
காதலிச்சிக்கிட்டிருக்க பசங்களக் கேட்டுப்பாருங்களேன் – எனக்கு அந்த மாதிரி ஒண்ணும் கெடயாது ப்ரோ. இவனுங்கதான் சும்மா இல்லாம மச்சி அந்தப் பொண்ணு ஒன்னத்தாண்டா பாக்குதுன்னு உசுப்பேத்தியே அப்புறம் ஒரு மாதிரி லவ் வந்துடுச்சு. இப்படித்தான் பல பேர் சொல்வாங்க. இதெல்லாம் சும்மாங்க, இது உண்மைன்னா நல்லா இல்லாத ஒரு பொண்ணைப்பாத்து உசுப்பேத்தி விட்டா இந்தப் பசங்க லவ் பண்ணுவாங்களா?ன்னு கேட்டுடாதீங்க. குமார்னு எனக்கு ஒரு நண்பன். ஒரு நாள் எல்லாரையும் டீக்கடைக்குக் கூப்பிட்டுப் போயி ஒரு டீ, ரெண்டு பட்டர் பிஸ்கட், வேணுங்கறவங்களுக்கு ஒரு வில்ஸ் ஃப்ளேக் சிகரெட்னு ட்ரீட் குடுத்தான் ( எங்க நிலைமைக்கு இதான் ப்ரோ ட்ரீட், இது நடந்தது 90களில்). ஒரு வாரம் கழிச்சு ரொம்ப சோகமா திரிஞ்சான். அப்புறம்தான் தெரிஞ்சது கூட இருந்த ரெண்டு பசங்களோட வெஷமத்தனம். பஸ்ஸிலே போகும்போது ஒரு பொண்ணை இவனையே பாக்குமாம், கூட இருந்தவனுங்க உசுப்பேத்தி விட்டு ஒரு மாதிரி செட் ஆயிடுச்சி. ட்ரீட் முடிஞ்சவுடனே காரித் துப்பியிருக்கானுங்க உன்னோட மூஞ்சிக்கு இவ்வளவுதான் கிடைக்கும்னு.
இதை அப்படியே வெச்சிட்டு இன்னொரு விஷயத்தைப் பாப்போம். என்னுடன் வேலை பார்ப்பவர் நடராஜன். நல்ல மனுஷன்தான். ஒரே ஒரு குணம். பண்டிகை, பிறந்த நாள்னு புத்தாடை போட்டுட்டுப் போனா வேலை மெனக்கெட்டு “ என்னங்க நல்ல நாளும் அதுவுமா பழைய ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு வந்திருக்கீங்க?”ன்னு கேப்பாரு. மொதல்ல அவருக்குத் தெரியாம கேக்கறார் போலிருக்குன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது சாதாரண நாளிலே கூட புதுத்துணி போட்டுட்டு சட்டை காலரிலே மஞ்சள் வெச்சிட்டுப் போனா தவறாம கேப்பாரு. மத்த நாளிலே ஒண்ணுமே வாயத் தொறக்க மாட்டாரு.
நம்ம பசங்களையே எடுத்துக்கோங்களேன். மச்சி நீ அப்படியே தல மாதிரி இருக்கே, தளபதி இருக்கே, ஹீரோ மாதிரி இருக்கேன்னு சொல்லட்டும், தலைகால் புரியாது. யாருமே சொல்லலைன்னா? அது மட்டுமில்லை. தினமும் யாராவது சொல்லிட்டே இருக்கணும்,
இதாங்க நம்முடைய பிரச்சினையே. நாம எப்படி இருக்கோங்கறதை அடுத்தவங்களோட கருத்திலே வெச்சிருக்கோம். தமிழ் மொழி பழமை வாய்ந்த மொழி. ஆமாம், இதை யாரும் மறுக்க முடியாது. உலக அளவில் செம்மொழிகளாக தமிழ், சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ மற்றும் சீனம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்டவை. நமக்குத்தான் இது போதாதே? இந்திய அரசும் இதை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று போராடி தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது, உடனே இதை ஒரு பெரிய சாதனையாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்தோம் என்று ஒரே அலப்பறை,
ஆனால் உண்மையில் நடந்தது என்ன? உலகளவில் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழை இவர்களது அரசியல் ஆதாயத்துக்காக இந்திய அளவில் செம்மொழியாகக் குறுக்கப்போக, மலையாளம், கன்னடம், தெலுங்கு இவைகளும் செம்மொழி அந்தஸ்து பெற்று விட்டன. போகிற போக்கில் சி++, ஜாவா இவையெல்லாம் கூட செம்மொழி அந்தஸ்து பெறலாம்.
தமிழுக்கே நான் சோறு போடுகிறேன் என்று ஒரு கவிஞர் பேசுகிறார். இவர்தான் தமிழை வைத்து சோறு தின்கிறார். என்னவோ இவர் சோறு போட்டுத்தான் தமிழ் வளர்ந்தது போலப் பொய்யுரை. கவிதைக்குப் பொய் அழகு. கவிஞருக்குமா?
