எப்-16; அமெரிக்காவின் அதி நவீன இராணுவ விமானம். சூரியன் உதிக்கும் முன்னே காற்றை கிழிக்கும் அம்பினைப் போல நம் இந்திய வான் எல்லையை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது.

சூரியன் உச்சந்தலையை சுடும் வரை இழுத்துப் போர்த்தி தூங்கும் கொடுப்பினை அவர்களுக்கு இல்லை, பாவம். எப்பொழுது வேண்டுமானாலும் பறக்க உத்தரவு வரும் கட்டாயம். ஆம்! அவர்கள் தான் இந்திய வான்படையில் இருக்கும் இராணுவ விமானிகள்.

அன்றும் அப்படித்தான், அதிகாலை ஐந்து மணியளவில் நண்பர்களுடன் அளவளாவியபடி தேனீர் அருந்தி கொண்டிருந்தார் அவர். நேற்று தீவிரவாதிகளின் முகாம் மீது நடந்த வான் வழித் தாக்குதல் பற்றி பேசி சிரித்தவண்ணம் இருந்தனர் அவரும் அவரது நண்பர்களும்.

காதை கிழித்து கொண்டு சத்தம் வரும் திசையை நோக்கினார். கண்ணிமைக்கும் நொடியில் தன் சீருடைக்கு மாறி, அங்கே நிறுத்தி வைக்க பட்டிருந்த MIG-21 விமானத்தில் ஏறி இமைப்பொழுதில் கழுகைப் போல வானில் பறந்தார்.

அருகில் சென்றதும் தான் அவர் அதை உறுதி செய்தார், அது நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட அமெரிக்க விமானம். அதன் வால்புறத்தில் இருந்த பச்சை கொடியை கண்டதுமே அவரது கண்கள் தீப்பிழம்பாகின.

அது எதிரி நாட்டு விமானமாயிற்றே என்று துரத்த ஆரம்பித்தார்!!

அதி நவீன தொழிநுட்பம் கொண்ட விமானம் அது, ஆனால் இவர் செல்வதோ, அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்ட பழைய காயலான் கடை விமானம். இருந்தும் தன்னை சுமந்து கொண்டிருக்கும் விமானம் பற்றி கவலை கொள்ளாமல் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்றெண்ணி அந்த அதிநவீன போர் விமானத்தை பின் தொடர்ந்து செல்கிறார்.

“ஆட மாட்டாதவள் மேடை கோணல்’ என்பது போல தன் விமானத்தை குறை ஏதும் கூறவில்லை. இது போன்ற வான் தாக்குதலில் விமானம் மட்டுமே வெற்றியை நிர்ணயிப்பதில்லை என்பதையும் நன்கு அறிந்த தலை சிறந்த இந்திய வான் படையின் அங்கத்தினர் அல்லவா??

இரு விமானங்களும் விண்ணில் பாய்ந்து சண்டையிட்ட வண்ணம் இருந்தது. இறுதியில் அவர் தனது பழைய விமானத்தை வைத்து, அந்த எதிரி நாட்டு அதி நவீன போர் விமானமான எப்-16ஐ வீழ்த்தினார். வெற்றிக்களிப்பில் புன்னகைத்து கொண்டிருந்த பொழுது தான் அதை அவர் உணர்ந்தார். அர்ஜுனனுக்கு எப்படி பறவையின் கண்கள் மட்டும் தெரிந்ததோ அது போல எதிரி விமானத்தை வீழ்த்துவதை மட்டும் குறியாக இருந்ததன் காரணமாக இப்பொழுது தான் இந்திய எல்லைக்குள் இருக்கிறோமா அல்லது எதிரி நாட்டினுள்ளா என்று சந்தேகம் எழத் துவங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரி நாட்டு ஏவுகணை ஒன்று இவரது விமானத்தை சுட்டு வீழ்த்தியது. ஐயோ! வாழ்க்கை முடிந்து விடுமோ என்று ஒரு மணித்துளியும் எண்ணாமல், துரிதமாக செயல்பட்டு தன் இருக்கையை விமானத்திலிருந்து வெளியே தள்ளச் செய்தார். பின், தனது பாராசூட் மூலமாக பத்திரமாக தரை இறங்கினார். அது பரவலாக மரங்கள் கொண்ட ஒரு மலைப் பிரதேசக் காடு.

இறங்கிய அவர், பாராசூட்டை விலக்கி அங்கிருந்த சில மனிதர்களை பார்த்தார்.

முதல் கேள்வி. இது இந்தியாவா பாகிஸ்தானா?

