
(முதலில் இதைப் படிக்கவும்: இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் நடந்தது என்ன? – பாகம் 1)
நான் இந்தியர்களை வெறுக்கிறேன். அவர்கள் மிருகத்தனமான மதத்தை கொண்ட மிருகத்தனமான மக்கள். அங்கே பஞ்சம் ஏற்பட காரணம் அவர்கள் முயல்களை போல் இனப்பெருக்கம் செய்வதே ஆகும் — வின்ஸ்டன் சர்ச்சில்
இங்கிலாந்து பிரதமர் (1940-45)
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷார் மற்றும் அதன் கூட்டாளிகளின் (allies) வெற்றியில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பாகம் ஒன்றில் பார்த்தோம். அந்தப் போரின் போது இந்தியாவிற்கு கிடைத்த சொல்லொணா துயரங்களில் முக்கியமானது, 1943ல் செயற்கையாக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட வங்காளப் பஞ்சம் ஆகும். கிட்டத்தட்ட 30 லட்சம் பேரின் உயிரைக் குடித்த இந்தப் பஞ்சத்தைக் குறித்து நமது பாடத்திட்டங்களில் அதிகம் இல்லை. அதைப் பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும். அதன் காரணிகள், விளைவுகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
வங்காளப் பஞ்சம் 1943 காரணிகள்
மழைக்காலம் பொய்த்ததினால் அந்த பஞ்சம் உண்டாகவில்லை மழைப்பொழிவு வழக்கத்தை விட அந்த வருடம் அதிகமாகவே இருந்தது ஆங்கிலேயே அரசின் தவறான கொள்கை முடிவுகள் மற்றும் அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட பேரழிவு அது.
மியான்மர் (அப்போதைய பர்மா) ஜப்பானியர்களிடம் வீழ்ச்சி அடைந்த போது அங்கிருந்து வந்து கொண்டிருந்த அரிசியின் இறக்குமதி தடைபட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு கொண்டிருந்தன இதன் மூலம் இந்தியாவில் பஞ்சம் ஏற்படும் என்று பலமுறை இந்தியாவின் வைசிராய் லண்டனை எச்சரித்த போதும் இங்கிலாந்து அரசாங்கம் அதனைப் புறக்கணித்தது.
இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு படி மேலே போய் அவ்வளவு பஞ்சம் இருப்பது உண்மையானால் காந்தி ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
ஜப்பானியர்கள் எந்நேரமும் வங்காளத்திற்குள் ஊடுருவலாம் என்ற பயத்தில் வங்காளத்திற்கு சென்ற கப்பல்களில் இருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் ஆங்கில அரசாங்கம் பறிமுதல் செய்தது. ஆங்கில ஆட்சியின் கீழ் வங்காளம் பலமுறை (1770, 1773, 1783, 1866, 1892, 1897, 1943- 44) பஞ்சத்தை சந்தித்திருக்கிறது.
இதற்குமுன் பஞ்சம் வந்த போதெல்லாம் அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த உள்ளூர் அரசர்கள் விரைவாக நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்தியும், உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தும் பஞ்சம் தீவிரம் அடையாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் முதன்முறையாக மழைக்காலம் பொய்க்காமல் உள்ளூர் தானிய உற்பத்தியில் குறைவு ஏற்படாமல் முழுக்க முழுக்க உலகப்போரின் காரணமாகவும், இந்தியர்களின் உயிர்களின் மேல் கொண்டிருந்த தீவிர அலட்சிய போக்கினாலும் ஆங்கிலேயே அரசாங்கம் உணவுப் பொருட்களை வேறு நாடுகளுக்கு திருப்பிவிட்டதோடு அல்லாமல் வங்காளத்திற்கு வந்த உணவு பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தது.
வங்காளப் பஞ்சம் விளைவுகள்
சாலைகளில் மக்கள் இறந்து விழுந்ததை உலகப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டிய போது கூட ஆங்கிலேயே அரசாங்கம் கொஞ்சமும் அசரவில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கப்பல்களில் உணவுப்பொருட்கள் அனுப்பி வைப்பதாக உதவிக்கரம் நீட்டிய போது கூட அதை அவமானமாக கருதி ஆங்கிலேய அரசாங்கம் தடுத்து விட்டது. ஒன்றல்ல இரண்டல்ல 30 லட்சம் பேரின் உயிரை அந்த பஞ்சம் குடித்தது. மக்கள் எலும்புக்கூடுகளைப் போல சாலைகளில் திரியும் புகைப்படங்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இவ்வளவு பெரிய பஞ்சத்திற்கு காரணமாய் இருந்தும்கூட அதற்கு காரணம் முழுக்க முழுக்க உலகப்போர் என்பது போலவும், ஆங்கிலேய அரசின் தவறான கொள்கை முடிவுகள் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்பது போலவும் அவர்கள் இதை மூடிமறைக்க பார்த்தனர். பஞ்சம் முடிந்து ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஆராய்ச்சிகள் பஞ்சம் முழுவதும் தவிர்த்திருக்கக் கூடிய ஒன்றே என்றும், ஆங்கிலேய அரசின் மெத்தனப் போக்கே இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.
(This article was originally published by @momsaffron at the Simplified History blog and is republished here with permission)