கீழடியில் கிடைத்ததை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு கும்மியாட்டம். என்னவோ கீழடியே அவரவர் கட்சியினர்தான் கண்டுபிடித்தது போலவும் இவர்கள் கட்சியினர் மட்டும்தான் கீழடி மக்கள் போலவும். கூடவே கீழடியில் கடவுள் இல்லை, ஆகவே தமிழன் ஹிந்து இல்லை என்று தினம் ஒரு அறிவிப்பு. பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் சட்டை பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்த பெண்ணின் தாத்தா பாக்கெட்டில் பீடி சிகரெட் எதுவும் இல்லை, ஆகவே மாப்பிள்ளைக்கு புகை பழக்கம் கிடையாது என்று பெருமையாகக் கூறினாராம், அது போல இருக்கிறது கீழடி ஆராய்ச்சி பற்றிய தறுதலைகளின் அறிக்கைகள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் — ஐ நா சபையில் பிரதமர் மோடி அவர்கள் கணியன் பூங்குன்றனாரின் பெயரையும் அவர் எழுதியதையும் தவறில்லாமல் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஒரு புறம் பார்த்தாயா ஒடன்பிறப்பே தமிழன் பெருமை என்று கூறிவிட்டு இதனைச் சொன்னது மோடியாச்சே அதனால் பாராட்ட முடியாதே. ஆகையால் இதற்கு முன்னாலேயே அப்துல் கலாம் அவர்கள் பேசி விட்டார்கள் என்றும் இது போதாது, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று இன்னொரு புறமும் கோஷம். முதலில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால் அர்த்தம் என்னவென்று தெரியுமா? எல்லாமே எனது ஊர், எல்லோரும் எனது சுற்றம் – ஆனால் இதைச் சொன்ன தமிழ் மண்ணில்தான் இவர்ன் மலையாளி, இவன் கன்னடன், இவன் ஆரிய வந்தேறி, இவன் மராட்டியன் என்றெல்லாம் துவேஷம். தாய் நாட்டின் பிற மாநிலத்தவரைத் தூற்றும் இதே மண்தான் வெளிநாட்டிலிருந்து வந்து மதமாற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறது.
கால்டுவெல், ஜி யி போப், கான்ஸ்டான்ஷியுஸ் ஜோஸப் பெஸ்கி இவர்கள் தமிழைப் போற்றினால் உடனே புளகாங்கிதம் அடைந்து அவர்களுக்குப் பாத பூஜை செய்வோம், ஆனால் நம் நாட்டவர்களான தருண் விஜயும் மோடியும் தமிழுக்கு சேவை செய்தால் அதனை ஏற்க மாட்டோம். அப்படித்தானே? இந்த அடிமை மனோபாவம் அறுவெறுப்பை உண்டாக்குகிறது. அது சரி, வீட்டிலே வேலைக்காரியுடன் கூட ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும், தமிழிலே பேசக்கூடாது, தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவரின் வழிவந்தவர்களிடம் இத்தகைய அடிமை மனப்பாங்கைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
இதை வேறு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம். பில் கேட்ஸ். உலகத்திலேயே பெரிய பணக்காரர். இவருடைய செக்ரட்டரி ஒரு நாள் காலையில் வந்து “ சார், நீங்கதான் உலகத்திலேயே பெரிய பணக்காரர் என்று டைம்ஸ் பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது” என்று சொன்னால் பில் கேட்ஸின் பதில் என்னவாக இருக்கும்? “ இதைச் சொல்லத்தான் வந்தியா? வேற வேலையே இல்லையா உனக்கு? “ என்று துரத்தி அடித்திருப்பார். ஏனென்றால் அவர் பணக்காரர் என்பது அவருக்குத் தெரியும், அதில் அவருக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது.
ஆக ஒரு விஷயத்தில் உங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமானால் அதனைப் பிறர் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இங்கே என்ன நடக்கிறது? தமிழைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் தமிழின் பெயரால் வயிறு வளர்க்கவும் ஓட்டு வாங்கவும் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதனால் உண்மையாகவே தமிழுக்குத் தொண்டு செய்பவர்களைக் கண்டால் எங்க நம்முடைய வேஷம் கலைந்து விடுமோ, பிழைப்பில் மண் விழுந்து விடுமோ என்று எரிச்சல் வருவதில் ஆச்சரியம் இல்லையே?
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று கோஷமிட்டால் தமிழ் வளருமா? தங்கள் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்குங்கள், தங்கள் நிறுவனங்களுக்குத் தமிழிலே பெயர் வைக்கலாம் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழிலே பெயர் வைக்கலாம், ஆனால் இதையெல்லாம் செய்யமாட்டோம். கூடுமானவரை ஆங்கிலத்திலேயே பேசுவோம், தமிழைப் புறக்கணிப்போம். இதுதான் எங்களது மொழிக் கொள்கை. இத்தகைய கும்பலிடையே தமிழை வளர்ப்பவர்களைக் கண்டால் பொறாமை எழுவது சகஜம்தானே?
வெற்று கோஷங்களில் மயங்கியே தமிழ் மொழியைப் பாதாளத்திலே தள்ளிக் கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியப் போவதில்லை. அதற்கடுத்த தலைமுறைக்கு தமிழ் பேசத் தெரியப் போவதில்லை. அப்புறம்? அப்புறம் என்ன? Lets do our business.
ஸ்ரீஅருண்குமார்