சற்றும் முற்றும் பார்த்த அந்த இளைஞன் தன்னை தான் வினவுகிறார் என்று புரிந்து, விடையளித்தான். இந்தியா தான்

பெருமூச்சு விட்டு அப்படியே மண்ணில் சாய்ந்தார். “எனது முதுகுத்தண்டு வலிக்கிறது. அடி பட்டிருக்கும் என்று நினைக்கிறன்.

பின் குடிக்க சிறிது நீர் கிடைக்குமா? என்று வினவியவரை திடுக்கிட வைத்தது அந்த முழக்கம். “பாகிஸ்தான் ஜிந்தாபாத்.”

ஆம், அவர் இறங்கிய இடம், எதிரி நாடு. ஒரு கூட்டமே அவரை தாக்க ஓடிவருவதை கண்ட அவர் மின்னல் வேகத்தில் எழுந்து ஓடினார். எங்கிருந்து தான் அவர் கையில் ஒரு துப்பாக்கி வந்ததோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். மேல் நோக்கி சுட்டார், கூட்டம் அவரை துரத்தியது, சுட்ட படியே ஓடினார். ஓடி அங்கு இருந்த நீர் நிலையில் விழுந்து எழுந்தார். அவசர அவசரமாக சில புவி வரைபடங்களை எடுத்துப் பார்த்தார்.

இருப்பினும், அவரது உடல் அவரது மனதை போன்று ஒத்துழைக்க வில்லை. கூட்டம் அவரை நெருங்கி தாக்க துவங்கியது. சராமாரியாக அடிகள் அவரது முகத்திலேயே விழத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் அங்கு பாகிஸ்தான் இராணுவம் வந்து சேர்ந்தது. அடிப்பட்டு பாதி மயக்கத்தில் இருந்த அவரை இழுத்து சென்றது. வண்டியில் ஏற்றியது.

இராணுவ கேம்ப்

கைகள் பின்னுக்கு கட்டப்பட்டு, கண்கள் வழியே ரத்தம் வழிய நின்று கொண்டிருந்தார். தங்களது ரகசியங்களை நோட்டம் விடக்கூடாது என்பதற்காக அவரின் கண்களை கட்டினார்கள் எதிரி நாட்டு வீரர்கள்.

“வகையாக பொறியில் மாட்டி கொண்டான்’ என்று சுற்றி இருந்தவர்கள் எள்ளி நகையாடிக் கொண்டிருந்தார்கள்.

தாம் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் நின்று கொண்டிருந்த அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

“உன் பெயர் என்ன?”

அப்பொழுது தான் அந்த சிங்கம் தன் வாய் திறந்து கம்பிரத்துடன் கர்ஜித்தது.

“என் பெயர் அபிநந்தன்! விங் கமாண்டர். எனது சர்வீஸ் என் 279321. நான் ஒரு விமானி, எனது மதம் ஹிந்து.”


இளங்கன்று பயமறியாது என்பது போன்று, பிடிபட்ட இடம் தன் எதிரி நாடென்று அறிந்தும் இவ்வளவு கம்பிரமாக, துணிச்சலாக பதிலளித்த அவரை காணும் போது பாகிஸ்தான் இராணுவ அதிகாரியே பெருமை கொண்டார் என்றால் அது மிகையாகாது.

“வேறு என்ன விவரம் தர முடியும்?”


“மன்னிக்க வேண்டும், இவை தான் நான் பகிர்ந்து கொள்ள கூடிய, வேண்டிய விஷயங்கள்.”


“நீ எந்த படைப் பிரிவை சார்ந்தவர்”


“அவைகளை நான் உங்களிடம் கூற இயலாது.”


பின் அபிநந்தன் கேள்வி கேட்க துவங்கினார்.


“நான் பாகிஸ்தான் இராணுவத்திடம் உள்ளேனா என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?”


அதற்கு அங்கிருந்த யாரும் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. அந்த நிசப்தமே அவருக்கு அதை உறுதி செய்தது.

ஆம், நான் பாகிஸ்தான் இராணுவத்திடம் தான் சிக்கியுள்ளேன் என்று மனதிற்குள் உறுதி செய்து கொண்டார்.

இந்த விசாரணையை தொலைபேசி மூலமாக பதிவு செய்து கொண்டிருந்த இராணுவ வீரர் அதை தன் தலைமையாளரிடம் கொடுத்தார்.

அவர் அதை பார்த்து விட்டு, சரி, இதை இந்தியாவிற்கு பகிர்ந்தால் நாம் யார் என்று அவருக்கு தெரியும் என்று ஆணையிட்டபடியே வெளியில் சென்றார்.

