
இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு உலக அளவில் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டு, ஒதுக்கி விடப்படுகிறது. ஏன், இந்தியாவில் கூட அதைப்பற்றிய விழிப்புணர்வோ, தகவல்களோ மிகக் குறைவு. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விவரிக்கும் பள்ளிப் பாடத்திட்டங்கள் கூட, இரண்டாம் உலகப் போரை சில வரிகளில் கடந்து விடுகின்றன.
இந்தியாவிற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஒரு போரில், நம் நாட்டு இராணுவ வீரர்கள் 85,000 பேர் உயிரிழந்தனர் என்பது பலருக்கு ஆச்சர்யமான செய்தியாக இருக்கலாம். நம்மை அடிமைப் படுத்தி ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்தியன் பிரிட்டிஷ் ஆர்மியில் சேர்ந்து (சில சமயங்களில் வற்புறுத்தப்பட்டு அல்லது பிழைக்க வேறு வழியின்றி) ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளை எதிர்த்து சண்டையிட்டு கொண்டிருந்த நம் நாட்டிற்கு பிரிட்டிஷ் பரிசளித்தது என்ன தெரியுமா? வங்காளத்திலும் இன்னும் சில மாகாணங்களிலும், செயற்கையாக, மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கொடிய பஞ்சம். 30 லட்சம் பேரின் உயிரைக் குடித்த பஞ்சம்.
இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. அவற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
இரண்டாம் உலகப் போர்
1939ல் பிரிட்டிஷ் மற்றும் அதன் கூட்டாளிகள் (Allied), நாஜி (Nazi) ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு (Axis) எதிராக போர் அறிவித்தனர். இந்தியாவில் அப்போது தேர்தல் வைத்து, தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த எந்த உள்ளூர் அரசாங்கத்திடமும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இந்தியாவும் போரில் ஈடுபடுவதாக பிரிட்டிஷார் அறிவித்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். நாஜி ஜெர்மனியை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் ஆனால் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்காமல் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ போர் புரிய முடியாது என்பது அவர்கள் நிலையாக இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் விடுதலை தர மறுத்து விட்டது. இந்தியன் முஸ்லீம் லீக் பிரிட்டிஷாரின் போர் முயற்சிகளை ஆதரித்தனர்.
இந்தியாவின் இயற்கை வளங்களும், மனித வளங்களும் ஆங்கிலேயருக்கு போர் சமயத்தில் மிகவும் தேவையாய் இருந்தது. பிரிட்டிஷ் இந்தியன் இராணுவத்தில் ஆள் சேர்ப்பு தீவிரமாய் இருந்தது. தன்னார்வலர் சேர்ப்பு என்று பெரியரளவில் இருந்தாலும், பல மோசமான யுக்திகளையும் கையாண்டு ஆள் சேர்த்தார்கள். முஸ்லீம் லீக் தாராளமாகவே ஆட்களை சேர சொன்னார்கள். போரின் முன்பு இரண்டு லட்சமாய் இருந்த இராணுவ வீரர்கள் எண்ணிக்கை, 1940ல் பத்து லட்சமாய் உயர்ந்து 1945ல் (போரின் முடிவில்) 25 லட்சம் வரை உயர்ந்தது.
முன்னாள் காங்கிரஸ் தலைவராயிருந்த சுபாஷ் சந்திர போஸ், ஜப்பான், ஜெர்மனிக்கு ஆதரவளித்து அவர்கள் மூலம் பிரிட்டிஷாரை தோற்கடிக்க எண்ணினார். இந்தியாவிற்கு அதன் சொந்த உரிமைகளை மறுத்து காலனி நாடாக வைத்திருக்கும் பிரிட்டிஷ், ஜெர்மனியின் நாசிசம் பற்றி பேசுவது பெரும் பாசாங்குத்தனம் என்றார். ஜப்பானியர்களிடம் உதவி கேட்டு சென்ற அவரிடம், சிங்கப்பூரில் பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மியில் சேர்ந்து சண்டையிட்டு, தோல்வியடைந்து ஜப்பானியர்களிடம் சரணடைந்த இந்தியப் போர்க் கைதிகள் அவர்களின் விருப்பத்துடன் ஒப்படைக்கப்பட்டனர். (கிட்டத்தட்ட 30,000 பேர்) அவர்களை உள்ளடக்கி உருவானது தான் இந்தியன் நேஷனல் ஆர்மி (INA)
1942ல் இந்திய தேசிய காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கியது . விடுதலை கிடைக்கும் வரை ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று போராடினர். அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு 1945 வரை வெளியே விடப்படவில்லை. 60,000க்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியன் முஸ்லீம் ‘லீக் வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை நிராகரித்தது. பிரிட்டிஷாருக்கு ஆதரவளித்தது.
இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்களிப்பு
ஆங்கிலேயர்களின் படை நிலைமை மிக மோசமாய் இருந்தது. ஜெர்மனியர்களிடம் கேவலமாகத் தோற்றுக் கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மி, ஜெர்மனியர்களை எதிர்த்து ஆப்பிரிக்காவில் வீரமாக சண்டையிட்டது. ஜப்பானியர்கள் படையெடுத்து வந்த போது அவர்களை பர்மாவிலும், மலேசியா, சிங்கப்பூரிலும் எதிர்த்து போராடியது. அச்சமயங்களில் ஜப்பானியர்களைக் கண்டதும் ஆங்கிலேயர்கள் பயந்து, தப்பித்து இந்தியாவிற்கு வந்து, நம்முடைய வீரர்களை சண்டையிட அனுப்புவார்களாம். (மலேயாவும் பிரிட்டிஷாரின் காலனி நாடுகளில் ஒன்று)
ஜப்பானியர்கள் பர்மாவைக் (தற்போதைய மியான்மர்) கைப்பற்றி, அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் கைப்பற்றினர். இந்தியாவிற்குள் அவர்கள் ஊடுருவிய போது (தற்போதைய மணிப்பூர், அசாம், 1944) பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மி மிகக் கடுமையாக சண்டையிட்டு அவர்களை தோற்கடித்து பர்மாவிற்குள் மிகுந்த சேதாரங்களுடன் விரட்டியடித்தது.
பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மி எதிர்த்து சண்டையிட்டது ஜப்பானியப் படைகளை மட்டுமல்ல, சுபாஷ் சந்திர போஸின் இந்தியன் நேஷனல் ஆர்மி (INA) யின் படைகளையும் சேர்த்து தான் என்பது உபரி செய்தி. இது Battle of Kohima and Imphal என அழைக்கப்படுகிறது. உலக வரலாற்றின் ராணுவப் போர்களில் மிகக் கடுமையான போர்களில் (battle) ஒன்றாகவும், ஜப்பானியர்களால் தங்களுடைய மிகப் பெரிய தோல்வியாகவும் இது கருதப்படுகிறது.
பிரிட்டிஷ் இந்தியன் ஆர்மியில் மோசமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இரண்டாம் உலகப்போரில் கிட்டத்தட்ட 85,000 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியாவின் உதவியின்றி பிரிட்டிஷாரால் கண்டிப்பாக போரில் தாக்குப்பிடித்திருக்க முடியாது. 1945ல் Allied படைகள் ஜெர்மனிக்குள் நுழைந்து ஜெர்மனியைக் கைப்பற்றியன. 1945ல் ஜப்பான் இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு சரணடைந்தது.
இராணுவ வீரர்கள் தவிர, இந்தியாவில் ஒன்றரை கோடி பேர், போர் சம்பந்தமான தொழிற்சாலைகளில் இரவும் பகலுமாக உழைத்துக் கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து கரி, மரம், பருத்தி, உணவு, இரும்பு, சிமெண்ட், தோல் பொருட்கள் உற்பத்தியில் பெரும்பாலானவை போர்த் தேவைகளுக்காக (வலுக்கட்டாயமாக) அனுப்பி வைக்கப் பட்டன.
இவ்வளவு வளத்தையும் சுரண்டி உபயோகப்படுத்திக் கொண்டு, இந்நாட்டு மக்களையே பட்டினி போட்டு லட்சக்கணக்கில் சாகடித்த பெருமையும் ஆங்கிலேயரையே சாரும். கேட்டால் இரத்தம் கொதிக்கும் அந்த விவரங்கள் பாகம் இரண்டில்.
(This article was originally published by @momsaffron at the Simplified History blog and is republished here with permission)