவிட்டது. இன்றைக்கு? கோதுமையும் அதைவிட அதிகமாக ஓட்ஸும். இட்லியும் தோசையும் சாப்பிட்டவர்கள் இன்றைக்கு பாலுடன் சீரியலை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். நம் பாரம்பரியத்தை ஒழித்துக்கட்டிவிட்டு மேல்நாட்டு உணவுகளை ஏற்றுக் கொள்வதுதான் பன்முகத்தன்மையா?
இந்தியாவின் ஒவ்வொரு பாகத்திலும் பெண்கள் ஒவ்வொரு மாதிரியான தலையலங்காரத்தைப் பின்பற்றி வந்தனர். ஆனால் இன்றைக்கு அவை எல்லாம் மாறி மேல்நாட்டினரைப் போலத் தலையலங்காரத்தைப் பின்பற்றுகிறோம். இதுதான் பன்முகத்தன்மையா? இப்போதெல்லாம் இந்தியப் பெண்கள் பொட்டு வைப்பதுகூடக் குறைந்து விட்டது, அதிலும் தனியார்
நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடையே பொட்டு வைப்பது அரிதாகிவிட்டது. எந்த ஒரு விமானப் பணிப்பெண்ணாவது பொட்டு வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
பண்டிகைகளும் திருவிழாக்களும்
பொங்கல் பண்டிகையின்போது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தேடித்தேடி வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்பியகாலம் எங்கே போனது? இன்றைக்கு வாழ்த்து அட்டைகள் எல்லாமே பிறந்தநாள், ஆங்கிலப் புத்தாண்டு இதையடுத்து மேல்நாட்டினர் கொண்டாடும் அன்னையர்தினம், தந்தையர்தினம், காதலர்தினம் இவைகளுக்குத்தான். நமது பாரம்பரியத்தைப் புறந்தள்ளிவிட்டு வியாபார உத்தியாக மேல்நாட்டினர் கண்டுபிடித்த கண்டநாட்களைக் கொண்டாடுவதுதான் பன்முகத்தன்மையா?
தீபாவளி –நாட்டு மக்கள் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடும் ஒரு பண்டிகை. ஆனால் மாசு கட்டுப்பாடு என்ற போர்வையில் இதற்கு ஏகப்பட்ட தடைகள். இப்போதெல்லாம்
தீபாவளி என்பது தொலைக்காட்சியில் நடிகர் நடிகைகளின் பேட்டியும் புதுப்பட அலசலுமே என்றாகிவிட்டது. கிராமங்கள் தோறும் உறவுகளும் நட்பும் ஒன்றுகூடிக் கொண்டாடும்
திருவிழாக்கள் பிரதானமாக இருந்த நாட்டில் பகுத்தறிவு என்ற பெயரால் அவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறோம். இதுதான் பன்முகத்தன்மையா?
கடைசியாக, ஆனால் முக்கியமானதாக, மதம் — ஹிந்துக்கள் மட்டுமே இருந்த இந்த நாட்டிலேதான் பவுத்தம் ஜைனம் மற்றும் சீக்கிய மதங்கள் தோன்றின. ஹிந்துமதம் என்று நாம் கூறினாலும் அது ஒரு மதமாக இருந்தது கிடையாது. மக்களின் வாழ்க்கை முறையே ஹிந்து மதம். அதிலும் ஏராளமான கிளைகள் பிரிவுகள் வித்யாசங்கள் என்று உயிரோட்டத்துடன் இருக்கிறது. எங்கிருந்தோ வந்த பார்சிகளும் இங்கே சம உரிமைகளோடு சந்தோஷமாக வாழ்கின்றனர். இதுதான் பன்முகத்தன்மை. ஆனால் இந்தப் பன்முகத்தன்மையைக் குலைக்கும் நோக்கோடு நாட்டு மக்கள் எல்லோரும் ஒரே மதமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மதம்மாற்றுவது பன்முகத்தன்மையா?
பன்முகத்தன்மைக்கு ஆபத்து என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஆபத்து எந்த ரூபத்தில் வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே பன்முகத்தன்மையைக் காப்பாற்ற முடியும்.
நடுநிலை என்ற பெயரில் நமது கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் கெடுமதியாளர்களை இனம்கண்டு கொண்டு வேரோடு பிடுங்கியெறிய வேண்டிய நேரம் இது.
– ஸ்ரீஅருண்குமார்