அடுத்த சில மணித்துளிகளில் சமூக வலைதளங்கள் முழுதிலும் அந்த சிங்கத்தின் கர்ஜனை தான் கேட்டு கொண்டிருந்தது.

இந்திய பிரதமர் அலுவலகமே பரபரவென சுழன்று கொண்டிருந்தது. முப்படை தளபதிகளின் கூட்டத்தை கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்ய ஆயத்தமானது. இருள் சூழும் நேரம், இரு பக்கமும் ஒரு வித பதற்றம் தொற்றி கொள்ள துவங்கியது. எங்கே மீண்டும் போர் தொடங்குமோ என்று பயந்த படியே இருந்தனர் மக்கள்.

இந்திய வீரர் ஒருவர் ரத்தமுடன் எதிரி நாட்டில் இருப்பதை கண்டு இந்தியாவே கொதித்தெழுந்தது.

இந்நேரம் அமைதியாக இருக்க வேண்டிய இந்திய ஊடகமோ வழக்கம் போல தங்கள் நாரதர் வேலையை துவங்கியது.

இந்திய அரசு கோழை என்றும், போர் ஒன்றே தீர்வு என்றும் மக்கள் பிரிந்து நின்று கருத்துகளை பகிர தொடங்கினர். ஊடகமும் அதன் பங்கிற்கு வன்முறை கூடாதென்று எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊத்தியது. எதிர்க்கட்சிகளும் இதுவே நேரம் என்று தன் விபரீத விளையாட்டை தொடங்கியிருந்தன.

இந்தியாவில் இந்த சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் போது இதை பற்றி எதுவுமே அறியாத அபிநந்தன் அங்கு பாகிஸ்தான் முகாமில் தன் காயங்களுக்கு முதலுதவி பெற்று கொண்டிருந்தார்.

முதலுதவி முடிந்ததும், மீண்டும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இம்முறை அவர் மரியாதையாக நடத்தப்பட்டார். இது அவருக்கு ஆச்சர்யத்தையே தந்தது, என்னவோ நடந்திருக்கிறது என்று மட்டும் உறுதியாக நம்பினார்!

“விங் கமாண்டர், நீங்கள் மரியாதையாக நடத்தப் படுகிறீர்கள் என்று நம்புகிறேன்?.”


“நிச்சயமாக. இந்த சூழலில் ஒரு இந்திய வீரர் எப்படி நடந்து கொள்வாரோ அதே போன்றே நீங்களும் என்னை நடத்துகிறீர்கள். நன்றி.”


“நீங்கள் இந்தியாவில் எந்த இடத்தை சார்ந்தவர்?”


“மன்னிக்கவும், இதை நான் கூறக் கூடாது. ஆனால் ஒன்று, நான் தென்னிந்தியாவை சேர்ந்தவன்.”


“நீங்கள் திருமணம் ஆனவரா?”


“ஆம்.”
தேனீர் அருந்தியபடியே பதிலளித்த அவரை அடுத்த கேள்வி சிறிது புன்முறுவலிட வைத்தது.


“இந்த தேனீர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?”


“ஹா ஹா, தேநீர் மிகவும் அருமை.”

 

துப்பாக்கி ஏந்தியிருக்கும் வீரர்கள் சூழ்ந்திருக்கும் போதும், இப்படி பதிலளிக்க ஒருவரால் முடியமா?

 

“சரி, இப்பொழுது விவரமான தகவலுக்கு வருவோம். நீங்கள் எந்த ரக விமானம் ஓட்டி வந்திர்கள்?”


“நான் இதுபற்றி ஏதும் கூற இயலாது,  ஆனால் நிச்சயம் நீங்கள் சேதமடைந்த அந்த விமானத்தை கண்டெடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.”


“உங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையென்ன?”


“மன்னிக்கவும், இதை நான் கூற இயலாது.”

இதை படம் பிடித்து முடித்ததும், இதை மக்கள் பார்வைக்கு வைக்கும் படி உத்தரவு பிறப்பித்து செல்கிறார் ஜெனரல்.

அபிநந்தனுக்கு புரிந்து போயிற்று. தன்னை நன்கு கவனித்து கொள்வதை, இந்திய அரசாங்கத்திற்கு தெரிவிக்கவே இந்த ஏற்பாடு என்று தெளிந்தார். இல்லையேல் விளைவுகள் மோசமாக இருக்க கூடும் என்ற நோக்கமே இவ்வாறு அவர்களை செய்ய தூண்டியிருக்கலாம் என்று எண்ணினார்.

இந்த பதிவு வலைத்தளங்களில் பவனி வந்ததும் தான் தாமாதம். இந்திய முழுவதும் அபிநந்தன் பற்றியே பேச்சு.

