
இந்த ஆண்டு 5,031 கிராமங்கள் தண்ணீர் சார்பற்ற (நீர் ஆதாரங்களில் தன்னிறைவு பெற்றவை) கிராமங்களாக மாற்ற தேர்ந்தெடுக்கப்டுட்டுள்ளதாகவும் மேலும் 6,200 கிராமங்கள் 2018-19 ஆண்டிற்காக அடையாளம் கண்டுள்ளதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
இந்த செய்தி www.mid-day.com என்ற இணையத்தில் வெளியானது,அதை இங்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளோம்.
மஹாராஷ்ட்ரா முதலைமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ‘ஜல்யுக்த் ஷிவர்’ என்ற திட்டத்தின் மூலமாக 11 ,247 கிராமங்கள் தண்ணீர் சார்பற்ற (நீர் ஆதாரங்களில் தன்னிறைவு) கிராமங்களாக ஆகியுள்ளது என்று கடந்த புதன்கிழமை அன்று கூறியுள்ளார். இந்த ஆண்டு 5,031 கிராமங்கள் தண்ணீர் சார்பற்ற கிராமங்களாக மாற்ற தேர்ந்தெடுக்கப்டுட்டுள்ளதாகவும் மேலும் 6,200 கிராமங்கள் 2018-19 ஆண்டிற்காக அடையாளம் கண்டுள்ளதாகவும் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்சிங்க் மூலம் தொடர்பு கொண்டு பேசும் போது இந்த விவரங்களை முதலமைச்சர் வெளியிட்டார். இந்த தொடர்பின்போது, ”ஜல்யுக்த் ஷிவர்”, ”தேவை அடிப்படையில் பண்ணை குளம்”, ”கல்முக்த்த தரன் –கல்யுக்த்” (வண்டலற்ற நீர்த்தேக்கங்கள், வளமான விவசாய நிலம்), ”அனைவருக்கும் வீட்டு வசதி” ஆகிய திட்டங்களை ஆய்வு செய்தார். இந்த ஆண்டு ஜல்யுக்த் ஷிவர் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் தேவையான பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்கும்படி ஃபாட்னாவிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். “இவ்வேலைகளை முடிப்பதற்கு நாளையே 1,000 கோடி ரூபாய் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார். பண்ணைக் குளங்கள் ஏற்படுத்தி தரும் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த இலக்கான 1,12,311 குளங்களில் 76,106 பண்ணை குளங்களுக்கான பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான இலக்குகளை அடைந்துள்ளன என்றும் 17 மாவட்டங்கள் 54 சதவீதத்திற்கும் அதிகமான இலக்குகளை அடைந்துள்ளன என்றும் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 12.50 லட்சம் விண்ணப்பங்களில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 10 லட்சம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 1,00,265 கிணறுகள் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும் 76,689 கிணறுகளை நிர்மாணிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கல்முக்த்த தரன்-கல்யுக்த் ஷிவர் திட்டத்தின் கீழ், 1,40,97,856 கன மீட்டர் வண்டல் அகற்றப்பட்டுள்ளது.கொங்கன் பகுதியில் உள்ள கிராமங்களையும் ‘ஜல்யுக்த் ஷிவர்’ திட்டத்தின் கீழ் சேர்க்குமாறு பாட்னாவிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இப்பகுதிகளில் நல்ல மழை பெய்தாலும் கோடைகாலத்தில் டேங்கர் தண்ணீர் தேவைப்படுகிறது என்பதால் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தேவைப்பட்டால் ஓய்வுபெற்ற ஊழியர்களின் சேவைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஆலோசனை கூறினார்.
ஆசிரியர் கருத்து:
மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க இவ்வாறு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று சற்று எண்ணிப்பாருங்கள். மணல் கொள்ளையை தடுப்பது, ஏரிகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, மழை நீரை சரிவர சேமிப்பது, தடுப்பணைகள் கட்டுவது போன்ற ஒன்றையாவது கடந்த 40 ஆண்டுகளில் மாநில அரசுகள் செய்துள்ளதா? இது எல்லாவற்றிற்கும் மத்திய அரசாங்கம் எப்போதாவது உதவமாட்டோம் என்றோ அல்லது இவைகளை செய்யக்கூடாது என்றோ குறியுள்ளதா? யாரை குற்றம் சொல்வது? நீங்களே முடிவு செய்யுங்கள்