அவரது பேச்சிலே ஒரு வீரம் இருந்தது. இந்திய இராணுவத்தை சேர்ந்த ஒருவரை இவர்களால் என்ன செய்ய முடியும் என்று எள்ளி நகையாடுவது போன்றே அது இருந்தது. உண்மை தானே, அவர் ஏதும் தவறாக நடத்தப்பட்டால் கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்கும் நிலையில் இருந்து இந்தியா என்றோ மாறிவிட்டிருந்தது.

அவரது சொந்த விவரங்களை கேட்ட போது மிக தெளிவாக, அதே சமயம் தைரியமாக “அதை பற்றி கூற முடியாது” என்று திட்டவட்டமாக பதிலளித்திருந்தார்.

ஆனால் நமது இந்திய ஊடகங்கள், அதற்கு நேர் மாறாக, அவர் எந்த விவரத்தை மூடி மறைக்க போராடினாரோ அதை அணைத்து ஊடகங்களிலும் வெளியிட்டு அவரது முகத்தில் கரியை பூசிவிட்டனர்.

எதிரி நாட்டில், ஒரு கைதி போன்று இருக்கும் நிலையிலும், துப்பாக்கி கொண்ட கயவர்கள் சுற்றி இருந்த போதும், விவரம் தர மறுத்த கமாண்டர் எங்கே, அரை நொடியில் AC அறையில் உட்கார்ந்து கொண்டு தொண்டை கிழிய அவர் விவரத்தை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் எங்கே? வெட்கம்.

இதில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் சிலர். நல்ல வேளை, அவரது குடும்பமும் இராணுவ குடும்பம்; அவரது தந்தையும் ஒரு இராணுவ வீரர்!

இல்லையென்றால் அவரது முன்பும் ‘மைக்’ நீட்டி வெட்கமின்றி கேள்விகள் கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பார்கள். அதுமட்டுமா, காந்தகார் கடத்தலில் நடந்தது போலவே இவர்களையும் அரசாங்கத்திற்கு எதிராக தூண்டி அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுத்திருப்பார்கள்.

எதிரிகளுக்கு துணை போகும் இவர்களின் ஒரே எண்ணம், இந்தியா மண்டியிட வேண்டும். குள்ளநரிகள் ஊளையிட்டால் காட்டு சிங்கம் கேட்க வேண்டுமா என்ன? அதையே தான் இந்திய அரசாங்கமும் செய்தது.

தனது பூச்சாண்டி இந்தியாவிடம் பலிக்கவில்லை என்றதும் சிறிது தயங்க தான் செய்தது பாகிஸ்தான். இரவோடு இரவாக, கராச்சி, இஸ்லாமாபாத் மற்றும் வேறு சில முக்கிய நகரங்களை இராணுவத்தின் கீழ் கொண்டு வந்தது. ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்பது போல, பாகிஸ்தானின் அனைத்து விமான நிலையங்களும் தன் வான் வழித்தடத்தை முற்றிலுமாக மூடியது.

இருநாடுகளும் தம் போர் வீரர்களையும், ராணுவத் தளவாடங்காளையும் எல்லை கோட்டின் விளிம்பில் நிறுத்தி வைத்தனர். இரவு முழுவதும் இந்திய பிரதமர் அலுவலகம் தூங்கியபாடில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளிடம் கொண்ட நல்லுறவாலும், இந்தியாவின் போர், தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற காரணத்தினாலும், அனைத்து நாடுகளுமே இந்திய நாட்டின் பக்கமே சாதகமாக துனை நின்றது.

இந்திய பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் நல்வினைகளை வாரி வழங்கி கொண்டிருந்தது.

மறுநாள், சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி தர துவங்கியது. இதன் காரணமாக பாகிஸ்தான் தன் நிலையிலிருந்து இறங்கி வருவது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்தது. இந்தியா தன் ராணுவத்தை காஷ்மீரிலிருந்து விலக்கினால், இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிப்பதாக கூறியது பாகிஸ்தான்.

தீவிரவாதிகளையும் மக்கள் செல்வங்களையும் முன்னிறுத்தி கொண்டு கோழையாக பின்னாலிருந்து தாக்கும் பாகிஸ்தானிற்கே அவ்வளவு துணிவிருந்தால், நெஞ்சு நிமிர்ந்து, நேருக்கு நேர், அந்த மக்கள் செல்வங்களை காக்கும் இந்தியாவிற்கு எத்தனை துணிவிருக்கும்?

பிரதமர் செய்ததும் அதுவே! திறமை வாய்ந்த முப்படை தளபதிகளிடம் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை விடுத்து அவர்களுக்கு முழு சுதந்திரம் தந்து வாழ்த்தினார்.

சுருக்கமாக நம்ப ஸ்டைலில் சொல்லவேண்டுமானால்,

பாகிஸ்தான் : நோ வார். போர் வேண்டாம். இராணுவத்தை மட்டும் விலக சொல்லு. டீலா, நோ டீலா?

இந்தியா : ஒன்னும் முடியாது. நோ டீல். 

இது நடந்து சில மணித்துளிகளுக்கு பின்னர், பாகிஸ்தான் பிரதமர் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தார்.

கத்தி இல்லை! இரத்தம் இல்லை! ஒரு போர் நடந்து முடிந்தது. அதில் நமக்கு வெற்றியும் கிடைத்தது. சர்வதேச நாடுகளிடம் இருந்து வந்த அழுத்தத்தால் பாகிஸ்தான் அவரை மேலும் நிறுத்தி வைக்க முடியாமல் போனது.

இந்திய பிரதமர் அவ்வப்போது விமானம் ஏறி பல நாடுகளுக்கு செல்கிறார் என்று குற்றம் வைத்த அரைவேக்காடுகளுக்கு தெரிய நியாயமில்லை தான். அவரை அவ்வாறு சென்ற சுற்றுப்பயணத்தாலேயே இன்று உலக நாடுகள் அனைத்தும் நம் துனை.

இப்படி தனிமை படுத்தப்பட்ட பின், பாகிஸ்தான் தான் என்ன செய்யும், பாவம். வேறு வழியின்றி சரணடைந்தது. ஆனால் இந்தியப் பிரதமர் எனும் தனி ஒருவரின் மீதுள்ள வெறுப்பால் இந்தியாவையே எதிர்க்க துணிந்த, இந்தியாவில் இருந்த பல கயவர்களை அறிய செய்தது இந்த சர்சை என்றால் அது உண்மையே.

அதனாலேயே இந்தியாவிற்கு பயந்து வேறு வழியின்றி சரணடைந்த பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி கூறி கொண்டு திரிகிறார்கள் சிலர். இருக்கட்டும்.

இந்த கூத்து முடியும் முன்னே, வேறு ஒரு கூத்தும் அரங்கேற துவங்கியது. முப்படை தளபதிகளும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை தான் அது. பாகிஸ்தான் விமானம் ஏவிய ஏவுகணையின் சேதமடைந்த பாகத்தினை மக்கள் பார்வைமுன் வைத்தனர்.

இது வரை, மீசையில் மண் ஒட்டவில்லை என்று சுற்றி திரிந்து கொண்டிருந்த பாகிஸ்தான் வசமாக மாட்டி விழிபிதுங்கி நின்றது. அதி நவீன போர் விமானமான எப்16ஐ அமெரிக்கா தந்த போதும் அதை கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பாகிஸ்தான் பயன்படுத்த முடியும். மேலும், அமெரிக்காவின் அனுமதியின்றி அதை இயக்கவும் கூடாது.

திருடனுக்கு தேள் கொட்டியது போன்று கலங்கி நிற்கிறது அந்நாடு. சரி, அது நமக்கெதற்கு?

ஒவ்வொரு இராணுவ வீரரும் பெருமை கொள்வார்கள். தனக்கு ஒரு தீங்கென்றால் இந்திய அரசாங்கம் எதற்கும் துணிந்து நிற்கும் என்று பெருமையுடன் செயல்படுவார்கள்.

 

இதோ சில மணித்துளிகள் தான். வீரன் வருகிறான்!!!

நமது வீரத் தலைமகன் இன்று திரும்பி வருகிறான். தன் தாய்நாட்டு மண் மீது மீண்டும் கால் பதிக்க பெருமையுடன் வருகிறான். தனி ஒருவனாக எதிரி நாட்டுக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டி வருகிறான்.

அவர் தனி மனிதரில்லை, நூற்றி முப்பது கோடி மக்களும் அவருடன் இருக்கிறோம் என்று உணர்த்த வேண்டும்.

இந்த நன்னாளில் வெள்ளி திரை கதாநாயகனை வாழ்த்தி மகிழும் நீங்கள், இந்த நிஜ வாழ்க்கை கதாநாயகனையும் வாழ்த்தலாமே?

 

ஜெய்ஹிந்த்!!!

மகேஷ்

குறிப்பு: இந்த பதிவு உண்மை சம்பவங்களையும், பத்திரிக்கை வெளியிட்ட துணுக்குகளையும் கொண்டு கோர்த்து எழுதப்பட்டது.

One Reply to “அபிநந்தன் எனும் நான்..”

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.